உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர்
உடுப்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஒருபுறம் மலைகளாலும் மறுபுறம் அலைகளாலும் சூழப்பட்ட புராதன க்ஷேத்திரம். 13ம் நூற்றாண்டில் வைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ மத்வாசாரியார் அவர்களால் ஸ்ரீ கிருஷ்ண மடம் ஸ்தாபிக்கப்பட்டது. துவைத வேதாந்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்ப உடுப்பியில் மடங்களை ஸ்தாபித்து அதனை நிர்வகிக்க 8 சீடர்களுக்கு சன்யாச தீக்ஷை தந்து, அவர்களை கோவிலின் பூஜை, மடத்தின் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனிக்கும்படி ஏற்பாடு செய்தார் அவர். பின் வழிபாட்டிற்காக ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தார். இதன் பின்னணியில் ஒரு புராணக் கதை உண்டு.

துவாபர யுகத்தில் தேவகி, ஸ்ரீகிருஷ்ணனின் பால லீலைகளைக் காண விரும்பினாள். கிருஷ்ணன் விஸ்வகர்மாவிடம் தன் உருவம் கொண்ட சாளகிராம விக்ரகத்தைச் செய்யச் சொன்னதன் பேரில் அதன் அதிசயங்களைக் கண்டு மகிழ்ந்த ருக்மிணி, தினசரி பூஜைக்குத் தனக்கும் இதேபோல் விக்கிரகம் வேண்டும் எனக் கிருஷ்ணனிடம் கேட்க, அவரும் விஸ்வகர்மாவிடம் வலது கையில் மத்துடனும் இடது கையில் கயிற்றுடனும் தன் உருவத்தைச் செய்யும்படிக் கூறினாராம். அந்த விக்கிரகத்தை ருக்மணியிடம் தந்தார். ருக்மிணியும் அதை பூஜித்து வந்தாள். கிருஷ்ணன் தமது தேகத்தை நீத்தபின்னர் அந்த விக்கிரகம் அர்ஜுனனிடம் இருந்தது. பல யுகங்களுக்குப் பின் அது ஒரு படகோட்டியிடம் வந்து சேர்ந்தது. அது மத்வருக்குத் தெரிய வந்தது. அப்போது பெரும்புயல் வீசிப் படகு கவிழும் நிலையில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஆசாரியர் கடற்கரையில் நின்று கொண்டிருக்க, படகோட்டி தன்னைக் காப்பாற்றும்படிக் கதறினான். அவரும் தனது தெய்வீக சக்தி மூலம் அவனைக் காப்பாற்றினார். அவன் கிருஷ்ணர் சிலையை அவரிடம் கையளிக்க, அவர் அதனை உடுப்பி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். அவர் வழியில் அந்தப் பூஜை இன்றளவும் தொடர்ந்து நடந்து வருகிறது. அஷ்டமடத்து ஆசாரியர்கள் மட்டுமே தொட்டு பூஜிக்க உரிமை உண்டு. வேறெவருக்கும் அனுமதி இல்லை.

ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் பிரதான வாயில் தெற்குப் பக்கம் உள்ளது. இதன் வலதுபுறம் மத்வ புஷ்கரணி தீர்த்தம் நான்கு பக்கமும் கற்களால் அமைக்கப்பட்ட படிக்கட்டுக்களுடன் உள்ளது. சன்னதிக்குத் தனி நுழைவாயில் கிடையாது. ஜன்னல் வழியே மட்டுமே ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்க இயலும். ஜன்னலின் முன்பு கோபுரத்தைக் காணலாம். புஷ்கரணியின் தென்மேற்கு மூலையில் பாகீரதியின் சிலை உள்ளது. 12 வருடத்திற்கு ஒருமுறை பாகீரதி இந்த தீர்த்தத்தில் வருவதாக ஐதீகம். இன்றைக்கு 'மத்வசரோவர்' என அழைக்கப்படும் இந்தப் புனித தீர்த்தம் ஆலய பூஜை, அபிஷேகத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. தீர்த்தத்தின் எதிரில் கிருஷ்ண மடம், அதன் எதிரே சென்னகேசவர் சிலை, அதன் பின்னால் கர்ப்பக்கிரகம் செல்ல வழி உள்ளது. அது விஜயதசமியன்று மட்டும் திறக்கப்பட்டு புது நெற்கதிர்கள் அங்கு வைக்கப்படுகிறது. கர்ப்பக்கிரகத்தின் தென்புறம் ஆர்யசாலை சாவடி, தங்கப்பல்லக்கு, கருவூலம் ஆகியவை உள்ளன.

கிருஷ்ண விக்ரகத்தை பகல், இரவு என எப்போது வேண்டுமானாலும் ஜன்னல் மூலம் தரிசிக்கலாம். அந்த தரிசன ஜன்னல் 'நவக்ரக ஜன்னல்' என அழைக்கப்படுகிறது. எதிரே தீர்த்த மண்டபம் உள்ளது. ஸ்ரீ வாதிராஜ சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருடன் சிலை, ஸ்ரீ முக்ய ப்ராணர் சிலைகள் உள்ளன. கர்ப்பக்கிரகத்தின் அருகே 'மத்வர்' சிலை உள்ளது. இங்குள்ள வெள்ளி மண்டபத்தில் தங்கத் தொட்டிலில் ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏகாந்த சேவை, சயனோத்வம் நடைபெறுகிறது. வடகிழக்கு மூலையில் உள்ள புனிதக் கிணற்றில் இருந்து கிருஷ்ணர் பூஜை, அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

மத்வர் நிறுவிய மடங்கள் எட்டும் ரத வீதியைச் சுற்றி நீள்சதுர வடிவில் அமைந்துள்ளன. பெஜாவர், பாலிமார், அதமார், புத்திகே, ஸோதே, காணியூர், ஷிரூர், கிருஷ்ணபுரா ஆகியவை இந்த எட்டு மடங்களாகும். இங்கு நடக்கும் பரியாய உற்சவம் வெகு சிறப்பானது. நவராத்திரி, மகர சங்கராந்தி, ரத சப்தமி, மத்வ ஜயந்தி, கோகுலாஷ்டமி போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வேத, வேதாந்தக் கல்வி நிறுவனஙளும் ஆலயத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. உடுப்பியைச் சுற்றி நிறைய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com