தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி
கனடிய வசந்தகாலத் தென்றல் சில்லென்று வீசிய ஒரு காலைப் பொழுதில் ரொறன்ரோ நகரின் வடகிழக்கே அமைந்திருக்கும் மார்க்கம் (Markham) நகரின் ஆர்ம்டேல் சமூக மையத்தில் பல்லினச் சமூக மக்களும் ஊடகவியலாளரும் நகரசபை அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிளும் குவியத் தொடங்கினர். அன்று ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பும் பெயர்ப்பலகைத் திரைநீக்கமும் நடைபெறவிருந்தன.

கனடாவிலேயே மார்க்கம் நகரம்தான் பல்லின சமூகத்தவர்களை அதிகம் கொண்டது என்று இருநாட்களுக்கு முன்புதான் கணிப்பொன்று வெளியாகியிருந்தது. கனடிய அரசின் புள்ளிவிவரத் துறை நடத்திய அந்தக் கணிப்பில், மார்க்கத்தில் வாழ்வோரில் 72.3 சதவிகிதத்தினர் வெள்ளையரல்லாதோர் (Visible Minorities). இச்சமூகப் பிரிவினர் கனடாவிலேயே அதிகம் வாழும் நகரம் மார்க்கம்தான். சீனர்கள் அதிகமாகவும் தென்னாசியர்கள் அதிலும் தமிழர்கள் கணிசமாகவும் வாழும் நகரம் மார்க்கம். இந்த நகரசபையின் 7ம் வட்டாரத்தில் உறுப்பினராக 2006ல் லோகன் கணபதி என்ற தமிழர் தேர்வானார்.

வேகமாக முன்னேறி வரும் மார்க்கத்தில் சீனாவின் சன்யாட் சென், பிலிப்பைன்சின் ரைசால் பெயர்களில் வீதி உண்டு. ஏன், கராச்சி டிரைவ், நியூ டெல்லி கிரெசன்ட் போன்ற தெருக்களும் உள்ளன. ஆனால் இங்கே வாழும் தமிழர்கள் பெருமைப்படத் தமது சொந்தவீடு தவிர வேறொன்றும் இருக்கவில்லை.

இந்நிலையிலேதான் 14வது அவென்யூ என்ற முக்கியமான தெருவும் மிடில் ஃபீல்ட் ரோடும் சந்திக்கின்ற இடத்தருகே புதிய சமுதாய மையம், நூலகம் போன்றவற்றை அமைக்க நகரசபை திட்டமிட்டது. இத்தகைய முக்கியமான இடத்தில் அமையவுள்ள புதிய தெருவுக்கு ஒரு தமிழ்ப்பெயர் சூட்ட நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் பெருமுயற்சி செய்தார். முயற்சி பலனளித்தது. ஈழத்தின் வடபாகத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கி 7,600 சதுர கி.மீ.க்கும் மேல் விரிந்த பெருநிலப் பரப்பு வன்னி எனப்படுவது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதாயின் வன்னியை ஊடறுத்துத்தான் செல்லவேண்டும். இந்த வன்னி என்ற பெயரையே புதிய தெருவுக்குச் சூட்ட நகரசபையில் முடிவானது.

மே 11, 2013ல் நடைபெற்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் பெயர்ப்பலகைத் திரைநீக்கமும் இது தொடர்பானதே. மார்க்கம் நகர முதல்வர் ஃப்ராங்க் ஸ்கார்பிடி (Frank Scarpitti) அவர்கள் வன்னி வீதி பற்றிய அறிமுகவுரையை நிகழ்த்தினார். அவரோடு லோகன் கணபதியும் இணைந்து பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்தபோது கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைக் காட்டினர். பெயர்ப்பலகையை எல்லோருமே வாஞ்சையோடு கைகளாற் பற்றித் தடவி, மனதால் வன்னிக்குப் போய்வந்தனர். தமிழர்களைப் பெருமைப்படுத்த வன்னி வீதி கனடாவில் நிலைத்து நிற்கும்.

கந்தசாமி கங்காதரன்

© TamilOnline.com