கைலாயமலையும் மானசரோவரும் - பகுதி 2
ஜூன் 19-ம் தேதி மாலை நாங்கள் தீர்த்தபுரி என்ற இடத்திற்குச் சென்று வந்தோம். இங்கு பகவான் விஸ்ணு பஸ்மாசுரனை வதம் செய்ததாக வரலாறு. சிவபெருமான் வரம் கொடுத்து அவர் தலையிலேயே பஸ்மாசுரன் கைவைக்க வந்தபோது இங்கு இருக்கும் மலையில் அவர் ஒளிந்து கொண்டதாகக் கூறப் படுகிறது. இங்கு பூமியிலிருந்து வெந்நீர் சுரக்கின்றது. நாங்கள் இந்த இடத்தை பார்த்துவிட்டுத் திரும்பும்போது வேகமாகச் சென்று கொண்டிருந்த நீரோடைகளைக் கடந்தோம். அவ்வாறு கடக்கும் பொழுது ஒருமுறை எங்களுடைய ஒரு வண்டியின் சக்கரம் ஓடையின் சுழலில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஓட்டுனர்கள் சேர்ந்து வேறு ஒரு வண்டியுடன் சங்கிலி கட்டி அந்த வண்டியை விடுவித்தனர்.

மறுநாள் அஷ்டபத் என்ற இடத்திற்குச் சென்றோம். இது உள் பரிக்கிரமம் செல்லும் வழியாகும். இதை மிகுந்த தவவலிமை பெற்ற சித்தர்களே செய்துள்ளனர். நாங்கள் இதன் ஆரம்பப் பகுதிக்கு மட்டுமே சென்று வந்தோம். எங்களது வண்டியில் சிறிது தூரம்வரை சென்று, மூன்று கி.மீ. தொலைவிலிருந்து தரிசனமும், ஹோமமும் செய்து விட்டு, எங்களது பாடிக்குத் திரும்பினோம். அன்று மாலை கைலாச பரிக்கிரமம் முடித்துவந்த சிலரைக் கண்டு அவர்களது பயண அனுபவத்தைக் கேட்டோம். அவர்கள் "பனி அதிகம் பெய்துள்ளதால் மூன்று நாட்கள் பரிக்கிரமம் மிகவும் கடினம் எவ்விதமான ஆபத்து ஏற்பட்டாலும் பரிக்கிரமத்தை விடாமல் செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். நாங்கள் உதவியாளர், குதிரை வைத்துக் கொண்டதால் பரிக்கிரமத்தை முழுவதும் செய்ய முடிந்தது. இரண்டாவது நாள் பரிக்கிரமத்தில் டோல்மாபாஸ் பனிமலையில் (17,600 அடி) ஏறி இறங்க வேண்டும். பனிப்பொதி முழங்கால் வரையில் உள் வாங்கியது. காலணி நனைந்து விடுவதால் பிளாஸ்டிக் கவரைக் காலில் கட்டிக் கொண்டு ஏற வேண்டும்" என்று தமது அனுபவத்தைக் கூறினர்.

நாங்களும் உதவியாளர், குதிரை மற்றும் குதிரையை அழைத்துச் செல்பவர் எல்லாம் புக்கிங் செய்து கொண்டோம். 21-ம் தேதி காலை எழுந்து சிற்றுண்டி மற்றும் உணவைக் கையில் எடுத்துக் கொண்டு முதல்நாள் பரிக்கிரமத்தைத் தொடங்கினோம். எங்களை எமத்துவார் என்ற இடத்திற்கு பதினொரு மணிக்கு வண்டியில் கொண்டு விட்டனர். அங்கு குலுக்கல் முறையில் கிடைத்த உதவியாளர், குதிரை இவற்றுடன் எங்களது பயணத்தைத் தொடங்கினோம். பழக்கமில்லாததால் குதிரைச்சவாரி மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஓரிடத்தில் நிறுத்திச் சிறிது இளைப்பாறிய பின், அன்று மாலை ஐந்து மணி அளவில் திரேபுக் என்ற இடத்தைச் சென்றடைந்தோம். இங்கு தங்குவதற்கு மண்வீடு அல்லது பாடி வீடுதான்.

அன்று பெளர்ணமி. கைலாசநாதரின் தரிசனம் பெளர்ணமி வெளிச்சத்தில் வெண்மையாகப் பளிங்கு போன்று கிடைத்தது. அவர் சேஷநாக ரூபத்தில் இங்கு தரிசனம் தருகின்றார். அன்று இரவு எங்களது குழுவின் தலைவர் மறுநாள் பயணம் பற்றி விரிவாகக் கூறினார். டோல்மாபாஸ் மலையில் 17,600 அடி உயரம் ஏற வேண்டும். குதிரை வராது. மலை அடிவாரத்திலிருந்து பனியில் ஏற வேண்டும். பனி முழங்கால்வரை உள்ளது. ஏறுவது மிகவும் கடினம். அப்படியும் வரவிரும்பினால் நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன் என்று கூறினார். இதைக் கேட்டதும் மூன்று பேரைத்தவிர மற்றவரெல்லாம் பின்தங்கி விட்டோம். மனவருத்தத்துடன் அன்று படுத்துக்கொண்டோம். இரவு முழுவதும் தூங்காமல் எனது கணவரும், ரகுராமன் என்பவரும் பேசி ஒரு முடிவெடுத்தனர்.

மறுநாள் அதிகாலை எங்களிடம் "நாம் பரிக்கிரமத்தை விடாமல் தொடர்வோம். நமக்குக் கைலாசநாதர் துணை வருவார். நமது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டாம்" என்றார் என் கணவர். 6 பெண்களும் 7 ஆண்களும் பயணத்தைத் தொடர முன் வந்தோம். மற்ற ஆறு பேர் திரும்பி சென்றுவிட்டனர்.

