உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்
மணி மூன்று. சுமி தன்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டாள். அன்று காலை நடந்த சிறு சம்பவம் அவளை ஆயாசப்படுத்திற்று. ஆனாலும் அது மகன் ரவிக்குத் தெரியாதவாறு தன்னை உற்சாகமாக்கிக் கொண்டாள். நான்கு வயதான அவனைச் சாயந்திர வேளையில் விளையாட அந்த காம்ப்ளெக்ஸில் இருக்கும் ப்ளே சென்டருக்கு அழைத்துப் போவது வழக்கம். தூங்கிக்கொண்டு இருந்த ரவியை, "குட்டி, எழுந்திரும்மா... விளையாடலாம் வா... உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருப்பாளே. வா...வா...' என்று கூறியபடியே முத்தமிட்டு எழுப்பினாள். அவன் இன்று சரியான மூடில் இருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

ரவி, "வேணாம் போ" என்று முறுக்கினான். எதிர்பார்த்ததுதான். விடாமல் சிரித்தபடி, "என்ன ஆச்சு குட்டிக்கு? ஷ்ரேயா, பாலா எல்லாம் வெயிட் பண்ணுவாளே. நாம போக வேணாமா?" என்று கேட்டு அவனைத் திருப்பினாள். அவன், "வேணாம்..போ. நா வரலை" என்றான். குரலில் அழுகைக்கு ஆயத்தம் தெரிந்தது. சமாளித்தாக வேண்டும். கொஞ்சினாள். கெஞ்சினாள். பத்து நிமிட போராட்டத்தின்பின் தாயும் மகனும் ப்ளே சென்டர் வந்தனர்.

மகனை விளையாட அனுப்பிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தாள். குழந்தைகளைப் பார்த்ததும் விளையாடும் ரவி அன்று சுணங்கியதை அவளால் இங்கிருந்தே உணர முடிந்தது. எல்லாம் காலை நடந்த சம்பவத்தின் எதிரொலி.

இதுதான் நடந்தது. அன்று காலை ரவியின் அத்தை வந்திருந்தார். மூன்று பேர் அமரக்கூடிய சோஃபாவில் அவர் அமர்ந்து இருந்தார். ரவி ஓடிவந்து பக்கத்தில் உட்கார்ந்தவன் காலை அவர்களை உதைப்பதுபோல் அவர்கள்மேல் போட்டுவிட்டான். தெரியாமல்தான் என்றாலும், ரகுவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. குழந்தையை மிரட்டியதுடன் சாரி கேட்கவும் வற்புறுத்தினான். இதுநாள் வரை அவ்வளவாக உரக்கப் பேசாத அப்பா இன்னொருத்தர் எதிரில் மிரட்டியது ரவிக்குக் குழப்பத்தை உண்டுபண்ணியது.

அவன் உலகில் சாரி சொல்வது என்பது கொஞ்சம் பெரிய விஷயம்தான். இருந்தாலும் அப்பா ரொம்ப மிரட்டவே ஏன், என்ன என்று புரியாமலே துக்கம் நெஞ்சை அடைக்க சாரி சொல்லிவிட்டு பெட்ரூமுக்குள் ஓடிவிட்டான். ரகுவின் அக்காவும் தம்பியைக் கடிந்து கொண்டார். சுமியும் இதற்குப் போய் இவ்வளவு கடுமையாக கண்டிக்க வேண்டுமா என்றுத் தன் அபிப்ராயத்தை வெளியிட்டாள். ஆனால் ரகு, "இதை இப்படியே விட்டால் பின்னாளில் நமது கலாசாரத்தில் மதிப்பு இல்லாமல் போய்விடும். அதனால இப்பவே பெரியவர்கள் எதிரில் காலை நீட்டக் கூடாதுன்னு நாமதான் சொல்லித் தரணும்" என்றான்.

அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் மகன் பாதிக்கப்பட்டதை உணர்ந்த சுமி, சற்று மெள்ளத்தான் குழந்தைகளைக் கையாள வேண்டும் என்பதை ரகுவுக்கு எப்படிச் சொல்வது என்று குழம்பினாள். அன்று ப்ளே சென்டருக்கு அந்த காம்ப்ளெக்ஸைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில் சுமி அவர்கள் உரையாடலால் ஈர்க்கப்பட்டு அதைக் கவனிக்க ஆரம்பித்தாள்....

