இளம் எழுத்தாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருதைத் தனது 'தூப்புக்காரி' நாவலுக்காகப் பெற்றிருப்பவர் மலர்வதி. இயற்பெயர் மேரி ஃப்ளோரா. போட்டிப் படைப்புகளிலிருந்து விருதுக்குரியதாகத் தூப்புக்காரியைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் இருந்தவர்கள் அசோகமித்திரன், பேரா. க. பஞ்சாங்கம் மற்றும் பேரா. ஈ. சுந்தரமூர்த்தி ஆகியோர். துப்புரவுத் தொழிலாளியின் அனுபவங்களை ரத்தமும் சதையுமாக இந்த நாவலில் மலர்வதி சித்திரித்துள்ளார். துப்புரவுத் தொழிலாளிக்கு நாகர்கோவில் வட்டார வழக்கு 'தூப்புக்காரி'. 'முதற்சங்கு' என்னும் இலக்கிய மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரியும் மலர்வதி, நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளிக்கோடு கிராமத்தில் வசித்து வருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
கே: இலக்கிய ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது? ப: நான் சிறுவயது முதலே இயற்கையை நேசிப்பவள். அந்த ஆர்வம் ஓர் அடிப்படைக் காரணம். இரண்டாவது வாழ்க்கை அனுபவங்கள். எந்தக் கலைஞராக இருந்தாலும் அவர் வாழ்வில் நிகழ்ந்த துன்பங்கள் அவருக்கு ஏதோ ஒரு பாடத்தை, அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அதுவே அவருக்குள் அந்தக் கலையார்வம் வளர்வதற்கு விதையாக இருந்திருக்கும். என் வாழ்க்கையில் நான் சிறுவயது முதலே ஒரு நிராகரிக்கப்பட்ட சூழலில் வளர்ந்தேன். அந்தச் சூழல் பல தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தியது. பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. ஆனால் அந்தக் கேள்விகளை யாரிடமும் கேட்கமுடியாது. கேட்டாலும் பதில் கிடைக்காது. இந்த மாதிரி நேரங்களில் அவற்றையெல்லாம் நான் ஒரு குறிப்புபோல டயரியில் எழுத ஆரம்பித்தேன். அப்படித்தான் எனது எழுத்துப் பயணம் தொடங்கியது. ஆனால் அதை இலக்கியம் என்றோ, படைப்பாக்கம் என்று கருதியோ செய்யவில்லை. உண்மையில் எனக்கு இலக்கியம் பற்றியெல்லாம் அப்போது எதுவும் தெரியாது. நான் நூலகங்களுக்குச் சென்று தேடித்தேடிப் புத்தகங்களை வாசித்தவளில்லை. தேடித்தேடிப் படித்தவளுமில்லை. அதற்கான எந்தத் திட்டமிடுதலையும் நான் செய்ததில்லை. நான் புத்தகங்களை வாசித்ததைவிட என்னைப் போன்ற சகமனிதர்களை, கல் உடைப்பவர்களை, தெருக் கூட்டுபவர்களை, முந்திரி உடைக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களை, கூலித் தொழிலாளிகளை, பாலியல் தொழிலாளிகளை, செருப்புத் தைப்பவர்களை வாசித்து அறிந்ததுதான் அதிகம். எனது இலக்கிய ஆர்வத்திற்கு எனது இளவயதுச் சூழலும் ஒரு முக்கிய காரணம். .
