சிகாகோ: பரதம் நடனப் பள்ளி ஆண்டுவிழா
மார்ச் 23, 2013 அன்று சிகாகோவின் நேப்பர்வில் பகுதியில் உள்ள பரதம் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா, ஆஸ்விகோ மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடந்தேறியது. நிகழ்ச்சியின் தொடக்கமான 'ந்ருத்தாஞ்சலி', 'ஆரம்பம்' மற்றும் 'அலாரிப்பு' ஆகியவற்றில் குழந்தைகளின் நடனம் ஜோராக இருந்தது. நாட்டை ராகத்தில் 'நர்த்தன கணபதி' தேஷ் ராகத்தில் 'நாராயண மந்திரம்', 'ஆண்டாள் கௌத்துவம்', தேவக்ரியா ராகத்தில் 'லலிதாம்பிகா' ஆகியவற்றுக்கு இவர்கள் அற்புதமாக ஆடினார்கள். பின்னர் வந்த 'கோவிந்தன் குழலோசை' நடனமும் வெகு அழகு. பாட்டு இல்லாத ஃப்யூஷன் இசைக்கு, பஞ்சபூதங்களைப் பிரதிபலித்த பிரபஞ்ச நடனம் புதுமை. பரத நாட்டியத்தின் பாரம்பரிய அம்சங்களான ஜதிஸ்வரத்திலும், ரீதி கௌளை வர்ணத்திலும், பூர்ணசந்திரிகா தில்லானாவிலும் மாணவர்களின் கடும் உழைப்பு பளிச்சிட்டது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது குரு வனிதா வீரவல்லி வடிவமைத்த 'தசாவதாரம்'. ஜெயதேவரின் முதலாம் அஷ்டபதியை இருபத்து நான்கு கலைஞர்களைக் கொண்டு, பெருமாளின் பத்து அவதாரக் கதைகளையும் திறம்பட வழங்கியது வெகு நேர்த்தி. தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர், ராவணனை வென்ற ராமர், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்ட வாமனர், உலகின் துயர் கண்டு துறவறம் பூண்ட புத்தபிரான் முதலிய அவதாரச் சிறப்புக்களை விவரித்த நடனங்கள் ஏகோபித்த ஆரவாரத்தைப் பெற்றன. நிகழ்ச்சியை ரஞ்சனி ராஜன் தொகுத்து வழங்கினார். நிறைவில் பரதம் பள்ளியின் முதுநிலை மாணவிகளான அனு, மேரியான், அனுஷா நன்றியுரை வழங்கினர். குரு வனிதா வீரவல்லி பரிசுகள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு வலைமனை: www.bharatam.org

ஸ்ரீவித்யா,
இல்லினாய், சிகாகோ.

© TamilOnline.com