"ராதா, நீ குழந்தைகளை வளர்த்தவிதம்தான் சரியோன்னு அடிக்கடி நா நெனைச்சுக்கறேன்" என்று முதல் பெண்மணி கூறினார்.

ராதா என்ற அந்த பெண்மணி, "ஏன் அப்படி சொல்றே?" என்றாள்.

"ஆமாம். நாம 20 வருஷமா பழகறோம். உனக்கு தெரியாதது இல்லே. என் பெண், ரொம்ப கண்டிக்கிற தன் அப்பாவை எதிர்க்கறதா நெனைச்சு தன்னையே அழிச்சுக்கறா. என்னால தாங்க முடியலே. எவனோ ஒருத்தனோட சுத்தறா. இந்த மனுஷன் நல்ல நாள்லயே பொண்ணுனு கூட பாக்காம அடிப்பார். இது தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு நெனைச்சா அடிவயத்தைக் கலக்கறது. நானும் எவ்வளவோ கெஞ்சிப் பாத்துட்டேன் அவள்கிட்டே. கேக்க மாட்டேன்றா. அப்பா எல்லார் எதிர்லேயும் தலை குனியணும். உன்னோட டேஸ்ட்டுக்கு ஏதாவது மதிப்பு இருக்கா இந்த வீட்ல? ஆனா நா அப்படி இருக்க மாட்டேன். பார்த்துண்டே இரு. என் லவர் ஒரு மனுஷன், உன் புருஷன்மாதிரி மிருகம் இல்லேன்றா. உன் வீட்ல குழந்தைகளுக்கு நீங்க ரெண்டு பேரும் சுதந்திரம் கொடுத்து மதிச்சு வளர்க்கறீங்க. உன் பையனைச் சுதந்திரமா வளர்த்து சந்தோஷமா இருக்கீங்க" என்றார்.

ராதா, "விஜி, நீதான் நினைச்சுண்டு இருக்கே, நாங்க சந்தோஷமா இருக்கறதா. என் பையனும் ஒண்ணும் சுகமில்லை. முதல்ல இருந்தே சுதந்திரம்ன்ற பேர்ல நாங்க அவன் வாழ்க்கையில தலையிடற தகுதியை இழந்துட்டோம். அவ்வளவுதான். வீட்லேயே பார் வெச்சு இருக்கான். திடீர்னு ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் வந்தா நாங்க ரெண்டுபேரும் எங்க வீட்லேயே எங்க ரூம்ல சிறை இருக்கோம். ரொம்பக் கொடுமைதான். என்ன பண்றதுன்னு தெரியலே. வெளியே சொல்ல முடியுமா சொல்லு. முழுங்கிண்டு, வெளியில சிரிச்சுண்டு வீட்ல அழறோம். இதை நினைச்சா, கலா நீ உன் பொண்ணை உன் ஃப்ரெண்ட் மாதிரி வளர்த்து இருக்கறதுதான் சரின்னு நான் சொல்லுவேன். அன்னைக்குக்கூட உன் பொண்ணு எங்க அம்மா மாதிரி இல்லேன்னு பெருமையா பேசினா" என்றார்.

உடனே கலா, "பேசுவா பேசுவா. அப்படிச் சொல்லி சொல்லியே அவ ஆடற ஆட்டத்துக்கெல்லாம் நான் தாளம் போடும்படி வெச்சுட்டா. எம்.பி.ஏ. படிச்சு இருக்கா. ரொம்ப புத்திசாலி. ஆனா பிரின்ஸிபிள்னு சொல்லித் தன் வாழ்க்கையை கெடுத்துக்கறா. ஒரு வேலையிலேயும் ஒரு வருஷத்துக்கு மேலே தங்கறது இல்லே. சரி. கல்யாணம் பண்ணிக்கோன்னா என் பிரின்ஸிபிளோட ஒத்துப் போறவனைத் தேடறேன். நீயும் ஒத்துண்டாத்தான் கல்யாணம்னு என் வாய அடைக்கறா. இப்பவே வயசு 30 ஆறது. இப்பச் சொல்லு. நா அவளோட பெஸ்ட் ப்ஃரெண்டுன்னு அவ சொல்லறதை நா எப்படி ஏத்துக்கறதுன்னு" என்றார்.

அவர்கள் பேசியதில் அவர்கள் அதிர்ந்ததைவிட சுமி அதிகமாக அதிர்ந்தாள். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். ப்ளீஸ்! எது சரி? குழந்தைகளோடு பிரச்சனை இல்லாமல் இருக்க முடியுமா?

சந்தானம்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com