கே: அதை விவரியுங்களேன்....! ப: இன்றைய 18, 19 வயது இளம் வயதினரின் வாழ்க்கையோடு என் இளவயதை ஒப்பிட்டால் அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதற்காக நான் சந்தோஷமான வாழ்க்கை வாழவில்லை என்பது பொருளல்ல. அக்கால கட்டத்தில் நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். இன்றைக்கு நல்ல கல்வி கிடைக்கிறது. இளையோர்களின் சூழல் நன்றாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் பல விஷயங்களில் தைரியம் இல்லாதவர்களாகவே உள்ளனர். ஆனால் அன்றைக்கு கல்விச் சூழலில் குறைபாடுகள் இருந்தாலும் இளையோர்கள் தைரியத்துடனும், வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றலுடனும் இருந்தனர். என்னுடைய பள்ளி நாட்கள் மிக இனிமையானவை. நண்பர்கள் சேர்ந்து நிறைய நாடகம் நடத்தியிருக்கிறோம். நான் 13 வயதிலிருந்து 19 வரை ஐந்து நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறேன். 'மலர்கின்ற இள மொட்டுகள்', 'விடியலைத் தேடும் இளமலர்', 'இங்கேயும் ஒரு புயல்', 'காத்திருப்பேன் மறுஜென்மம்', 'பூங்காற்றே பூவிடம் சொல்' போன்றவை அவை.
நான் பார்த்த மக்களின் பிரச்சனைகள், கனவுகள், லட்சியங்கள், தீர்வுகள் எனப் பல விஷயங்களை உள்ளடக்கிய அந்த நாடகங்களை ஊர்த் திருவிழாவின்போது அரங்கேற்றினோம். இரண்டு மாத விடுமுறையில் நாடகம் எழுதி, நடிகர்களைத் தேர்ந்தெடுத்து (சக மாணவிகள்தான் நடிகர்கள்) அவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து அந்த ஆண்டு இறுதியில் அரங்கேற்றம் செய்வோம். அதற்கு நல்ல வரவேற்பு. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சில சூழல்களால் என்னால் கல்லூரிக்குச் செல்ல இயலவில்லை. அஞ்சல்வழியில்தான் பி.லிட். படித்தேன். என்னுடைய ஊரிலும் தோழிகளில் ஒரு சிலர்தான் கல்லூரிப் படிப்பை முடித்து வேறு வேலைகளுக்குச் சென்றனரே தவிர மற்றவர்கள் எங்களைப் போன்று அடித்தட்டுப் பணிகளில்தான் இருந்தனர். அக்கால கட்டத்தில் நான் முந்திரித் தொழிற்சாலையில் வேலை செய்தேன். அங்கு வேலைக்கு வருபவர்கள் பாமர மக்கள், கல்வியறிவில்லாதவர்கள். மிகவும் ஏழைப் பெண்கள்தாம் அங்கே பணி செய்ய வருவார்கள். அது ஒரு வேறுபட்ட உலகம். அவர்களுடன் பழகி வாழ்ந்த அந்தச் சூழலை என்னால் மறக்கவே முடியாது. அந்தக் களத்தில் அவர்களுடன் பழகியதில் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சமூகத்தின் மீதான என் பார்வையை மாற்றின அந்த அனுபவங்கள். பல கேள்விகளை என்னுள் எழுப்பின. என் இளவயது வாழ்க்கை மிகவும் தித்திப்பானது.
