ஜூன் 16, 2013 அன்று மாலை 4.30 மணிக்கு, அபிராமி கலை மன்றத்தின் சார்பில் ஒய்.ஜி. மகேந்திரனின் டைரக்ஷன் மற்றும் நடிப்பில் பாலோ ஆல்டோ ஸ்பாகன்பெர்க் தியேட்டரில் 'வெங்கடா3' என்ற நாடகம் நடைபெற இருக்கிறது. சி.என்.என் டாப் 10 நாயகர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் அக்ஷயா டிரஸ்டிற்கு நிதியுதவி செய்யும் நோக்கத்துடன் இந்நாடகம் நடத்தப்படுகிறது. நாடக விமர்சனம் படிக்க
சினிமா, நாடக நடிகராகவும், இயக்குனராகவும், நகைச்சுவை மன்னராகவும் இருக்கின்ற ஒய்.ஜி. மகேந்திரன் கலையுலகச் சேவையில் 50 ஆண்டுகள் முழுமை செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் என்கிற நாடகக்குழுவை 1952ம் ஆண்டு அவரது தந்தை துவக்கி வைத்தார். 60 ஆண்டுகளைத் தாண்டி 62 தயாரிப்புக்களை வழங்கிவிட்டது இக்குழு. பதினோரு வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்த ஒய்.ஜி.எம் இன்று வரையில் ஐயாயிரம் முறைகளுக்கு மேல் மேடைகளில் தோன்றியிருக்கிறார். 'நாடக திலகம்' போன்ற பல பட்டங்களைப் பெற்ற இவர், வெங்கடா3யை இயக்கி, 3 வேடங்களில் நடித்தும் இருக்கிறார். இவரோடான உரையாடல் வாசிக்க
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் தனக்கு முன்னுதாரணம் என்கிறார் மகேந்திரா. ஆனால் ஒய்.ஜி.எம்.மின் நடிப்பில் நடிகர் திலகத்தின் பாதிப்பை நாம் பார்க்க முடியாதது பெரிய வெற்றிதான். நல்ல நடிகர்களிடமிருந்து ஊக்கம் பெற வேண்டுமே தவிர, அவர்களைப் பிரதிபலிக்கக் கூடாது என்று சொல்வதுடன், அதைக் கடைப்பிடிக்கிறார் மகேந்திரன். நடிகைகள் லக்ஷ்மி, சௌகார் ஜானகி, சோ, மௌலி போன்றவர்கள் இவரது குழுவில் நடித்தவர்கள்தாம். சிகாகோவில் நாடகத்தில் ஆர்வமுள்ள கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுடைய குழுவுடன் சேர்ந்து இப்போது வளைகுடாப் பகுதியில் வெங்கடா3யை வழங்க இருக்கிறார். வெங்கடா3யில் நடிக்கும் ரெங்கா, மணிகண்டன் ஆகியோர், சிகாகோவில் நடந்த அபிராமி கலைமன்றத்தின் பொன்னியின் செல்வன் நாடகத்தில் பங்கேற்றுச் சிறப்புச் சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. |