பாலிகை
என் கல்யாணத்தில பாலிகை தெளிக்கணும் என்று சொன்ன ஒடனே எத்தனை சுமங்கலிகள் ஓடி வந்தா தெரியுமா? மண்சட்டியில புல்லும் வில்வமும் முளை கட்டிய நவதானியமும் சேர்த்து பாலும் நீரும் ஊற்றி அஷ்டதிக் பாலகாளும் ஆசிர்வாதம் பண்ணித்தான் ராஜும் நானும் கல்யாணம் பண்ணிண்டோம். எங்களுக்கேன் தெனமும் ஃபெர்டிலிடி க்ளினிக்கும் நிசப்தமான வீடும் அமைஞ்சிருக்குன்னு மருகாத நாளில்ல. ராஜும் நானும் ஒரு புழுக்கத்திலேயே இருந்தோம். கல்யாணமாகி எட்டு வருஷம் ஆச்சு. இர‌ண்டு பேரும் இலக்கே இல்லாம எங்க போறோம்னே தெரியாம பிரயாணப்பட்டுக்கொண்டே இருந்தோம்! உலகத்துல குழந்தை பாக்கியம் இல்லாதபேரில மூணுல ஒரு பங்கு பெண்கள்கிட்ட குறை, மூணுல ஒரு பங்கு ஆண்கள்கிட்ட குறை, மிச்ச மூணுல ஒரு பங்கு எங்களைப்போல இரண்டு பேர்கிட்டயும் குறையில்லை ஆனால் இன்னும் வேளையும் பகவான் அனுக்ரஹமும் கிடைக்கலை என்ற கேடகரியாம்.

கல்யாணமான புதுசில குழந்தை தானே பொறக்கும், வேலையில் நல்ல பேர், அவார்டு, ரிவார்டெல்லாம் வாங்கணும் என்ற வேட்கைத்தான் இருந்தது. மூணு வருஷத்துக்கப்புறம் ஜாலியாக ஊர் சுற்றலாம், கேர்ஃப்ரீ லைஃப் குழந்தை சீக்கிரம் பிறந்துடும் என்ற எண்ணம் இருந்தது. இன்னும் ஓரிரு வருஷத்துக்கப்புறம் தான் அது ஒரு பாக்கியம், எல்லாருக்கும் நெனச்ச மாத்திரத்துல கெடச்சுடாதுங்கறது உறைச்சுது. தெரிந்தவா எல்லாரும் குழந்தையும் குட்டியுமா ஆனபின் அவாளோட உலகம் வேறாயிடுத்து.

குழந்தையில்லாத வேதனையை சொல்லால வர்ணிக்க முடியாது. மனசுல ஒரு குற்ற உணர்வு, இயலாமை, எந்த ட்ரீட்மென்ட் வேலை செய்யும் என்ற குழப்பம், சுவாமியைச் சரணடையணுமா, நம்பிக்கையை விடணுமான்னு மனசு பண்ணும் தர்க்கம் இப்படி தினந்தினம் எமோஷனல் ரோலர்கோஸ்டர்தான். எல்லாருடைய மலிவான அட்வைஸ் வேற மனசை இன்னமும் ரணப்படுத்தும். எதையும் தன்ன‌ம்பிக்கையோட தைரியமா பண்ணியே பழகின எங்க ரெண்டு பேருக்கும் கூட நம்ம கைல எதுவும் இல்லங்கற ஒரு ஹெல்ப்லெஸ்னெஸ் தாங்க முடியாம இருந்தது. திருக்கருகாவூருக்குப் போய் கர்பரக்ஷாம்பாள தரிசனம் பண்றது, புள்ளையாண்ட வடிவத்துலேயே இருக்கற புட்லூர் பூங்காவனத்தம்மன தரிசிச்சு தொட்டில கட்டறது, கருவளர்க்கும் நாயகியாம் அகிலாண்டேஸ்வரியை கருவளர்ச்சேரிக்குப் போய் வேண்டிண்டு வரதுன்னு எங்கள் இந்தியா ட்ரிப்பெல்லாம் தீர்த்த யாத்திரையாதான் இருந்தது.