கே: முதலில் வெளியான படைப்பு எது? ப. என்னுடைய வீட்டிற்கு மிக அருகிலேயே ஆலயம் இருந்தது. சமூகம் எனக்குத் தந்த வேதனையை இறக்கி வைக்கும் இடமாக அது இருந்தது. அங்கு சில பணிகள் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எந்த மதமாக இருந்தாலும் அதில் நல்ல படிப்பினைகள் இருக்கிறது. சிந்தனைகள் உள்ளன. ஒவ்வொரு மதமும் மனிதனுக்கு நல்ல வழிகாட்டிதான். ஆனால் அந்த மதங்களின் பெயரால் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால் ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும் தான். வசதியானவர்களின் வாழ்க்கை வேறு, ஏழைகளின் வாழ்க்கை வேறு. எந்த மதமானாலும் அதில் வழிபாட்டுக்கும் வாழ்க்கைக்கும் நிறையவே வித்தியாசத்தை அனுபவத்தில் நான் கண்டேன். போலித்தனத்தையும், பொய்யையும் கண்டேன். அவையெல்லாம் என்னை எழுதத் தூண்டின. அந்த அனுபவங்களைக் கொண்டு. பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மூன்று கட்டுரை நூல்களை (சிலுவை வழி சிகரம், கல்வாரி, மற்றுமொன்று) ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டேன். அவற்றுக்கு நல்ல வரவேற்பு. அதே சமயம் எதிர்ப்புகளும் இருந்தன. அவைதாம் அச்சில் வெளியான எனது முதல் படைப்புகள். மற்றபடி நான் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்தேன். எதையும் இதழ்களில் எழுதியதுமில்லை. தினமலர் குடும்ப மலரில் ஒரு கவிதை வெளியாகியிருந்தது. அவ்வளவுதான். இதழ்களுக்காக நான் எழுதியதில்லை. எழுத முயற்சித்ததுமில்லை. எனது தனிப்பட்ட திருப்திக்காக நான் சிறுகதைகளை, கட்டுரைகளை நிறைய எழுதினேன். ஆனால் அவற்றைப் பிரசுரம் செய்ய விரும்பியதில்லை. அதற்கான எண்ணமோ முயற்சியோ எடுக்கவில்லை. டயரிபோல் எழுதிப் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பேன். அவ்வளவுதான்.
'காத்திருந்த கருப்பாயி' எனது முதல் நாவல். அது பாறைத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்டது. அதைக் கவிஞர் ஒருவர் படித்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது; புத்தகமாகக் கொண்டு வரலாமே என்று சொன்னதால், மிகுந்த முயற்சியில், என் கழுத்துச் செயினை அடகு வைத்துப் பணம் திரட்டிப் புத்தகமாகக் கொண்டு வந்தேன். 2008ல் அது வெளியானது. அது எனக்குப் பரவலான அறிமுகத்தைத் தந்தது. எனது இயற்பெயரான மேரி ஃப்ளோரா என்ற பெயர் அல்லாமல் 'மலர்வதி' என்ற புனைபெயரில் வெளியான முதல் நாவல் அதுதான். அதன் மூலம் குமரி மாவட்டத்தில் ஒரு நாவலாசிரியையாக எனக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பிறகும் நான் எழுதிக் கொண்டே இருந்தேன். ஆனால் பிரசுர முயற்சியில் ஈடுபடவில்லை. என் மனத்திருப்திக்கு நான் எழுதினேன். பிறகு நண்பர்களின் ஊக்குவிப்பால் வெளியானது 'தூப்புக்காரி'.
கே: அந்த நாவல் பற்றிச் சொல்லுங்கள்.... ப: உண்மையில் அதற்கு விருது கிடைத்தது ஓர் ஆச்சரியம்தான். அதற்கான எந்த முயற்சியையும் நான் எடுக்கவில்லை. கண்ணால் கண்டது, என்கூட இருந்தவர்களின் வாழ்க்கை, நான் பார்த்த மக்களின் அனுபவங்கள் எல்லாவற்றையும் அதில் பதிவு செய்திருந்தேன். மலத்தைப் பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்குவியலுக்கு மத்தியில் உணவு சாப்பிடும் விளிம்புநிலை மனிதர்களின் கதைதான் 'தூப்புக்காரி'. கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் அந்த நாவலை எழுதினேன். என்னுடைய சிறுவயதில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை, நான் பார்த்த, சந்தித்த, கேட்ட விஷயங்களை அந்த நாவலில் பதிவு செய்திருந்தேன். "மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" என்ற கருத்தை அதில் பதிவு செய்திருந்தேன். நாவலுக்கு அணிந்துரை எழுதியவர், சாகித்ய அகாதமி விருது பெற்றவரும், சிறந்த எழுத்தாளருமான பொன்னீலன். அவர் அன்றுமுதல் இன்றுவரை எனக்கு ஒரு தந்தையைப் போல் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். அதுபோல சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருந்தார். அந்த நாவல் வெளியானதும் ஓரளவுக்குப் பேசப்பட்டது என்றாலும் பெரிய வரவேற்பு ஆரம்பத்தில் கிடைத்ததாகச் சொல்ல முடியாது.
