SOCAL: 'வாங்க பழகலாம்'
மே 11, 2013 அன்று, தென்கலிஃபோர்னியா தமிழ்ச் சங்கம் 'வாங்க பழகலாம்' தமிழால் இணைவோம் நிகழ்ச்சியைப் பேரா. சாலமன் பாப்பையா தலைமையில் ஹூவர் பள்ளி அரங்கில் நடத்தியது. குழந்தைகள் இசைத்த தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. முதலாவதாக, திருக்குறள், ஆத்திசூடி போட்டிகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன. அடுத்து வந்த பரதநாட்டியம் மற்றும் பாடல் மிக அருமை.

'ஏன் தமிழ் கற்க வேண்டும்?' நாடகம் அடுத்த தலைமுறை தமிழ் கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய பாங்கு மிக அருமை. தமிழர் தம் அடையாளத்தைத் தக்கவைக்கத் தமிழ் கற்பது அவசியம் என்பதை நாடகம் அழுத்தமாகக் கூறியது. பாவேந்தரின் 'சங்கே முழங்கு' பாடலுக்குச் சங்கமம் நடனப் பயிலக மாணாக்கர்கள் அழகாக நடனமாடினர்.
பின்னர் வந்த மாறுவேட அணிவகுப்பில் அகத்தியர், சிவன், பார்வதி, பாரதியார், பாரதிதாசன் எல்லோரும் மேடைக்கு வந்து தமிழன்னைக்கு வந்தனை செய்த காட்சி மனதை வருடியது.

ஜீவன் நடராஜ்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com