யார் புறக்கணித்தார்?
எம் நாட்டவரே! எம் நாட்டவரே!
உங்களுக்கோர் கேள்வி!

உழைத்துச் சேர்த்த சொத்தைத் தந்த தந்தைக்கு,
ஒருவேளை சோறுபோடத் தயங்கும் தர்மதுரைகளே!

மனைவிக்குப் பயந்து, பத்து மாதம் சுமந்தவளை,
உயிர் பிரியும் தருவாயிலும் காக்க மறந்த கணவன்மார்களே!

எதையுமே முன்னேற்பாட்டோடு செய்யாவிட்டாலும்
முதியோர் இல்லத்தில் மட்டும் முன்பதிவு செய்யும் இளைஞர்களே!

கடல் தாண்டிப் போனவனைக் காணும் ஏக்கத்தில்,
முடியாச் செய்தி சொன்ன அன்னையைப் பார்க்க,
மூன்றுநாள் கழித்து, நாம் வந்த பின்பும், வராத உடன்பிறப்புகளே!

இரு தினங்களுக்கொரு முறையேனும், தொலைபேசியில் குரல்
கேட்கத் துடிக்கும் நாங்களா,
வந்தோ வரவழைத்தோ வருடாவருடம்,
பார்க்கத் துடிக்கும் நாங்களா,
தொலைபேசி கிணுகிணுக்கும் போதெல்லாம்
நெஞ்சம் பதைபதைக்கும் நாங்களா,

பெற்றோரைப் புறக்கணித்தோம்?

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com