நாமக்கல்லில் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இருக்கிறது. அது உலகளாவிய தமிழ்ப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கும். அந்த வகையில் 2012ல் எனக்கு விருதளித்தார்கள். பிறகுதான் அந்த நாவல் பரவலாக கவனிக்கப்பட்டது. அப்போது எனக்கு சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' குறித்து ஏதும் தெரியாது. பின்னர் நண்பர்கள் மூலம் அதைப் பற்றிக் கேள்விப்பட்டு அனுப்பிவிட்டு, மறந்தும் போய்விட்டேன். நாவல் வெளியானவுடனேயே பலரும் "இது ஒரு விருதுக்கான நாவல்" என்று சொன்னார்கள். நான் ஆரம்பத்தில் அதை நம்பவில்லை. பொன்னீலன் ஐயாவும் "இது ஒரு பேசப்படக்கூடிய நாவல். நீ 'தூப்புக்காரி' என்று நல்லதொரு இலக்கியக் குழந்தையைக் கொடுத்திருக்கிறாய். அது நிச்சயம் நல்ல பலனைத் தரும். பொறுமையாக இரு" என்று. அவர் சொன்னது நடந்தது. விருதும் கிடைத்தது.
கே: பொதுமக்கள் நாவலை வரவேற்றார்களா? ப: மிக நன்றாக! நாவலைப் படித்துவிட்டு உலகின் பல இடங்களில் இருந்தும் பாராட்டினர். இன்றளவும் பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கோவை, சென்னை, மதுரை, சேலம் ஆகிய இடங்களின் இலக்கிய அமைப்புகள் அழைத்துப் பாராட்டி வருகின்றனர். யாருமே தொடாத ஒரு பகுதி என்கின்றனர், வாழ்த்துக் கடிதங்களை அனுப்புகின்றனர். எதிர்ப்பும் இல்லாமலில்லை. இதெல்லாம் ஒரு நாவலா, குப்பைக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்; குப்பையைக் கொண்டாடுகிறார்கள் என்று என் காதுபடவே சிலர் சொன்னார்கள். நான் அதையும் வரவேற்கிறேன். என்முன்னால் ஒரு கவிதையோ, கதையோ எழுதினால் நான் அதனைக் கண்டு மகிழ்வேன். ஊக்குவிப்பேன். அதில் குறைகள் இருந்தாலும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நான் செயல்பட்டால், அதை ஒடுக்கினால் நான் வீழ்ந்து விட்டேன் என்பதுதான் பொருள். நாம் அறிந்த ஒன்றை, அறியாத பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதுதான் நல்ல மனிதரின் அடையாளம். மனிதப் பண்பு. இருந்தாலும் அதுபோன்ற விமர்சனங்களையும் நான் வரவேற்கவே செய்கிறேன். முக்கியமாக தலித் மக்கள் பலரிடமிருந்து இந்த நாவலுக்கு நல்ல வரவேற்பு. எங்கள் வாழ்க்கையை அப்படியே பதிவுசெய்திருக்கிறீர்கள் என்று பாராட்டுகின்றனர். கல்லூரி மாணவிகள் தற்போது களப்பணிக்காக வெளியே செல்லும்போது துப்புரவு செய்யும் பெண்களிடம் 'தூப்புக்காரி' நாவல் எப்படித் துவங்குகிறதோ அப்படித்தான் பேசுகின்றனர். அவர்களும் இந்த நாவல் எப்படி முடிகிறதோ அப்படித்தான் பதில் சொல்கின்றனர். இந்த நாவல் பெரிய மாற்றங்களைக் கொண்டு வராவிட்டாலும், சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டுவரும், கொண்டு வருகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
