தென்றல் பேசுகிறது...
பெருங்குற்றம் நடந்துள்ளபோது, குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் நபரின் வாயின் உட்புறமிருந்து வழித்தெடுத்ததில் DNA பரிசோதனை செய்து, அதைக் குற்றம் நடந்த இடத்தின் DNAவோடு ஒப்பிடுவது ஒரு நல்ல தடவியல் முறை. புதிய அறிவியல் முன்னேற்றமும் கூட. எந்தக் குற்றத்துக்காக ஒருவரது மரபணுப் பரிசோதனை செய்யப்பட்டதோ, அதில் அவர் தொடர்புடையவரல்ல என்றாலும், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பழங்குற்றம் ஒன்றில் அவர் குற்றவாளி என்பது கண்டறியப்பட்டுத் தண்டனை வழங்கப்படுவது நடக்கிறது. ஆனால் நான்காவது சட்டத் திருத்தத்தின்படி, ஒருவர் ஒரு குற்றத்துக்காகச் சந்தேகிக்கப்படாத நிலையில் ஒரு கைதியின் மரபணு தடயத்தை எடுப்பது ஏற்புடையதல்ல. இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது, அவருக்குத் தேவையற்ற அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்ற வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் இத்தகைய மரபணுப் பரிசோதனை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் இதனால் தீரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1979ம் ஆண்டு நடந்த ஒரு வன்முறைச் சம்பவத்தின் குற்றவாளி யாரென்பதை 2004ல் கண்டுபிடிக்கப்பட்டதென்பதை இந்த இதழில் பிரபல பிரேத பரிசோதகர் டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன் விளக்குவதை நீங்கள் படிக்கலாம்.

*****


"நான் காதலிக்கும் ஆண்மகனோடு 32 ஆண்டுக் கால வாழ்க்கையை இப்போது கொண்டாடுகிறேன். என் இரண்டு குழந்தைகளுக்கும் அவர் மற்றொரு தந்தை. இதைச் சாத்தியமாக்கியவர்களுக்கு எனது நன்றி" என்று ஒரு வாசகர் நியூ யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். எழுதியவரும் ஒரு ஆண்மகனே. அவர் நன்றி கூறியிருப்பது எதற்கென்றால், மற்றொரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில் அமெரிக்க உச்சநீதி மன்றம் ஒருபாலினத் திருமணம் சட்டபூர்வமானதே என்று கூறியிருப்பதுடன், இந்தத் திருமணத்திலும் இருவருக்கும் எல்லாப் பாதுகாப்பு உரிமைகளையும் மாகாண அரசுகள் தரவேண்டும் என்று கூறியுள்ளது. ஒருபாலினத் திருமணத்தை அங்கீகரிக்காத கலிஃபோர்னியா மாகாணமும் இந்தத் தீர்ப்பின் காரணமாக அதை அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

*****


சுமத்ராவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சிங்கப்பூரில் கண்ணை மறைக்கும் புகைமண்டலம்; பத்ரிநாத்தில் ஏற்பட்ட திடீர் மழையால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு, பொருட்சேதம்; அமெரிக்காவில், ஐரோப்பாவில் பல இடங்களில் வெள்ளத்தால் பெரும் சேதம் என்று அடுக்கடுக்காக நெஞ்சைக் கலக்கும் செய்திகள். தனது சுற்றுச்சூழலை மதிக்காமல் மனிதன் செய்யும் சுயநலமான நாசகாரச் செயல்கள்தாம் பெரும்பாலும் இவற்றுக்குக் காரணமாக இருக்கின்றன. 'தர்மத்தை யார் காக்கிறார்களோ, அவர்களை தர்மம் காக்கும்' என்று பெரியோர் கூறிச் சென்றனர். இயற்கையும் அப்படித்தான். நாம் அதன் முகத்தைக் குரூரமாக்கினால், நம்மை அது பாழடிக்கிறது. இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளாத நாடுகள் பெரும் செலவில் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. விரைவாகக் கற்பது எல்லோருக்கும் நல்லது.

*****


சென்ற இதழில் வெளியான '77வது திருமண நாளன்று' என்ற கட்டுரையை வாசித்துவிட்டு, "திரு. N.S. ராமச்சந்திரன், என் தாத்தாவுக்கும் என் தந்தையாருக்கும் ஆசிரியராக இருந்தவர். அவரோடு தொடர்பு கொள்ள விரும்புகிறேன்" என்று வாசகர் மேரி ஆக்னஸ் கவிதா எங்களுக்கு எழுதினார். தமிழருக்குப் பாலமாக அமைவதும் தென்றலின் நோக்கங்களில் ஒன்று என்ற முறையில் அது எமக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது.

மிகவும் மாறுபட்டவர் டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன். மரணித்த உடல்களின் மொழியை அறிந்தவர். அதைக் கொண்டு மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை நிறுவ உதவுகிறவர். இதில் இவரது உயர்ந்த நிபுணத்துவம் மிகப் பிரபலமான வழக்குகளில் பயன்பட்டதுண்டு. பலதுறை மருத்துவத் தகுதிகளைக் கொண்ட இவரது நேர்காணல் ஒரு திரில்லர் போலச் சுவையானது. அடுத்த நேர்காணலும், மிகவும் மாறுபட்ட மருத்துவ, உடல்நலக் கருத்துக்களைப் பேசி, அதற்குப் பேராதரவும் பெற்று வரும் ஹீலர் பாஸ்கருடனானது. ஒருவகையில் பாரம்பரிய இந்தியக் கருத்துக்களை அவர் மறுக்கமுடியாத வாதிடும் திறனோடு சொல்வதாகத் தெரிகிறது. படித்துவிட்டுச் சொல்லுங்கள். பிற வழக்கமான அம்சங்களும் உண்டு.

வாசகர்களுக்கு குருபூர்ணிமை, ரம்ஜான் மற்றும் அமெரிக்க சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.

ஆசிரியர் குழு

ஜூலை 2013

© TamilOnline.com