எட்டு வருஷம்தானே ஆறது, உங்களுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும்னு எல்லாரும் சொல்லறதக் கேட்டு அலுத்துப் போச்சு. வித்யாவை அப்படியே கொண்டிருக்கற‌ அவ பொண்ணு அக்ஷயாவைப் பாக்கும்போதோ ராஜோட பார்ட்னர் விக்ரம்சிங்கப் போலயே டர்பனக் கட்டிண்டு வந்த குட்டி ஆர்யாசிங்கைப் பார்ட்டியில் பார்த்தபோதோ எனக்கும் ராஜுக்கும் சொல்ல முடியாத சந்தோஷம். ஜனனம்கிறது எத்தனை ஆச்சரியமான விஷயம். மனுஷ மூளைக்கு அப்பாற்பட்ட அற்புதமா உணர்றேன். அப்பதான் லாவண்யா எங்களுக்கு வழிகாட்டினா. ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாமேன்னு அவ எங்கிட்ட சொன்ன அன்றைக்கு வீட்டுக்கு வந்து எப்படி குலுங்கிக் குலுங்கி அழதேன் தெரியுமா? 'சீ, அசடு. அது ஒரு கொடுப்பினை'ன்னு அன்னைக்கு யாருமே சொல்லலயே எங்கிட்ட. ஆனா வண்டு ரீங்காரம் போடற மாதிரி மனசு அதையே அசை போட்டது. ஒரு வார மனப்போராட்டத்துக்கப்புறம் ராஜ்கிட்ட இதை சொன்னவுடன் அவர் மொகத்துல மில்லியன் டாலர் ஸ்மைல்னு சொல்லுவாளே அதுமாதிரி ஒரு பெரிய சிரிப்பு. அவர் மனசுல பல நாளாய் அதே எண்ணம் ஓடிண்டிருந்திருக்கு. சொல்லத் தெரியாம திண்டாடியிருக்கார்.

தத்து எடுக்கலாம்னு குதூகலமா முடிவெடுத்தாலும் எத்தன குழப்பங்கள், எத்தன பயம். நம்ம மனசை எடைபோட நமக்கு நாமே வச்சுக்கிற பரிட்சை. இதுல கேள்வியைத் தயாரிக்கறதும், பரிட்சை எழுதறதும் நாமளேதான், திருத்தறதும் நாமளேதான். குழந்தை ஆணா, பொண்ணா, கருப்பா, சேப்பா, எந்த ஜாடையில இருக்கணும், எவ்வளவு ஒசரம் இருக்கணும், குழந்தையோட அப்பா அம்மா படிச்சிருப்பாளோ, புத்திசாலியா இருக்குமோ என்றெல்லாம் தராசில வச்சு அளந்து எடுத்துண்டு வர இதென்ன உப்பு புளியா? உயிருள்ள ஒரு குழந்தை! எங்க வாழ்க்கைக்கு உயிர் தரப்போற அம்பாளோ, சிவனோ! அந்தத் தெளிவு வந்தவுடனே லாவண்யாகிட்ட போய் நின்னேன். அவள் அடாப்ஷன் ஏஜென்சியில் வாலன்டியராய் வேலை செய்வதால் எல்லா விவரமும் கொடுத்தாள். பர்த் சர்டிஃபிகேட், மேரேஜ் சர்டிஃபிகேட், பேங்க் ஸ்டேட்மென்ட், மெடிகல் ரிப்போர்ட், போலீஸ் ரிபோர்ட், ஐஎன்எஸ் கிட்டேந்து அப்ரூவல் எல்லாம் தயார் பண்ணி ஊருக்கு கிளம்ப ஒன்பது மாசமாச்சு. மே மாதம் மதர்ஸ் டே அன்னைக்கு நோ அப்ஜெக்ஷன் கெடச்சாச்சுன்னு தெரிஞ்ச‌ உடனே மனசளவுல எனக்குள்ள என் குழந்தை யுகா உருவாயிட்டா. ஆமாம் ஃபோட்டோக் கூட பார்க்காமத்தான் யுகாவை எதிர்நோக்கிப் புறப்பட்டோம்.

