லலிதா ராம்: 'துருவ நட்சத்திரம் - பழனி சுப்ரமணிய பிள்ளை'
"அண்ணா கீழயே நிக்கறேளே! வண்டியிலே ஏறுங்கோ" என்று பம்பாய் போகும் ரயிலடியில் ஒருவர் சொல்ல, சுவாரசியமாகத் தொடங்குகிறது புத்தகம். ஒரு மிருதங்க வித்வானின் வாழ்க்கை வரலாறு என்பதைத் தாண்டி இசையாராய்ச்சி, வாழ்க்கை வரலாறு, சங்கீதத்தைத் அடிநாதமாகக் கொண்ட புதினம் என்கிற மூன்று அம்சங்களின் ருசிகரக் கலவை இந்த நூல். ரயிலடித் தொடக்கத்தில் மிருதங்க வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளையை, ஒரு வித்வானுக்கு வாசித்து அவர் அவனை முடக்கிப்போட்ட கசப்பான அனுபவம் மனதில் நிழலாட நிற்கும் இளைஞனாகப் பார்க்கிறோம். இப்போது பம்பாய் போவது செம்பை வைத்தியனாத பாகவதருக்கு வாசிக்க. இளைஞனின் மனம் சஞ்சலப்படுகிறது. அவரை வண்டியில் ஏறச் சொல்லும் இந்த வார்த்தைகள், நம்மையும் ஒரு நீண்ட, சுவையான பயணத்துக்கு வாகனமேற்றுகிறது.

தீவிரமான இசை சார்ந்த எழுத்துக்கள் அபூர்வமாகத்தான் தமிழில் வெளியாகின்றன. நல்ல இசையறிவும் ஆய்வுப் பாங்கும் கொண்ட இளைஞர். லலிதா ராம் என்கிற ராம் ராமசந்திரன் இந்த நூலின் ஆசிரியர். ஜி.என்.பி.யின் வாழ்க்கை வரலாற்றுக்குப் பிறகு லலிதா ராம் எழுதியுள்ள புத்தகம் 'துருவ நட்சத்திரம்'. முதல் அத்தியாயத்திலேயே ஒரு தேர்ந்த புதினத்துக்குத் தேவைப்படும் சில கதை முரண்கள் அறிமுகமாகி விடுகின்றன. நாயகன், மிருதங்க வித்வான் சுப்ரமணிய பிள்ளை இடதுகை பழக்கம் உடையவர். அந்தக் காலத்தில் நிலவிய சம்பிரதாயப்படி, இடதுகை பழக்கமுள்ள மிருதங்கக்காரராய் இருந்தால், பாடகருக்கு வலப்பக்கம் அமரும் மிருதங்கக்காரரும் இடப்பக்கம் அமரும் வயலின் வித்வானும் இடம்மாறி உட்காரவேண்டும். இந்த மாற்றத்துக்கு உடன்படாத வயலின் வித்வான்களால் கச்சேரி வாய்ப்பே கிடைக்காமல் போகும் அபாயம் இருந்தது. இது மிருதங்கம், கஞ்சிரா வித்வானான அப்பா முத்தையா பிள்ளையைத் தன் மகனையே வெறுக்க வைக்கிறது.

மிருதங்கத்தின் மேல் சுப்ரமணியத்தின் கையே படக்கூடாது என்று ஒதுக்கிய அப்பா தனது இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகனுக்கு மிருதங்கம் சொல்லித் தருகிறார். அதையும் மீறி, திருட்டுத்தனமாய் மிருதங்கம் கற்றுக்கொள்கிறான் சுப்ரமணி. அதில் தேர்ச்சியும் பெறுகிறான். இதை யதேச்சையாய்க் கண்டுபிடிக்கிறார் அப்பா. துருவனின் கதையோடு இதை ஒப்பிட்டு விறுவிறுப்பாகக் கொண்டு போகிறார் ஆசிரியர். இத்தோடு, புதுக்கோட்டை அரண்மனையில் லாந்தர்க்காராய் இருந்து கஞ்சிரா கலைஞரான மாமுண்டியா பிள்ளை, மிருதங்க வித்வான் தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்றவர்களின் கதைகளும் லாகவமாகப் பின்னப்பட்டுள்ளன.

