தென்கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ராஹி சர்னோபத் 25 மீ. பிஸ்டல் பிரிவில், தென்கொரியாவின் கியோன்கே கிம்மைப் பின்தள்ளித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தனது 26வது போட்டியில் ராஹி பெற்ற இந்தப் பதக்கம் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் ஆகும். இவர் 2010ல் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அக்டோபர் 30, 1990 அன்று மகாராஷ்டிரத்தின் கோலாபூரில் பிறந்த ராஹி, இளவயது முதலே விளையாட்டுகளில் ஆர்வமுடையவராய் இருந்தார். பின் கைத்துப்பாக்கிப் போட்டியில் ஆர்வம் கொண்டு, புனேயில் உள்ள பயிற்சிக் கழகத்தில் சேர்ந்து பயின்றார். பல போட்டிகளில் பரிசுகளும் பெற்றார். ஜெர்மனியில் நடந்த ஜூனியர் பிரிவிற்கான போட்டியில் முதலிடம் பெற்றார். அதுமுதல் உலக அளவிலான போட்டிகளில் இவர் கவனம் திரும்பியது. 2011ல் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ராஹி என்பது குறிப்பிடத் தக்கது. ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக்ஸில் வெற்றி மேடை ஏறுவது தமது லட்சியம் என்கிறார் 22 வயதான ராஹி சர்னோபத்.
|