அந்த அடாப்ஷன் ஹோமுல பத்து மாச யுகாவை என் கையில் கொடுத்தப்ப சொல்ல முடியாத பூரிப்பு. இதுதான் பிரசவ வலியா? பட்ட கஷ்டமெல்லாம் அந்த பிஞ்சுப் பாதத்தை தொட்டவுடனே பறந்து போயிடுமா என்று விக்கித்துப் போனேன். நான் இந்த அற்புதமான குழந்தைக்கு அம்மாவா? என்னையே நம்பி இந்த ஜீவனை கடவுள் ஒப்படைச்சிருக்காரான்னு என்னையே கிள்ளிப் பாத்துக் கொண்டேன். அதுக்க‌ப்புற‌ம் விறுவிறுன்னு எங்க வாழ்க்கைக்குள்ள‌ நுழைந்து எங்க‌ உல‌க‌மே அவ‌தான்னு ப‌ண்ணிட்டா! யுகாவுக்கு காது கேக்காது. ஆனா க‌ண்ணு என்ன‌மா பேசும் தெரியுமா? அவ‌ளோட‌ பேசறத்துக்காக‌ நானும் இவ‌ரும் சைன் லாங்குவேஜ் க்ளாசுக்குப் போய் க‌த்துண்டு வ‌ந்தோம்.

எல்லாராத்தையும் போல எங்காத்துலயும் ராஜோட ஆத்திலயும் யுகாவை ஆரம்பத்துல ஏத்துக் கொள்ள முடியாமத்தான் இருந்தது. "என்ன குலமோ என்ன கோத்திரமோ. வேணும்னா அந்த ஹோமுக்கு ரெண்டு மூணு லட்சம் டொனேட் பண்ணிடேன்" என்றெல்லாம் பேசினார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் பலபேரும் வாழ்த்து சொல்றதுக்கு பதிலா துக்கம்தான் விசாரிச்சா. இட்ஸ் ஓகே, போனா போறது அப்படீங்கற மாதிரிதான் பேசினா. த‌த்து எடுத்து வ‌ள‌க்க‌ற‌து என்ன‌ பெரிய‌ பாவ‌மா? இல்லை ஏளனமா? அது ஒரு வ‌ர‌ம். 'தெய்வ‌ம் மனுஷ்ய‌ ரூபேண' அப்ப‌டின்னு சொல்லுவாளே. அதேதான் எங்க‌ யுகா. நாளாக‌ ஆக‌ சொந்த‌க்காராளையும் ந‌ண்ப‌ர்க‌ளையும் யுகாவே கொள்ளை அடிச்சுட்டா! க‌ள்ள‌மில்லாத‌ அந்த‌ச் சிரிப்பும் விக‌ல்ப‌மில்லாத‌ ஒட்டுத‌லும் யாரைத்தான் மாத்தாது? யுகாவுக்கு இர‌ண்டு வ‌ய‌து ஆன‌போது நான் த‌ன்ய‌னை பிள்ளையாண்டேன். எங்க‌ ச‌ந்தோஷ‌ம் இரட்டிப்பாச்சு. யுகாவும் த‌ன்ய‌னும் எத்த‌னை பிரிய‌மா இருக்கா தெரியுமா? த‌ன்ய‌னும் அண்ணா ஆக‌ ஆசைப்ப‌ட‌, நாங்க‌ளும் கென்யாவுக்கு புற‌ப்ப‌ட‌றோம். இன்னொரு அம்பாளின் ப்ர‌வேச‌த்தை எதிர் நோக்கிண்டிருக்கோம். பாலிகான்னு பேர் வெச்சுட்டோம்.

நம்ம வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் நிறைய அர்த்தம் இருக்கு. பூனை கண்ணை மூடிண்டா ஒலகமே இருண்டுடும்னு நெனக்கற மாதிரி நமக்குப் புலப்படாததெல்லாம் உண்மையில்லைன்னு எண்ணக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவா! அது எத்தன உண்மை! என் கல்யாணத்துல அம்மாவும்,மாமியாரும், அத்தையும், சித்தியும், மாமியும், பெரிம்மாவும் தெளிச்ச பாலிகையெல்லாம் எங்காத்துல மழலையா பூத்து குலுங்கறது! பூவுல கருப்பேது, செகப்பேது, பெருசேது, சிறுசேது? வீடு நெறய மணம் கமழறது மட்டும்தான் தெரியறது!

அபர்ணா பாஸ்கர்

© TamilOnline.com