ஜூன் 22, 2005 அன்று காலை நாங்கள் ஓட்ஸ் குடித்தபின் பரிக்கிரமம் செய்யத் தயாரானோம். அன்று அதிகாலை 5 மணிக்குக் கைலாசநாதர் சூரிய ஒளியில் பொன் நிறத்தில் ஜொலித்தார். அது ஓர் அற்புதமான காட்சி. அவரை எங்களது கேமிராவில் படம் பிடித்துக் கொண்டோம். அங்கிருந்து இரண்டு கி.மீ. நடந்து சென்று ஓர் ஓடையைக் கடந்து எதிர்ப்புறம் குதிரைக்காகக் காத்திருந்தோம். ஒருவழியாக குதிரை வந்தது. அதில் ஏறி இரண்டு பெரிய மலைச்சரிவைக் கடந்து அகலமான திறந்த வெளிக்கு வந்தோம்.

இங்கிருந்து எங்களால் டோல்மாபாஸ் மலையைப் பார்க்க முடிந்தது. மலையில் ஏறிகொண்டிருப்பவர்கள் பென்சில் அளவு தான் எங்களது கண்ணிற்குத் தெரிந்தனர். மலையின் சிகரத்தைப் பார்த்து அனைவரும் பீதி அடைந்தோம். உதவியின்றி மேலே ஏறுவது சிறிதும் சாத்தியமில்லை. அவர் களின் கையைப் பிடித்துக்கொண்டே மெது வாக மேலே ஏறி உச்சியை அடைந்தோம். அங்கிருந்து மற்றொரு பகுதியில் தரை மட்டத்தில் உள்ள பார்வதி குண்டம் பார்த்தோம். அங்குதான் பார்வதி தேவி தினமும் ஸ்நானத்திற்கு வருவதாக ஐதீகம். இந்தத் தீர்த்தம் பனிக்கட்டியால் ஓரளவு மூடி இருந்தது.

ஏறுவது ஒரு பங்கு கடினம் என்றால் இறங்குவது இரண்டு பங்கு கடினமாகத் தெரிந்தது. இரண்டு கற்களுக்கு நடுவில் சிலீரென்று தண்ணீர் ஓடியது. கற்கள் உருண்டால் உறைகுளிர்த் தண்ணீரில்தான் காலை வைக்கவேண்டும். சிரமப்பட்டுச் சிறிது தூரம் கீழே இறங்கிப் பார்த்தால் 2 கி.மீ. தூரம்வரை பனிக்கட்டி குச்சி குச்சியாக நின்றது. சூரியனின் வெளிச்சம் பட்டு வைர ஊசிபோல மின்னியது. நேரே பார்க்க முடியாமல் குளிர்கண்ணாடி போட்டுக் கொண்டோம்.

எங்களது தலைவர் மலையின் கீழ் அடிவாரத்தில் இருந்த ஒரு சிறிய டெண்டைக் காட்டி "அங்கு செல்ல வேண்டும்" என்றார். எங்களுக்குத் தலையைச் சுற்றியது. வேறு வழியுமில்லை. எப்படியாவது கீழே இறங்கியே ஆக வேண்டிய நிலை. சிறிது சிறிதாக இளைப்பாறி ஒரு வழியாகக் கீழே வந்து சேர்ந்தோம். அப்போது மதியம் இரண்டு மணி இருக்கும். எங்களுக்கு சாப்பிட சீரகச் சோறும், பருப்பும் கொடுத்தனர். சாப்பாடு பிடிக்கவில்லை. எனினும் சிறிது உண்டு விட்டு, பத்து நிமிடம் களைப்பாறி, எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம். உடம்பு, கை, கால் எல்லாம் வலுவிழந்துவிட்டன. எனினும் பயணத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற நிலை. ஆதலால் மறுபடியும் கற்களைத் தாண்டித் தாண்டி 3 கி.மீ. நடந்து ஒரு வழியாக குதிரை இருக்கும் இடத்தைச் சென்றடைந்தோம்.

மறுபடியும் குதிரை சவாரியா என்று பயமாகவே இருந்தது. ஆனால் நடப்பதற்கு உடம்பில் தெம்பு இல்லை. குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்தோம். மாலை ஆறு மணிக்கு ஜுஜுல்புக் என்ற இடத்திற்கு வந்தடைந்தோம். இங்கும் மண்குடிசையில் தான் தங்கினோம். உடம்பு வலிக்கு ஜுர மாத்திரையெல்லாம் போட்டுக்கொண்டு படுத்தோம். மறுநாள் காலை எங்களது குதிரை பயணம் தொடரலாம் என்றிருந்தபோது எங்களுடன் சமையல் சாமான்களைத் தூக்கி வந்த யாக் ஒன்று காணாமல் போய்விட்டது. இது எங்களது நான்காவது இடர்ப்பாடு ஆகும்.

அதைத் தேடுவதற்காகக் குதிரைகளை அனுப்பினர். ஆதலால் ஓரிருவரைத் தவிர அனைவரும் 16 கி.மீ. நடந்தே சென்று எங்களது மூன்றாவது நாள் பரிக்கிரமாவை வெற்றிகரமாக முடித்தோம்.

இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கும் இடையே நாங்கள் விரும்பியதுபோல் மூன்று நாள் பரிக்கிரமாவை வெற்றிகரமாக முடித்தோ மென்றால் அது கைலாசநாதரின் அருளன்றி வேறு என்ன?

முற்றும்

ராஜலக்ஷ்மி தியாகராஜன்

© TamilOnline.com