அட்லாண்டா: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 14, 2013 அட்லாண்டா இந்து ஆலயத்தில் தமிழ்ப் புத்தாண்டு தமிழ் மறைகளின் பாராயணத்துடன் கொண்டாடப் பட்டது. தெரிந்தெடுத்த திருமுறைகளின் பாடல்களை ராம்மோகன் தொகுத்துப் புத்தகமாக வழங்கியிருந்தார். (இந்தப் புத்தகத்தை இலவசமாகத் தரவிறக்க: www.tinyurl.com/maraikal) விநாயகர் துதியில் ஆரம்பித்த பாராயணம் திருக்குறள், தேவாரம், திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி, திருமாலை, திருப்புகழ், திருவாசகம், திருவெம்பாவை என நாவினிக்க ஓதப்பட்டது. ஒவ்வொரு திருமறையின் பாராயணமும் தொடங்குமுன் அதனை ஆக்கியோர் வரலாற்றையும் பின்னணியையும் பூங்கோதை ராம்மோகன் எடுத்துக் கூறியது பயனுள்ளதாக இருந்தது. தவிர, ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளின் எளிய பக்தி நிரம்பிய கீர்த்தனைகளைக் கிஷோர் குழுவினர் பாடினர். ஐங்குறு நூறிலிருந்து சேந்தனாரின் "வாழியாதன் வாழியவினி" வாழ்த்துடன் நிகழ்ச்சி நிறைவுவெய்தியது.

ராம்மோகன் கிருஷ்ணன், அபயநாதன் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் சேகப்பன், முத்தையா சுப்ரமணியன், கிருஷ்ணா ராமச்சந்திரன், பெரியண்ணன் சந்திரசேகரன், ஸ்ரீதர் ஸ்ரீனிவாசன், அசோக்குமார், மங்களா ஐயர், வள்ளிக்கண்ணு முத்தையா, பூங்கோதை ராம்மோகன், மாதவி குணசேகரன், நர்மதா ஜகன்னாதன் மற்றும் இந்து ஆலய நிர்வாகக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள் நிகழ்ச்சியைத் திறம்பட ஏற்படுத்தி நடத்தினர்.

டாக்டர் சொ. சுகுமாரன்,
அட்லாண்டா

© TamilOnline.com