பத்மபூஷண் லால்குடி ஜெயராமன்
பிரபல கர்நாடக வயலின் கலைஞரும், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவருமான இசைமேதை லால்குடி ஜெயராமன் (82) சென்னையில் காலமானார். திருச்சி, லால்குடி அருகே உள்ள இடையாத்தமங்கலத்தில் செப்டம்பர் 17, 1930ல் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். வயலின் மேதையான தந்தை வி.ஆர். கோபால ஐயரிடம் இசை பயின்றார். விரைவில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த ஜெயராமன், தனது பன்னிரண்டாம் வயது முதல் கச்சேரிகளில் பிரபல இசைக்கலைஞர்களுக்கு வயலின் வாசித்து அதற்கென்று ஒரு தனி அந்தஸ்தை ஏற்படுத்தினார். எம்.எம். தண்டபாணி தேசிகர், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்பிரமணிய ஐயர், மதுரை மணி ஐயர், செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை சோமு, ஜி.என். பாலசுப்பிரமணியம், மகாராஜபுரம் சந்தானம் எனப் பிரபல இசைக்கலைஞர்கள், ஜெயராமன் தங்களுக்கு வாசிப்பதை பெருமையாகக் கருதினர். சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய லால்குடி ஜெயராமன், பல கீர்த்தனைகளை, சாகித்யங்களை இயற்றியிருக்கிறார். கடினமான ராகங்களாகக் கருதப்படும் 'நீலாம்பரி', 'தேவகாந்தாரி' போன்ற ராகங்களில் வர்ணங்கள் அமைத்து இசையுலகைப் பிரமிக்கச் செய்தவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், சிங்கப்பூர், மலேசியா, மணிலா என உலகெங்கும் பயணம் செய்து கர்நாடக இசையைப் பரப்பியவர். அதன் பெருமையை வெளிநாட்டவரும் உணரச் செய்தவர். இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்தது. 'வாத்ய சங்கீத கலாரத்னா', 'சங்கீத சூடாமணி', 'நாதவித்யா திலகம்', 'நாதவித்யா ரத்னாகர' உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். சங்கீத நாடக அகாதெமி விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் அரசவைக் கலைஞராக இருந்திருக்கிறார். 2006ல் 'சிருங்காரம்' திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காகத் தேசிய விருது பெற்றார். தனக்கென ஒரு தனிப் பாணியை ஏற்படுத்தி ஏராளமான சிஷ்ய கோடிகளை உருவாக்கியிருக்கிறார் லால்குடி ஜெயராமன். சங்கரி கிருஷ்ணன், சாகேதராம், வித்யா சுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, உஷா ராஜகோபாலன், எஸ்.பி. ராம் போன்ற சீடர்கள் உலகெங்கும் குருவின் பெருமையைப் பரப்பி வருகின்றனர். இவரது மனைவி ராஜலட்சுமி. மகன் லால்குடி கிருஷ்ணன், மகள் ஜெ. விஜயலட்சுமி இருவரும் வயலின் கலைஞர்களே.© TamilOnline.com