இரண்டாவது முரண், ராகத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் லயத்துக்கு இல்லாமல் போவது குறித்தது. கச்சேரிகளில் பாடகர் எடுத்தாள்கிற ராகமும், கிருதியும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பக்கவாத்தியக்காரர்களின் லய நுணுக்கங்கள் ஏற்படுத்துவதில்லை. இதனால் காலப்போக்கில் மிருதங்க வித்வான்கள் லய நுணுக்கங்களை விட்டுவிட்டுப் பாடகருக்கு உடன் செல்பவராக உருமாறிவரும் போக்கையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். சுப்ரமணிய பிள்ளைக்கு வாய்ப்புத் தரும்போதே வாசிப்பில் உள்விவகாரங்களை குறைத்துக் கொண்டு இனிமையாக வாசிக்கவேண்டும் என்று நிபந்தனையோடே செம்பை வாய்ப்புத் தருகிறார். "கணக்கெல்லாம் வேண்டாங்கல. அதை ரசிக்க நிறைய ஞானம் வேணும். அதுக்காக ஸௌக்யமா வாசிக்கறதை குறைச்சுக்காத. தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு தெரியாத கணக்கா? ஆனாலும் அவரோட விசேஷமே அவர் பாட்டுக்குக் கொடுக்கிற போஷாக்குதான்" என்கிறார். சுப்ரமணியம் நினைத்துக்கொள்கிறான் "கேக்கறவங்களுக்கு புரியலைங்கறதால வாசிக்காம இருக்க முடியுமா?" என்று. அதே செம்பை வைத்தியநாத பாகவதர் காலப்போக்கில் சுப்ரமணிய பிள்ளைக்குத் திறமையை வெளிப்படுத்துகிற விதத்தில் வாய்ப்புகள் கொடுத்து அவரைப் பாலக்காடு மணி ஐயருக்கு ஈடாக உயர்த்துகிற மாற்றமும் சுவாரசியம்.

கொறிக்கப் பல மொறுமொறுப்பான துக்கடாக்களும் உண்டு. கடம் கிருஷ்ணையரும், தட்சிணாமூர்த்தி பிள்ளையும் போட்டி போட்டுக்கொண்டு வாசித்து இறுதியில் தட்சிணாமூர்த்தி பிள்ளை "இனி இந்த கடத்தையே வாசிக்கப்போறதில்லை" என்று விட்டுவிட்டது; ஒரு திருமண ஊர்வலத்தில் உறையூர் கோபால்ஸ்வாமி பிள்ளை நாகஸ்வரத்துக்கு முத்தையா பிள்ளை தவில் வாசிக்க, பாதி ஊர்வலத்தில் இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு, "இனி நான் தவில் வாசிப்பதில்லை" என்று முத்தையா பிள்ளை சபதம் எடுத்தது; கச்சேரி கேட்பதற்காக மாயவரம் போகும் ரயிலைத் தாமதப்படுத்தி மெமோ வாங்கி, ஊதிய உயர்வைக் கோட்டைவிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் என்று ருசிகரமான தகவல்கள் எங்கு தொட்டாலும்.

மிருதங்க வாசிப்பில் இருக்கிற அத்தனை நுட்பங்களும் அலுப்புத் தட்டாமல், எளிய சொற்களில், அழகாக எழுதப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு "நறுக்குத் தெறித்தாற்போல அமைந்த கோர்வைகள், மின்னல்வேக ஃபரன்கள், மயக்கும் தொப்பியின் நாதம், ஸர்வலகுவில் ஒலிக்கும் டேக்கா சொற்கள், திஸ்ர நடையில் சதுஸ்ரத்தில் புகுத்திய சாமர்த்தியம், உடன் வாசிப்பவரின் திறனை உணர்ந்து அவருக்கு வலிமை சேர்க்கும் வகையில் வாசித்திருக்கும் குறைப்பு, நீண்டு ஒலித்து நெஞ்சையள்ளும் 'கும்காரச்' சொற்கள், கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் அமைந்திருக்கும் உச்சகட்ட மோரா கோர்வை என்றெல்லாம் அந்தத் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி வார்த்தைகளால் இட்டு நிரப்பலாமே தவிர அதன் சிறப்பில் லட்சத்தில் ஒரு பங்கைக்கூட வார்த்தையில் வடிக்க முடியாது."

லலிதா ராம் போன்ற அசாதாரணமான ஞானமும் திறமையும் ஆய்வுநெறியும் உள்ள இளைஞர்கள் இசைபற்றிய பதிவுகளைச் சரளமான எழுத்தில் கொணர்ந்து வெகுஜன வாசிப்புக்குத் தரவேண்டும். தரமுடியும் என்பதற்கான சாத்தியத்தை 'துருவ நட்சத்திரம்' சுட்டுகிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தில் காணற்கரிய கறுப்பு வெள்ளை புகைப்படங்களும், அந்தநாள் பத்திரிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட கேலிச் சித்திரங்களும் சுவை கூட்டுகின்றன.

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் இசை, வரலாற்றுத் துறைகளில் ஆர்வலர், ஆய்வாளர். இவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி.' என்ற இவரது முதல் நூல், அவரது இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து ஏழு வருடங்களாக வரலாறு.காம் varalaaru.com இணைய இதழை நடத்தி வருகிறார்.

'துருவ நட்சத்திரம்'; நூலாசிரியர்: லலிதா ராம்; விலை: ரூ150; 224 பக்கங்கள்; பதிப்பு: சொல்வனம்; மேலும் விவரங்களுக்கு: editor@solvanam.com

ஆனந்த் ராகவ்

© TamilOnline.com