முழங்குதிரை!
1940ம் வருடம் நான் பந்தநல்லூரில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியைத் தமிழாசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். "இதில் வரும் 'முழங்குதிரை' என்ற சொல்லுக்கு என்ன பொருள்?" என்றார். வகுப்பிலிருந்த ஐம்பது மாணவர்களுமே அது முழம் உயரமுள்ள ஒரு குதிரையாக இருக்கும் என்று நினைத்து அவ்வாறே பதில் சொன்னோம். எல்லாரையும் பெஞ்சில் ஏறி நிற்க வைத்துவிட்டார் ஆசிரியர்.

அந்த வழியாகச் சென்ற ஹெட்மாஸ்டர் எங்கள் வகுப்பைப் பார்த்ததும் நின்றுவிட்டார். தமிழாசிரியரை வெளியே அழைத்து ஏன் எல்லாருமே பெஞ்ச்சின் மேல் நிற்கிறார்கள் என்று கேட்டார். இருவரும் ஐந்து நிமிடம் பேசியிருப்பார்கள். தலைமையாசிரியரின் விசேஷப் பார்வை என் பக்கம் திரும்பியது. வகுப்பில் முதல் வரிசையில் இருந்த மூன்று மாணவ, மாணவிகளில் நான்தான் மிகவும் புத்திசாலிப் பையன் என்று பெயர் எடுத்திருந்தேனே! இப்போது நினைத்தாலும் பெஞ்சுமேல் நின்ற காட்சி மனதைவிட்டு அகல மாட்டேன் என்கிறது.

கடைசியில் ஹெட்மாஸ்டர் முன்பாக அந்த வார்த்தைக்குப் பொருள் சொன்னார் வாத்தியார். "முழங்குதிரை என்றால் முழம் அளவு உயரம் உள்ள குதிரை அல்ல. முழங்குகின்ற, அதாவது ஒலிக்கின்ற, அலைகளை உடைய (முழங்கு திரை) என்று பொருள்" என்றார். கவிராயரின் சொல்வளம், பொருள்வளம் கவிநயம் மிக்க அந்தச் செய்யுள் ஏன் இந்த மரமண்டைக்குப் புரியாமல் போனது என்று கேட்டால் பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்.

கே.ஆர். பாலகிருஷ்ணன்,
கேரல்டன், டெக்சாஸ்

© TamilOnline.com