கே: உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள்... ப: பலரைச் சொல்லலாம். என்னுடய அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா எல்லோரும் துணையாகவும், ஊக்குவிப்பவர்களாகவும் உள்ளனர். யாரும் பெரிய படிப்புப் படித்தவர்கள் அல்ல. ஆனால் பாமர அறிவாளிகள். பக்குவப்பட்டவர்கள். எளிமையானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், நல்லவர்கள். பிறர்மீது குற்றம் சொல்லாதவர்கள். என்னுடைய அம்மாவும், அண்ணனும்தான் எனக்கு முன்னோடிகள். அவர்கள் என் பல்கலைக்கழகம். உண்மையைப் பேசுவது, நியாயமாக நடந்து கொள்வது, இரக்கப்படுவது, அடுத்தவர்களுக்கு உதவுவது போன்ற நற்குணங்கள் எல்லாம் நான் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். என் அண்ணன் பாறை உடைக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தார். எனக்கு அவர் ஒரு தந்தையாக இருந்து வளர்த்தார். எனது ஆர்வங்களுக்குத் தடை சொல்லாமல் ஊக்குவித்தார். என்னை அடிமையாக வளர்க்க நினைக்காமல் எனது முயற்சிகளுக்குச் சுதந்திரம் கொடுத்தார். மாற்றுக்கருத்து வராமல் எல்லோரும் ஒன்றுகூடிப் பேசி எங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வோம்.
மேலும் என்னுடைய வாழ்க்கையில் வலிதந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். எனக்குத் துன்பம் செய்தவர்களை நான் என்றுமே மறக்க இயலாது. அவர்களால்தான் நான் மனப்பக்குவம் அடைந்திருக்கிறேன். நல்லது, கெட்டது என எது நடந்தாலும் அதை ஒரு அனுபவமாகவே பார்க்க வேண்டும். அந்த அனுபவங்களை அளித்தவர்களை நம் ஆசான்களாகக் கருத வேண்டும். நமது மனம் புண்படப் பேசியவர்கள் எதிரிகள் அல்லர். நாம் பக்குவப்பட உதவிய நண்பர்கள். துன்பம் என்னும் பயிற்சிக் களம்தான் ஒருவரை மேம்படுத்தும். வலி ஏற்படுத்தியவர்களே எனது வழிகாட்டிகள். என் நன்றிக்குரியவர்கள். முரண்பட்ட மனிதர்களுடன் முட்டிக் கொண்டதால்தான் இதுமட்டுமே உலகம் அல்ல என்ற உண்மையை என்னால் உணர முடிந்தது. இல்லாவிட்டால் நான் என்றோ கோழையாகி இருப்பேன்
கே: என்ன செய்ய விரும்புகிறீர்கள்? ப: யாருமே கண்டு கொள்ளாத மனிதர்களை, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டவர்களது வாழ்க்கையை எழுத்தில் கொண்டுவர வேண்டும். அடித்தட்டு மக்களின் அவல வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் என்பதுதான் என் எழுத்தின் நோக்கம். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பேசுவதாகவே என் படைப்புகள் எதிர்காலத்தில் இருக்கும். மற்றபடி பிற திட்டங்களைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். நல்ல மனிதராக, சமூகத்துக்குப் பயன் தருபவளாக வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.
