பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி
இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர், உற்றாரை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகள் நலனுக்காக, டாலஸில் உள்ள அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6,000 டாலர் நிதி திரட்டி வழங்கியுள்ளனர். வடக்கு டாலஸ் ஸ்ரீ சத்ய சாயி பால விகாஸ் பள்ளியை. உமா ராவும் டாக்டர் சேஷகிரி ராவும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார்கள். 5 முதல் 15 வயது வரையிலுமான சுமார் 300 மாணவர்கள் இங்கு இந்திய கலாசாரம், சமூக சிந்தனை, சமய நல்லிணக்கம், சேவை மனப்பான்மை போன்றவற்றைக் கற்கின்றனர். அமெரிக்க வாழ்க்கை முறையில் நமது அடையாளத்தைத் தொலைத்துவிடாமல் இருக்கவும், அதே வேளையில் இங்குள்ள வாழ்முறையுடன் இணங்கி நடக்கவும் இங்கே மாணவர்கள் தயாராகிறார்கள். மாணவர்களின் பங்களிப்போடு வாரந்தோறும் ஏழைகள், வீடற்றவர்களுக்கு நாராயண சேவை என்ற பெயரில் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் இறுதியாண்டு முடிக்கும் மாணவர்கள், 5 கி.மீ. நடைப்பயணம் திட்டத்தின் மூலம் நிதி திரட்டி, பல்வேறு நற்பணிகளுக்கு நன்கொடையாகக் கொடுத்து வருகிறார்கள். இதனை மாணவர்களே திட்டமிட்டுச் செயல்படுத்துவதால் அவர்களுக்கு தலைமைப் பண்புகளில் பயிற்சியும் கிடைக்கிறது.

இந்த ஆண்டு இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சியில் உள்ள மகாதேவாசிரமத்தின் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள, ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்ட முடிவு செய்தனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்தக் காப்பகத்தில் தற்போது 147 ஆண், 179 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மனதாலும் உடலாலும் போரின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்கள். மே மாதம் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் டாலஸ் ப்ளேனோ ரஸல் க்ரீக் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைப்பயணத்தில் 6,000 டாலர் நிதி சேர்ந்தது. இது இந்த பாலவிகாஸ் பள்ளியின் வரலாற்றில் ஒரு மைல்கல்.

டாலஸ் தமிழர்கள் 500 பேர் குடும்பத்தோடு நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர். 3 வயதுக் குழந்தைகள் முதல், பிள்ளைகளைப் பார்க்க வந்திருக்கும் வயதானோர் வரை கலந்து கொண்டு ஆதரவளித்தனர். ஏற்பாடுகளை வேலு அவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் செய்திருந்தனர். ‘துதிக்கும் உதடுகளைவிட உதவும் கரங்கள் அதிகப் புனிதமானவை’ என்று ஸ்ரீ சத்திய சாயி பாபா கூறியதை இந்தக் குழந்தைகள் தமது செயலால் நிரூபித்துவிட்டனர்.

சின்னமணி,
டாலஸ், டெக்சாஸ்

© TamilOnline.com