திட்டம்
அந்த இருண்ட ஹோட்டல் உணவு அறையில் ஒரு மெழுகுவர்த்தியின் முன்னே அமர்ந்தபடி, ஜோதி, அருண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டனர். அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதியர் இவர்களை பார்த்தபடி உணவருந்தினர். அருண் கைகளில் இருந்து அந்த நகைப் பெட்டியை வாங்கிய ஜோதி, "இப்ப என்ன பண்றது அருண்?" என்றாள்.

அமெரிக்க தம்பதியர் அருண் பக்கம் திரும்பி, "உங்கள் திருமண நிச்சயத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்" என்று கூறினர்.

அருண், ஜோதி இருவரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஹோட்டலில் இருந்து வெளியேறினார்கள்.அமெரிக்க முறைப்படி அருண், ஜோதிக்கு மோதிரம் கொடுத்து அவனது விருப்பத்தை தெரிவித்திருந்தான். ஜோதியும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள். ஆனால் இருவர் முகத்திலும் சந்தோஷம் இல்லை, பயம் தான் இருந்தது.

காரில் வீடு திரும்பும்பொழுது அருண் ஜோதியிடம், "ஒரு வழி இருக்கு. நான் உங்கப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கறேன். நீ எங்கப்பாகிட்ட சம்மதம் வாங்கு. நாம நேரா பேசறதவிட இப்படிக் கேட்டா சீக்கிரமா சரின்னு சொல்லுவாங்க" என்றான். ஜோதியும் அதற்குச் சம்மதித்தாள்.

அருண், ஜோதி இருவரும் பாரம்பரிய இந்தியக் குடும்பங்களில் பிறந்து அமெரிக்காவில் இருபது வருடங்கள் வளர்க்கப்பட்டவர்கள். இருவர் குடும்பங்களும் அடுத்தடுத்த வீடு. பதினெட்டு வருடங்கள் நட்புடன் பழகி வந்தனர். அமெரிக்க முறையில் வளர்ந்தாலும், ஒரே பள்ளியில், கல்லூரியில் படித்த பின்பும் இருவருக்கும் காதலைப் பெற்றோரிடம் தெரிவிக்க பயம்.

திட்டப்படி ஜோதி, அருண் வீட்டுக்குச் சென்றாள். அருண், ஜோதி வீட்டுக்கு. ஜோதியைக் கண்ட அருணின் தாயார் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசியபடி இருந்த பொழுது, தயங்கித் தயங்கி விஷயத்தைக் கூறினாள் ஜோதி. ஆனால் அவள் பயத்திற்கு மாறாக, அருணின் பெற்றோர் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தனர். அதே போலவே ஜோதியின் பெற்றோரும் சம்மதம் கூறவே, "அப்பாடி இனிமேலாவது நாங்க ரெண்டு பேரும் நிம்மதியா போய் சாப்பிட்டு வரோம். நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு பயத்திலே கல்யாணம் ஆகிற சந்தோஷம்கூடத் தெரியல" என்று சொல்லி விட்டு அருண் ஜோதி இருவரும் கிளம்பினர்.

காரில் ஏறிய பின் இருவரும் தங்கள் திட்டம் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியுடன் பேசியபடி சென்றனர். இவர்கள் தலை நகர்ந்த பிறகு அருணின் தந்தை சிவம் ஜோதி வீட்டுக்கு ஃபோன் செய்தார். "டேய் ஹரி, வாடா இங்கே. அவங்க ரெண்டு பெரும் கிளம்பிப் போய்ட்டாங்க" என்றார்.

"இதோ வர்றோம்," இது ஹரி.

சிறிது நேரம் கழித்து, அருணின் தாயார் அவசரமாகச் செய்த கேசரியைச் சுவைத்தபடி நால்வரும் சிரித்தனர்.

"நல்ல வேளை, நம்ம திட்டம் சோடை போகல".

"ஆமாம் இதே ஊரில செட்டில் ஆரோமே, இந்த ஊர் டேட்டிங் கல்ச்சர் பிடிச்சு யாரையாவது கூட்டிட்டு வந்துடப் போறானேன்னு எனக்கு பயம்மா இருந்தது" என்றார் சிவம்.

"அதனாலதான் நாம பக்கத்து பக்கத்தில வீடு வாங்குவோம். ஒரே ஸ்கூல், காலேஜ்ல சேர்ப்போம்னு பிளான் பண்ணினோம்."

"ஆமாமாம். நாமளா கல்யாணம் பேசிருந்தா எங்க சுதந்திரம் போச்சு, அது இதுன்னு ரெண்டு பெரும் கத்தியிருப்பாங்க. ஆனா இப்போ, தானே டேட் பண்ணின மாதிரி ரெண்டு பெரும் சந்தோஷப்படறாங்க!"

"எப்படியோ எல்லாம் நல்லபடியா ஆச்சு" என்று சொல்லி பதினெட்டு வருடங்கள் முன் திட்டம் போட்டு நிச்சயம் செய்த திருமணத்திற்கு இன்று இனிப்பைச் சுவைத்தார் ஹரி.

லக்ஷ்மி சுப்ரமணியன்,
மின்னசோட்டா

© TamilOnline.com