ஏப்ரல் 14, 2013 அன்று டாலஸிலுள்ள ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் 12ம் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் டாக்டர். சிவா அய்யாதுரை சிறப்புரை ஆற்றினார். இவர் தமது 14வது வயதில் மின்னஞ்சல் முறையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. தமது உரையில், தாம் நடத்திவரும் இன்னோவேஷன் கார்ப் நிறுவனத்தின் மூலம் ஆயிரம் இளம் தமிழ் விஞ்ஞானிகளை உருவாக்குவது முதல் இலக்கு என்று குறிப்பிட்டார்.
இதில் மாணவ மாணவியர் பங்கேற்ற நடன, நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாணவர்கள் தமிழில் தொகுத்து வழங்கினர். 'நம்மிடையே பாரதி' என்ற நாட்டிய நிகழ்ச்சி, 'ஒபாமா விஜயம்' என்ற நாடகம், 'ஔவையாரும் முருகனும்' என்ற நாடகம் முதலியன அனைவரையும் ஈர்த்தது. பள்ளியில் பயிலும் 130 மாணவர்களும் வெவ்வேறு காட்சிகளில் தோன்றும் வகையில், நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
டாக்டர். சிவாவின் வழிகாட்டலில் புத்தாக்கக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் 6 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியருக்கு ஆராய்ச்சி என்பதன் அடிப்படை, கட்டமைப்பு, செயல்திட்டம் உள்ளிட்டவைகளை எளிய முறையில் விவரித்தார். பின்னர் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து புதிய கண்டுபிடிப்புக்கான சில தேவைகளைக் கண்டறிந்து, அவற்றைப் படைக்க உயர்நிலை செயலாக்கத் திட்டத்தையும் வரையச் செய்தார். கண்டுபிடிப்பைச் சந்தைப்படுத்தப் பெயர் சூட்டல் போன்றவற்றைச் செய்யச் சொன்னார். இறுதியில் மாணவர்கள் மூன்று புதிய திட்டங்களை முன்வைத்தனர். இதனைப் பார்த்த சில பெற்றோர் நெகிழ்ச்சியடைந்து 'இப்படி ஒரு வழிகாட்டி நமக்குக் கிடைத்திருந்தால், நாமும் ஏதாவது கண்டுபிடித்திருக்க முடியுமே' என்று வாய்விட்டுக் கூறினர். அஷ்வின் என்ற மாணவன் தான் ஏற்கனவே செய்துவரும் ஆராய்ச்சிப் பணியை டாக்டர் சிவாவிடம் விவரித்தான். அதைக் கேட்டபின், அவனுக்குத் தக்க ஆலோசனை கூறியதுடன், தம்முடன் தொடர்பில் இருக்குமாறும், காப்புரிமை உள்ளிட்ட சட்டப் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
பள்ளி ஆசிரியர்களுக்கு சிவா அய்யாதுரை நினைவுப் பரிசுகள் வழங்கினார். 'வகுப்பு அன்னையராகப்' பணியாற்றும் தாய்மார்களும் கௌரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சிறப்பாகச் செய்திருந்தது. வேலு மற்றும் விசாலாட்சி வேலு வரவேற்றனர். சிறப்பு விருந்தினரைக் கவிதை முழக்கத்துடன் வரவேற்றார் சித்ரா மகேஷ். டாக்டர் ராஜ் நன்றியுரை கூறினார்.
தினகர், டாலஸ், டெக்சாஸ் |