காத்திருப்போம், கவனிப்போம்....
அன்புள்ள சிநேகிதியே,

எனக்குச் சமீபத்தில் கிடைத்த ஒரு அருமை சிநேகிதியின் சார்பாக எழுதுகிறேன். புதிதாக வீடு கட்டிக்கொண்டு போன எங்கள் சுற்றுப்புறத்தில், நான் என் 5 வயதுப் பெண்ணோடு எங்கள் நாயை நடத்திப் போய்க் கொண்டிருந்தோம். காரை நிறுத்தி மெயில் பாக்ஸிலிருந்து கடிதங்களை எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். இந்திய முகமாகத் தெரியவே நான் சிரித்தேன். அவளும் பதிலுக்குச் சிரித்து எங்கள் நாயைக் கொஞ்சினாள். என் மகளைக் கொஞ்சினாள். மிகவும் பிடித்துப் போயிற்று எனக்கு. நடை முடிந்து வரும்போது, தன் வீட்டிற்கு வரச் சொன்னாள். அவள் வீடு வெளியிலேயே மிக அழகாக இருந்தது. உள்ளே இன்னும் எப்படி இருக்கும், எப்படி அலங்கரித்திருப்பார்கள் என்ற ஆர்வத்தில் நானும் போனேன். நாங்கள் 'கிரகப் பிரவேசம்' செய்து 10 நாள்தான் ஆயிருக்கும். இன்னும் எதுவும் செட் ஆகவில்லை. ஊரிலிருந்து வந்தவர்கள் வேறு தங்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவளை நான் திருப்பி அழைக்கவில்லை. விஷயத்தை மட்டும் சொன்னேன். "நீங்கள் எவ்வளவு லக்கி. நான் நிறையப் பேரைப் பார்த்தேன், உங்கள் வீட்டு விழாவின் போது" என்றாள்.

அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தபோது அங்கு குழந்தைகள் ஏதும் இல்லை என்று தெரிந்தது. செல்லப் பிராணிகள் ரொம்பப் பிடிக்குமாம். ஆனால் கணவருக்கு அலர்ஜி என்று சொன்னாள். அவளைப் பார்த்தால் மிகவும் சாதுவாகத் தெரிந்தது. நான் முதலில் வேலை பார்த்த கம்பெனியில்தான் அவள் சேர்ந்திருக்கிறாள். Professional என்பது தெரிந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் கொஞ்சம் யோசித்து பதில் சொல்வதுபோலத் தோன்றியது. அது அவளுடைய ஸ்டைல் என்று நான் நினைத்துக் கொண்டேன். அப்புறம் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். என்னுடைய பெண்ணிற்கும், நாய்க்கும் அவளை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவளுக்கு அப்பா, அம்மா இல்லை. மாமா, மாமி வளர்த்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். ஆனால் ஆந்திராவில் வளர்ந்திருக்கிறாள். தமிழ் அதிகம் பேசுவதில்லை. Arranged marriage. 8 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை என்ற சோகம் உள்மனதில் இருக்கிறது.

போன மாதம் அவர்கள் வீட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு 4 வயதுப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நல்லதுதான். பாவம், தனிமையாக உணர்ந்தாளே என்று சந்தோஷப்பட்டேன்.

இன்றைக்குத்தான் அவளை மறுபடியும் வாக் போனபோது பார்த்தேன். விருந்தினர்களைப் பற்றி விசாரித்தேன். "போனவாரம் தான் கிளம்பிப் போனார்கள், அம்மாவும், பிள்ளையும்' என்று சுரத்தில்லாமல் சொன்னாள். எனக்கு ஏதோ அசாதாரணமாகப் பட்டது. ஆனால் கேட்கவில்லை, எதுவும். அப்புறம் அவளே, "நானும் கூட நடக்கட்டுமா, கொஞ்சம் மனம் திறந்து பேசவேண்டும்" என்றாள்.

நான் பார்த்த அந்தக் குழந்தை அவள் கணவரின் அத்தை பேரன். அந்த அத்தை பெண் மிகவும் அழகானவள். Husband had a crush. இவர் சாதாரணக் குடும்பம். இந்தியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அத்தை இவரைவிட உயர்ந்த குடும்பத்திலிருந்து தன் பெண்ணுக்குப் பையன் பார்த்து, அவளும் அமெரிக்காவுக்கு வந்துவிட்டாள். தொடர்பு பல வருடங்களுக்கு விட்டுப் போயிருந்தது. போன வருடம், இவள் கணவருக்கு இந்தியாவிலிருந்து வந்த செய்தி: அத்தை பெண் ரொம்பவும் கஷ்டப்படுகிறாள், கணவரின் தொல்லை தாங்காமல்; இவர் போய் அவளுக்கு உதவி செய்து, கணவரிடமிருந்து மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அவர் குடும்பத்திலிருந்து வந்தது. முதலில் தலையிட மறுத்த கணவர், என் சிநேகிதி சொல்லி பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து, விவாகரத்துக்கு உதவி செய்து, இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அங்கே அவள் வேலை பார்க்க ஆரம்பித்தாள். Green Card activate செய்ய ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு வந்ததாகத் தெரிவித்தாள்.

