மெல்லிசை மன்னர்களுள் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி (91) சென்னையில் காலமானார். 1922ல் திருச்சியில் ஓர் இசைக் குடும்பத்தில் தோன்றிய ராமமூர்த்தி முதலில் வயலின் பயின்றார். சிறு வயதிலேயே கச்சேரிகளில் வயலின் வாசிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் பிரபல இசைக்கலைஞரான சி.ஆர். சுப்பராமன், இவரைத் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். பல படங்களில் பின்னணி வாத்திய கோஷ்டி ஒருங்கிணைப்பாளராகவும், வயலின் கலைஞராகவும் பணியாற்றினார். தொடர்ந்து ஆர். சுதர்ஸனம், டி.ஜி. லிங்கப்பா போன்றவர்களிடமும் உதவியாளராகப் பணிபுரிந்து திரையிசை நுணுக்கங்களைக் கற்றார். பின் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து மெல்லிசை இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி எனக் கொடிகட்டிப் பறந்தார். இவர்கள் இசையமைத்த பல படங்கள் சாகாவரம் பெற்றவை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்'தான் இருவரும் இணைந்து செய்த கடைசிப் படம். அதன்பின் தனித்து இசையமைக்கத் தொடங்கினார் ராமமூர்த்தி. கிட்டத்தட்ட 20 படங்களுக்கு இசை அமைத்தார். கலைஞர் எழுதி, சுசீலா பாடிய 'மறக்க முடியுமா' படத்தின் 'காகித ஓடம்' பாடலுக்கு இசை இவருடையதுதான். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஸ்வநாதனுடன் இணைந்து சத்யராஜ் நடித்த 'எங்கிருந்தோ வந்தான்' படத்துக்கு இசையமைத்தார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். இந்த இசை இரட்டையருக்கு சத்யபாமா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. கடந்த ஆண்டு ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இருவருக்கும், திரையிசைச் சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. "எங்கே நிம்மதி", "கண்போன போக்கிலே கால் போகலாமா" போன்ற பாடல்களுக்குப் பின்னணி வயலின் இசை டி.கே. ராமமூர்த்திதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள்.
|