உண்மை என்பதன் வடிவம் பல்வேறு பட்டதாகத் தென்படுவதைச் சென்றமுறை பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் எதை உண்மை என்று நம்பினோமோ, அது உண்மையில் உண்மையல்ல என்ற இக்கட்டான உண்மையும் வாழ்வில் அவ்வப்போது தலையெடுக்கத்தான் செய்கிறது என்பதைச் சுட்டுவதற்காக, அமெரிக்காவின் ஓக்லஹாமா, ஏடாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, பத்தாண்டுகளுக்குப் பிறகு, உண்மையை அறிந்த பிறகு, திருத்தி எழுதப்பட்டதையும் பார்த்தோம். உண்மை என்பது உடனடியாக இனங்காண முடியாததாகப் பலசமயங்களில் கண்ணாமூச்சி ஆடுவதைக் காட்டவே இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசினோம். இந்தச் சம்பவத்தில், எதைச் சாட்சியங்கள் உண்மை என்று மனதார நம்பினார்களோ, அது உண்மையல்லாததாகப் போய்விட்டது. நீதிமன்றங்களில் சொல்லப்படும் சாட்சியங்களுக்கு நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள குறட்பாக்களும், மணக்குடவர், பரிமேலழகர் முதலானோர் உரையும் வார்த்தைக்கு வார்த்தை பொருத்தக்கூடியன அல்ல. இந்த மாதிரியான சூழல்களுக்குத்தான், வள்ளுவரே, அளவுகடந்த முன்னெச்சரிக்கையுடன் 'தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்று பொய்க்கரி அல்லது பொய்சாட்சி சொல்வதைப் பற்றித் தனியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாரதி, தன்னுடைய ஞானரதத்தில், சத்தியலோகக் காட்சிகளைச் சொல்லும்போது, சத்தியத்தின் இயல்பைப் பற்றிப் பேசுகையில், "சிறிது தொலைவு கடந்தவுடனே வேறு வர்ணங்கொண்ட ஒளி கண்டேன். அவ்விடத்தினின்று எங்கே பார்த்தாலும் அந்தப் புதிய வர்ணமே காணப்பட்டது. "இதென்ன விந்தை!" என்று பிரமிப்பு அடைந்து அப்பால் சென்றேன். போகப்போக, புதிய புதிய வர்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. உண்மை பல வர்ணங்களுடையது என்று தெளிந்துகொண்டேன்." என்று சொல்கிறான் அல்லவா, அப்படிப்பட்ட, பல வர்ணங்களை உடைய உண்மையை, நடைமுறை வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவன் அணுகவேண்டிய முறையை முதலிரண்டு குறட்பாக்களும் பேசுகின்றன. "இவை இரண்டு பாட்டானும் 'இதனான், நிகழ்ந்தது கூறல் நீக்கப்பட்டது. அதுதானும் தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்; பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து" என்ற பரிமேலழகர் (மணக்குடவர் உரையும் அதுதான்) உரையை எடுத்துக் கொண்டால், நடந்தது கூறல் என்பது நீக்கப்படுகிறதே, இது விபரீதமாக இருக்கிறதே என்று தோன்றலாம். என் வாழ்க்கையிலிருந்தே ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
என் தாய்க்கு அப்போது எழுபத்தெட்டு வயது. அன்று நான் அலுவலகத்திலிருந்து திரும்பியிருக்கிறேன். அவர்கள் மருத்துவரைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அதற்கு முந்தைய சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் இரண்டு முறை மாரடைப்பு அவர்களைத் தாக்கியிருந்தது. ஒரு சிறுநீரகம் ஏதோ சுமாராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நீரிழிவு பிரச்சனையும் சேர்ந்து கொண்டிருந்தது. மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் சிந்தித்துச் செயல்படக்கூடிய அவருடைய நினைவோட்டமும் சீராக இல்லை. அன்று மாலை மிக்க மகிழச்சியோடு இருந்தார்கள். அவர்களை அவ்வளவு மகிழ்ச்சியுடன் நான் பார்த்ததே இல்லை என்றுகூடச் சொல்லலாம். காரணம்? அன்றைக்கு அவர்களைப் பரிசோதித்த எங்கள் குடும்ப மருத்துவர், 'இனிமே ஒங்களுக்கு ஒண்ணும் இல்ல. மருந்தெல்லாத்தையும் நிறுத்திடலாம். ஒங்களுக்கு என்னல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடுங்க. என்னல்லாம் செய்யப் பிடிக்கிறதோ அதெல்லாம் செய்யுங்க. இனிமே ஒங்களுக்கு மருந்தே தேவையில்லை. பூரண குணம் ஆகிவிட்டது' என்று சொல்லியிருக்கிறார்.