அத்துடன் விஷயம் முடிந்தால் பரவாயில்லை. இப்போதெல்லாம் கணவர் அந்தக் குழந்தையைப் பற்றி அடிக்கடி பாசமாகப் பேசுகிறாராம். அப்புறம், இங்கேயே நம்முடன் அம்மாவும், பையனும் வந்திருந்தால் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவர்கள் இருந்த ஒரு மாதத்தில், இவள் வேலைக்குப் போகும்போது, கணவர் 'work at home' என்று வீட்டில் பலநாள் இருந்து விடுவாராம். எந்த அளவுக்கு அந்தக் குடும்பத்தை வெறுத்துக் கொண்டிருந்தாரோ, அதற்கு நேர்மாறாக அக்கறையும் பாசமுமாக இருக்கிறார். அடிக்கடி போன் செய்கிறார். "எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எப்படி, எதில் முடியப் போகிறதோ என்று தெரியவில்லை" என்றாள். அவள் கூறிய சில சம்பவங்களைப் பற்றி ஆராயும்போது எனக்கும் அந்தக் கவலை ஏற்பட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. வளர்த்தவர்கள் வயதாகி எங்கோ இருக்கிறார்கள். "பயப்படாதே, ஒன்றும் விபரீதமாக நடக்காது" என்று சொல்லி வைத்தேன். ஆனால் அப்படிச் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரியும். எனக்கு இதுபோல விஷயத்தில் அனுபவமும் இல்லை. நான் எழுதுவதை வைத்து, ஏதாவது உபாயம் சொல்ல முடியுமா? அவள் பயம் உண்மையானதுதானா, இல்லை, அவள் வயதை ஒத்தவள் என்பதால் எனக்கும் அப்படித் தோன்றுகிறதா என்பது தெரியவில்லை.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே,

நீங்கள் எழுதியதை வைத்து என்னால் எதுவும் தீர்மானிக்க முடியவில்லை. மனித உடலுக்கு என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் மனதில் ஏற்படும் வக்கிரங்களைக் கண்டுபிடிக்க எந்த உபகரணமும் இல்லையே. நாமே இப்போது ஒன்று நினைத்துக் கொள்வோம்; அதே விஷயத்தைச் சிறிதுநேரம் கழித்து வேறுவிதமாக நினைப்போம். உங்கள் சிநேகிதியின் பயம் உண்மையாக இருக்கலாம். வீண்பயமாகவும் இருக்கலாம். amber alert mode-ல் அவர் இருப்பது நல்லதுதான். அவருக்குத்தான் தெரியும் அவருடைய கணவரின் நடவடிக்கைகளின் போக்கில் பெரிய வித்தியாசம் இருக்கிறதா - அது குழந்தை பேரில் ஏற்பட்ட பாசமா அல்லது தாயின் பேரில் மறுபடியும் ஏற்பட்ட பரிவு, அன்பா என்று. கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்த நிலைமையில் சந்தேகத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால், நாமே அந்த உணர்ச்சிகளை விதைத்து வளரவிட்டு விடுவோம். நம் சந்தேகத்தை வெளிப்படுத்தும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதனால் உறவு பலவீனப்பட்டுவிடும். உள்மனதில் ஏற்படும் பயம் சிலசமயம் செய்யத் தகாததைச் செய்யத் தூண்டிவிடும். முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அந்தக் கணவரின் விழுமியங்கள் (Value System). அவர் நியாயம் பேசுவதில் ஏதாவது முன்னுக்குப்பின் முரணாகத் தெரிகிறதா; கடமை தவறியிருப்பாரா, ஒரு கொள்கைக்குப் பாடுபடுபவரா என்றெல்லாம் தெரிந்தால் ஓரளவுக்கு நம்மால் அவர்கள் செய்கைகளை அனுமானிக்க முடியும். அதுவும் ஓரளவுக்குத்தான். உணர்ச்சிகள் கரை புரண்டு ஓடும்போது உள்நியாயம் பின்வாங்கிவிடும். உங்கள் சிநேகிதியிடம் அவருடைய values என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் கொஞ்சம் அந்த வழியில் நீங்கள் உதவ முடியும். இப்போதைக்கு we have to wait & watch. நிலைமை மாறினால், ஒரு சம்பவத்தை விவரித்து மறுபடியும் இந்தப் பகுதிக்கு எழுதுங்கள். அந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல சிநேகிதியாக நீங்கள் இருந்து உதவி செய்வது மனதிற்கு இதமாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com