மே 2013: வாசகர் கடிதம்
"தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்!" ஒவ்வொரு சஞ்சிகையும் என் மனதைப் பூவாக மலரச் செய்கிறது. கடல் கடந்து வந்தாலும் சொல்லாழமும் கருத்தும் படிப்பினை உண்டாக்கக் கூடியதுமான எத்தனை சிறந்த கதைகள்! அத்தனையும் சிறந்த முத்துக்கள். மனதை மயிலிறகால் வருடும் இயல்பான நடை. வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும் அலசி ஆராய்ந்து எளிய இனிய தமிழ் மணக்கும் எழுத்துக்களால் அலங்கரித்துக் கொண்டு ஒய்யார நடையில் கதைகளும் அதன் பாத்திரப் படைப்புகளும் மனதை மயக்குவதோடு சிந்திக்கவும் வைக்கிறது. எப்போது வந்தாலும் அப்போதெல்லாம் என் போன்றோருக்கு விருந்து படைக்க, சுவைக்க, என் மக்கள் 'தென்றலை' பாதுகாத்து வைத்திருந்து கொடுத்து மகிழ வைக்கின்றனர். சினிமா போன்ற விஷயங்களுக்கு தேவைக்கு மேல் பக்கங்களை ஒதுக்காத கண்ணியத்துடன் தூய தமிழில் பத்திரிகை வசீகரிக்கிறது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என கவிஞரின் வாக்கியம் மெய்ப்பிப்பது எப்போது படித்தாலும் மனதில் நாம் தமிழர்கள் என்ற ஓர் கர்வம் எழுகிறது. இந்தியாவில் சினிமா மோகம் அதிகரிப்பதை பத்திரிகைகள் பறை சாற்றுகின்றன. பத்திரிகை சினிமா ஊடகங்கள் அந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. எத்தனை அறிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கவிதைகள் அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. பண்டிகை நாட்களிலும் சினிமாக்காரர்களின் புகழும் தற்பெருமையும் தான். எத்தனை பத்திரிகைகள் வருகின்றன என்பது முக்கியமில்லை. ஒன்றே ஒன்று; கண்ணே கண்ணு என்பது போல, தென்றல் போன்ற பத்திரிகைகள்தான் என் போன்ற தலைமுறையினர் விரும்புவது, ரசிப்பது, மகிழ்வது. அதைப் படைத்தோர், பங்கேற்பவர்கள், தமிழ்நடையில் சீலமாக எழுதும் மக்கள் அனைவருக்கும் எப்போதும் என் நன்றிகள். மனதை நிம்மதியாக வைக்கத் தென்றல் உதவுகிறது, மறுப்பதற்கில்லை.

ஜயலக்ஷ்மி சேஷாத்ரி

*****


ஒட்பமும் அறிவுடைமையும் என ஆய்ந்து விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிய ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு மிகவும் நன்றி. அம்புலிமாமா சங்கரின் சோதனை கேள்விக்கு பதிலுரைத்தது அமர்க்களம். அசத்திவிட்டார் போங்கள்! என்போன்ற வாசகருக்கு 'தென்றல்' வரவர ரொம்பவும் எதிர்பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டது.

கமலா சுந்தர்,
வெஸ்ட் விண்ட்சர், நியூஜெர்ஸி

© TamilOnline.com