பக்குவத்துடன் பேசுகிறார் மலர்வதி. "சாக்கடை அள்ளும்போது ஏற்படும் அந்த மணம், அந்தக் குமட்டல், சோற்றுக்கும் மலத்துக்கும் வித்தியாசம் பார்க்க முடியாத அவலச்சூழல் எம் மக்களுடையது. அந்த உணர்வுகளைத் தூப்புக்காரியில் சொற்சித்திரம் ஆக்கியுள்ளேன். 'இந்த நாற்றம், வேதனை, அழுக்கு எல்லாம் என்னுடன் முடிந்து போகவேண்டும். என் தலைமுறை படிக்க வேண்டும்' என்று கதாநாயகி அதில் சொல்லுவாள். அது உண்மையாக வேண்டும். அவரவர்களுடைய அழுக்குகளை அவரவர்களே சுத்தம் செய்ய வேண்டும். அந்தச் சமுதாய மாற்றம் வரவேண்டும். வரும் தலைமுறையிலாவது இது நிகழ வேண்டும்" உணர்வு பொங்கப் பேசுகிறார் மலர்வதி. அவரது கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
யாருக்கும் கிடைக்காத வரவேற்பு டிசம்பர் 20 அன்று எனக்கு அலைபேசியில் விருது குறித்து தகவல் வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது நமக்கும் ஒரு அடையாளம் கிடைத்துவிட்டது என் எண்ணினேன். ஆனால் விருதை டெல்லியில்தான் தருவார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் அதிகம் வெளியூர் சென்றவளில்லை, அதனால் ஒரு தயக்கம். பின் அஸ்ஸாம் குவாஹத்தியில் விருது கொடுக்கிறார்கள் என்று கடிதம் வந்தது. மனதுக்குள் ஒரு தைரியம், அதே சமயம் தடுமாற்றம். விருதில் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் உண்டு. ஆனால் என்னுடைய பொருளாதாரச் சூழ்நிலை அவ்வளவு தூரம் செல்ல இடம் தரவில்லை. அப்போதுதான் பத்திரிகையில் என் நூலுக்கு விருது கிடைத்திருப்பது குறித்த கட்டுரை வெளியானது. உடனே பலரும் அலைபேசி மூலமும் கடிதம் எழுதியும் நேரில் வந்தும் ஊக்குவித்தனர். பலர் பணம் தர முன்வந்தனர். இந்தியன் வங்கி என்னுடைய பயணச் செலவை ஏற்றுக்கொண்டது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழர்கள், பெண் அமைப்புகள், தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் நிதியளிக்க முன்வந்தனர். ஆனால் பயணத்துக்கான தொகை சேர்ந்ததுமே நான் அவர்களிடம் வாழ்த்துப் போதும், பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். உலகின் ஏதோ மூலையில் இருந்த தமிழர் என்னை மகிழ்வோடு பாராட்டியதும், உதவ முன்வந்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது. மனிதநேயமே மரணித்து விட்டதோ என நான் மனதுள் வருந்தியதுண்டு. அப்படி இல்லை என்பதை எனக்குக் காட்டியது. இந்நிகழ்வு. என் வாழ்வில் இதை மறக்க முடியாது.
நான், என் அண்ணன் ஸ்டீஃபன், என் இலக்கியத் தோழர் குமரித்தோழன் ஆகியோர் அஸ்ஸாம் சென்றோம். குவாஹத்தியில் 70 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் ஒரு தமிழ்ச் சங்கம் அமைத்துள்ளனர். எங்களுக்குச் சிறந்த வரவேற்பளித்தனர். விருது வழங்கும் விழாவிலும், நான் ஏற்புரை வழங்கும் நாளிலும் அவர்கள் வந்திருந்து மிகவும் உற்சாகப்படுத்தினர். விழா மண்டபத்திலேயே எனக்கு அஸ்ஸாம் மாநில கலாசார தொப்பி மற்றும் துண்டு போன்றவை அணிவித்து கௌரவப்படுத்தினர். 24 விருதுக்காரர்களும் ஏற்புரை வழங்கினர். நான் விருது ஏற்புரையைத் தமிழில் பேசினேன். அதற்கு நல்ல வரவேற்பு. எனக்கு, நம் தமிழ் மொழிக்குக் கிடைத்த வரவேற்பு வேறெந்த மொழிக்காரருக்கும் கிடைக்கவில்லை. இது மிகவும் பெருமை கொள்ளத்தக்க விஷயம். அங்குள்ள இந்தியன் வங்கி ஊழியர்களும் முழுவதும் உடனிருந்து கவனித்துக் கொண்டனர். அது ஒரு வித்தியாசமான அனுபவம்.
