கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா
ஏப்ரல் 27, 2013 அன்று கலைமகள் தமிழ்ப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா ஷ்ரூஸ்பரியில் (மாசசூசெட்ஸ்) நடைபெற்றது. இந்தப் பள்ளி கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர். தலைமை ஆசிரியர் தேவி சுந்தரேசன் வரவேற்புரை ஆற்றினார். முதலில் வந்த 'அழகு' நாடகம், அழகு முகத்தில் இல்லை, அகத்தில்தான் என்பதை அழகாகத் தெளிவுபடுத்தியது. பின்னர் வந்த 'புதருக்குள் யார்?' நாடகம், தமிழ்ப் பாடல் அருமை. சிறுவர், சிறுமிகள் பழமொழிகளைக் கூறியதோடு, அவை எக்காலத்திற்கும் ஏற்ற மொழிகள் என்பதை உணர்த்த அவற்றுக்கு ஈடான ஆங்கிலச் சொற்றடர்களைக் கூறினர். 'சிரிக்கலாம் வாங்க' நாடகமும், தமிழ்ப் பாடலும் நன்றாக இருந்தன.

'சங்கே முழங்கு' பாடலுக்குச் சிறுமியரின் நடனம் வெகு அழகு. தமிழ்ப் புலவர்களின் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சியும் சிறப்பு. வினாடி வினாவில் பார்வையாளர்களையும் பங்கு பெறச் செய்ததால் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடைசியில் வந்த 'கார்' நாடகம், முடிவில் ஒரு சிறு திருப்பத்துடன் நன்றாக இருந்தது. இதன் கதை தென்றல் இதழில் வந்த ஒரு சிறுகதையின் தழுவலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உதவி தலைமை ஆசிரியர் கமலா சம்பத் நன்றியுரை வழங்கினார். பரிசளிப்புடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பள்ளியின் தமிழாசிரியர்களான கீதா, ஜெயசித்ரா, கமலா, லக்ஷ்மி, மாலதி, நித்யா, ப்ரதீபா, ரூபா, சத்தியப்ரபா, தேவி ஆகியோரின் பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

புவனா ரமேஷ்,
மாசுசுசெட்ஸ்

© TamilOnline.com