எனக்கு இதன் பொருள் புரிகிறது. சாதாரண நிலையில் இருந்திருந்தால், என் தாய்க்கும் மருத்துவர் சொன்னதன் பொருள் புரிந்திருக்கும். ஆனால், அவர்கள் நடுக்கடலிலே 'மீட்சி கிடைக்காதா' என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள். மருத்துவர் சொன்னதை அப்படியே நம்பிவிட்டார். நானும் அவருடைய மகிழ்ச்சியைக் கெடுக்காமல் அப்படியே விட்டுவிட்டேன். அதன் பிறகு இரண்டு வருடங்கள், எண்பது வயது பூர்த்தியாகும் வரை, இருந்தார்கள். கடைசி வரையில், தனக்குப் பூரண ஆரோக்கியம் திரும்பிவிட்டது என்ற திடமான நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.
மருத்துவர் சொன்னது பொய்தான். 'தன்னுடைய உண்மையான உடல் நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் உரிமை நோயாளிக்கு உண்டு' என்று ethics பேசுபவர்களால் இந்தப் பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், கடைசி இரண்டாண்டுக் காலம், தனக்கு உடல்நலம் பூரணமாக குணமாகிவிட்டது என்ற முழு நம்பிக்கையுடன், அவர்கள் வாழ்ந்தார்களே, அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கைக்கும், நிம்மதி உணர்வுக்கும் என்ன விலை தரமுடியும்! ஒரு முழுப்பொய், பொய்தான் என்று மற்றவர்களால் உணரக்கூடிய ஒரு பொய், சம்பந்தப்பட்டவருக்கு நல்லுணர்வையும், நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்துமானால், அதற்கு இணையும் உண்டோ. மருத்துவர் 'வாளால் அறுத்துச் சுட்டு'தான் குணப்படுத்த முடியும் என்பதில்லை. இப்படிப்பட்ட முறையிலும், தீராத நோய்களுக்குத் தீர்வுகாண முடியும்தான் போலும்.
'புரைதீர்ந்த நன்மை' என்ற மிக முக்கியமான நிபந்தனையைத் தாண்டி நிற்கிறதல்லவா மருத்துவருடைய மொழி? யாருக்கும் எந்தத் தீமையையும் செய்யாத, அதே சமயத்தில், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு முழுமையான அமைதியை ஏற்படுத்தித் தந்த சொல்லைப் 'பொய்' என்றா சொல்ல முடியும்!
அங்கேயும் ஒரு சிறு கொக்கியை வைத்தார் வள்ளுவர். 'அது பொய்தான். ஆனால், வாய்மை இடத்த'. பொய்தான் என்றாலும் வாய்மைக்குக் கொடுக்கும் இடத்துக்கு அருகில், மிக அருகில் இதை வைக்க முடியும்; உண்மையில், நாம் வைக்க வேண்டியதில்லை, அதுவே வாய்மைக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்ளும்.
நான் சொன்னது, அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களில் காணப்படும் எடுத்துக்காட்டு. இதைவிடவும் சிறப்பான எடுத்துக் காட்டுகள் நிறையே அவரவர் வாழ்க்கையில் இருக்கும். ஒருவருடைய அனுபவம் இன்னொருடையதாக இருக்காது; இருக்கமுடியாது. ஆனால், அவர் என்று இந்தக் குறளை இயற்றினாரோ அன்று தொடங்கி, இன்றளவும், இனியெப்போதும், 'வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்'தான்.
இது அன்றாட வாழ்வுக்கான அளவுகோல். சட்டத்தின் முன்னால் போய் நின்று பொய் சொல்லுமாறு வள்ளுவர் சொல்லவில்லை. அந்தச் சமயத்தில் 'புரைதீர்ந்த நன்மை' என்பதும் விளைய முடியாது; பொய்சாட்சியை நடைமுறை உலகும் ஏற்காது. எனவேதான், எந்த இடத்தில் இந்த விலக்கைத் தரலாம் என்பதையும் சொல்லி, மூன்றாவது குறளில் 'தன்னெஞ்சு அறிவது பொய்யற்க' என்றும் சொல்லி, 'மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்தறன்' என்று மிகத் தொடக்கத்திலேயே அறன் வலியுறுத்தலில் சொல்லி வைத்தார்.
குறளுக்குக் குறளே அகராதி ஆகும் நேர்த்தியைப் பார்க்க முடிந்ததல்லவா? மீண்டும் சந்திப்போம்.
ஹரி கிருஷ்ணன் |