- மலர்வதி
*****
வாசித்தல்ல, நேசித்து அறிந்தேன் இலக்கியம் என்ற கடலின் விளிம்பைத்தான் எட்டிப் பார்த்திருக்கிறேன். எனது எழுத்திற்கு முன்மாதிரி யாரும் இல்லை. நான் எனக்கென்று ஒரு பாணியில் எழுதிக் கொண்டிருக்கிறேன். பலரது எழுத்துக்களை நான் வாசித்து வந்தாலும் யாருடைய பாதிப்பும் எனக்கு இல்லை. எந்தச் சாயலும் என் எழுத்தில் இல்லை. அதேசமயம் 'கற்றது கைமண் அளவு' என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். நான் மனிதர்களை வாசித்து வளர்ந்தவள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி, ஒரு பாலியல் தொழிலாளி என ஐந்து நிமிடம் அவர்களுடன் பேசினாலும்கூட அவர்களது வாழ்க்கையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் மனதில் உள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. வாசித்து அறிந்ததை விட இவர்களை நேசித்து அறிந்ததே அதிகம். அதையே நான் எழுத்தில் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொருவிதமாக எழுதுகிறார்கள். சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிறார்கள். ஆனால் இவர்களில் 'நான்தான் சிறந்தவன்; எனக்குத்தான் எல்லாம் தெரியும்' என்று ஓர் எழுத்தாளர் சொல்லவே கூடாது. எழுத்தாளர்களுக்கு தலைக்கனம் அறவே கூடாது. அப்படி இருந்தால் அந்த எழுத்து சமூக மாற்றத்துக்கு உதவாது. ஒரு படைப்பினால் ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பலனைவிட அந்தச் சமூகத்துக்குக் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது சிறந்த எழுத்தாகும். நான் போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதையும் நான் அறிவேன். நான் போட்டிருப்பது முதல் புள்ளிதான்.
- மலர்வதி
*****
அம்மா சொன்ன பெண்மை வறுமையில் இருந்தாலும் அடுத்தவர்களை வஞ்சிக்கக்கூடாது, ஏமாற்றக் கூடாது, கெடுதல் செய்யக் கூடாது போன்றவை எல்லாம் நான் என் அம்மாவிடம் இருந்து அறிந்ததுதான். என் நூலகம் அவர்கள்தான். 30 வயதில் கணவரை - எங்கள் தந்தையை - இழந்துவிட்டார் என் தாய். இருந்தாலும் எங்கள் நலனுக்காகத் தனது ஆசைகளை எல்லாம் துறந்துவிட்டு ஒரு தவம்போல் வாழ்க்கை நடத்தினார். வீட்டருகில் இருந்த பள்ளியில் துப்புரவு வேலை செய்தார். அத்தோடு கிடைத்த வீட்டு வேலைகள் பலவற்றையும் செய்தார். புளி குத்துவது, பொருட்கள் வாங்கி வந்து தருவது எனக் கிடைத்த வேலை எல்லாவற்றையும் செய்து எங்களை வளர்த்தார். அவருக்கு எப்போதும் உழைப்புதான். வேலை செய்யச் சலிக்கவே மாட்டார். ஒருநாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம். அதிகமான வேலை. குறைவான கூலி. அந்த ஊதியத்திலும் நாங்கள் மன நிறைவோடு வாழ்ந்தோம். எங்களை நம்பிக்கையோடு வளர்த்தார். வியர்வை, அழுக்கு, நாற்றம், குப்பை, கூளம் என்ற சூழலிலும் எங்களுக்காகவே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்த என் அம்மாவின் பொறுமையும், மன திடமும்தான் என்னைப் பக்குவப்படுத்தியது. 'எதிர்த்துப் பேசி மல்லுக்கு நிற்பதல்ல பெண்மை. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்துக் காட்டுவதுதான் பெண்மைக்கான வீரம்' என்று அடிக்கடி சொல்வார் என் அம்மா. சொன்னது மட்டுமல்ல; அப்படியே வாழ்ந்தும் காட்டியவர் அவர். |