மனமிருந்தால்....
அந்த அடர்ந்த காட்டில் இருந்த வயதான மரத்தின் பொந்துக்குள் முயல் ஒன்று வசித்தது. கோடைக்காலம் வந்ததால் காட்டில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் முயல் தற்காலிகமாக வேறிடத்திற்குச் சென்றது. குடிநீர்ப் பஞ்சம் நீங்கியதும் மீண்டும் தன் பொந்துக்குத் திரும்பியது. ஆனால், அங்கே மைனா ஒன்று குடும்பத்துடன் தங்கியிருந்தது.

அதைக் கண்ட முயல் சீற்றத்துடன் "மைனாவே, இது என்னுடைய இருப்பிடம். பல வருடங்களாக நான் இங்கே வசித்து வருகிறேன். நீ உடனே இந்த இடத்தை விட்டுச் செல்" என்றது.

"ஐயா, நான் இங்கு வந்தபோது இந்த இடம் காலியாகவே இருந்தது. அதனால் நான் இங்கேயே என் குடும்பத்துடன் வசிக்க ஆரம்பித்தேன். என் சிறிய குஞ்சுகளை அழைத்துக்கொண்டு நான் எங்கே போவேன்? தயவு செய்து நீங்கள் வேறிடம் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றது மைனா பணிவுடன்.

முயலுக்குக் கோபம் வந்தது. "என் இடத்தை விட்டு என்னை வேறிடம் போகச் சொல்ல நீ யார்?" என்று சண்டை போட்டது.

"நான் வந்தபோது இந்த இடம் காலியாகத்தான் இருந்தது. அதனால் நான் போக முடியாது" என்று எதிர்த்துச் சண்டையிட்டது மைனா. சண்டை தொடர்ந்தது.

"சரி, நாம் இருவரும் யாராவது பெரியவர் ஒருவரிடம் ஆலோசனை கேட்போம்" என்றது முயல். மைனாவும் ஒப்புக்கொண்டது. இரண்டும் தேடி அலைந்து வயதான பூனை ஒன்றைக் கண்டன. அதனிடம் தங்கள் பிரச்சயைச் சொல்லின. வஞ்சக எண்ணம் கொண்ட பூனை மைனாவும், முயலும் அருகில் வரும்போது அவற்றைப் பிடித்து கழுத்தைத் திருகித் தின்றுவிட எண்ணியது. தனக்குக் காது கேட்காததுபோல் நடித்து, "இதோ பாருங்கள், எனக்கு மிகவும் வயதாகி விட்டது. காது கேட்பதில்லை. என் காதருகில் வந்து சொல்லுங்கள்" என்றது.

அதை நம்பிய முயலும் மைனாவும் பூனையின் இரண்டு புறமும் நின்று பேச ஆரம்பித்தன. அவற்றைப் பிடிக்க முயற்சித்தது பூனை.

சீற்றம் கொண்ட மைனா பூனையை பலமாகக் கொத்தியது. மற்றொரு புறம் முயலும் ஆத்திரத்துடன் பூனையைக் கடித்தது. "ஓஹோ, எங்களை ஏமாளிகள் என்று நினைத்தாயா அற்பப் பூனையே! உன் தந்திரம் இங்கே பலிக்காது. இனிமேலும் இங்கே இருந்தால் உன் கண்களைக் கொத்தி விடுவேன்" என்று மிரட்டியது மைனா. அதை ஆமோதித்தது முயல்.

உடனே பயந்து அவ்விடம் விட்டு ஓடியது பூனை. முயல் மைனாவிடம், "நண்பா, நமக்குள் ஏன் சண்டை போட வேண்டும்? நாம் ஏன் ஒன்றாக வசிக்கக் கூடாது? நாம் ஒன்றும் எதிரிகள் அல்லவே!" என்றது.

"ஆம் நண்பா. மனமிருந்தால் மார்க்கமுண்டு இல்லையா?" என்றது மைனா. இரண்டும் சேர்ந்து தங்கள் வசிப்பிடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பின.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com