நியூ ஹாம்ப்ஷயர்: இந்து ஆலயம் புதிய வளாகம்
மார்ச் 24, 2013 அன்று பாஸ்டன் அருகே உள்ள நாஷுவா நகரில் நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தின் புதிய வளாகம் திறக்கப்பட்டது. 525 ப்ராட் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில், சுமார் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு அழகான கட்டிடங்கள் கொண்ட இந்த ஆலய வளாகத் திறப்பினைச் சைவ ஆகம முறைப்படி ஸ்ரீ பைரவசுந்தர சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். பழைய வளாகத்திலிருந்த கடவுள் விக்கிரகங்கள் அதிகாலையிலேயே கொண்டு வரப்பட்டுத் துவங்கிய விழா, ஹோம அபிஷேகங்கள், வேத கோஷம், சஹஸ்ரநாமம், திவ்யப் பிரபந்த பாராயணம் ஆகியவற்றோடு நடந்தது. ஆலயத்தால் நடத்தப்படும் பாலகோகுலம் கலாசாரப் பள்ளி மாணவர்களின் சுலோக பாராயணம், பக்தியிசை போன்றவையும் தொடர்ந்தன.

ஸ்ரீமீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் பிரதானக் கடவுள்களாக அமைந்துள்ள இந்த ஆலயத்திற்க்கு குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உட்படப் பல சமயச் சான்றோர் கடந்த வருடங்களில் விஜயம் செய்துள்ளனர். ஆலயத்தைப் பற்றி மேலும் அறிய: www.hindutemplenh.org தொலைபேசி: 1-603-598-HTNH

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
மசாசூசெட்ஸ்

© TamilOnline.com