அறையின் ஒருபுறத்தில் பரிசுக் கோப்பைகள். மறுபுறம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல்கள், சட்டம், இலக்கியம், ஆன்மீகம் என்று புத்தகங்கள். அடர்ந்த மீசைக்குப் பின்னால் மலர்ந்த சிரிப்பு. "வாங்க" என்று வரவேற்றவர், "முன்னதாகவே வந்துட்டீங்களே!" என்கிறார். அவர் நடராஜ் ஐ.பி.எஸ் (ஓய்வு). காவல்துறை, பொருளாதரக் குற்றப் பிரிவு, அதிரடிப்படை, மனித உரிமைக் கழகம், சிறைத்துறை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என, தான் பணியாற்றிய அனைத்திலும் முத்திரை பதித்தவர். எளிமை கலந்த 'கறார்' அதிகாரி. கலை, இலக்கியம், இசை, சமூகநலம் எனப் பல்துறை நாட்டம் இவரது சிறப்பு. நேப்பாளி உட்படப் பல மொழிகள் அறிந்தவர். வயலின் வாசிப்பார். எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், இசை விமர்சகர், சமூக சிந்தனையாளர் என்று பரிமளிக்கிறார். இவரது வலைப்பக்கம்: அகம்-புறம். இவரை வெயிலடர்ந்த ஒரு முற்பகலில் சந்தித்தோம். அதிலிருந்து...
கே: நடராஜ், ஐ.பி.எஸ். ஆனதற்கான தூண்டுகோல் எது? ப: எனது பூர்வீகம் பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்ப்பள்ளம். அப்பா வழியில் எல்லாருமே மகாத்மா காந்திஜியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஊறியவர்கள். சித்தப்பா பூர்ணம் சோமசுந்தரம் நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் இருந்தார். என் அப்பா பாளையங்கோட்டையில் இண்டர்மீடியட் படித்தபின் காந்திய சிந்தனைகளை கிராமம் கிராமமாகச் சென்று பரப்பினார். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னைதான். ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். கல்லூரிப் படிப்பை விவேகானந்தா மற்றும் பிரசிடென்சி கல்லூரியில் முடித்தேன். இந்தியா 1962, 1965, 1971 என மூன்று போர்களைச் சந்தித்தது. அப்போது நான் இளைஞன். அந்தக் காலத்து இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுபோன்ற கனவுகள் இருந்தன. எனக்கும் யூனிஃபார்ம் அணிந்த வேலையில் சேரவேண்டும் என்ற கனவு இருந்தது. நான் பள்ளியில் படிக்கும்போதே ஏ.சி.சி. (Auxiliary Cadet Corps), என்.சி.சி. போன்றவற்றில் பங்கேற்றேன். அன்றைய இளைஞர்களுக்கு அரசு உத்தியோகம் ஒன்றுதான் வழி. வங்கிகள் நாட்டுடைமை ஆன பின்னர் அவற்றில் வேலை வாய்ப்பு வந்தது. இந்தச் சூழலில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஐ.பி.எஸ்.ஸில் தேர்வு பெற்றேன். என்னுடைய பணி சொந்த மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் துவங்கியது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது.
கே: உங்கள் இலக்கிய ஆர்வத்திற்கு தந்தையும் ஒரு காரணம் என்று சொல்லலாமா? ப: நிச்சயமாக. என் அப்பா பூர்ணம் ராமச்சந்திரன் (எழுத்தாளர் 'உமாசந்திரன்'), சித்தப்பாக்கள் பூர்ணம் விஸ்வநாதன், பூர்ணம் சோமசுந்தரம், பூர்ணம் பாலகிருஷ்ணன் எல்லோருக்குமே மொழி, இலக்கிய ஆர்வம் உண்டு. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று அவர்கள் பலமொழி வல்லுநர்கள். பலமொழி இலக்கியங்களைப் பற்றி அப்பா, சித்தப்பா நண்பர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருப்பார்கள். சிறு பையனான நான் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். கணையாழி, கலைமகள், அமுதசுரபி ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். கி.வா.ஜ., சி.சு. செல்லப்பா ஆகியோர் வந்து உரையாடுவார்கள். இலக்கியம், புதுக்கவிதை என்று பல தலைப்புகளில் பேசுவார்கள். ஒருமுறை நானும் என்னுடைய தம்பியும் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கி (அவ்வளவு சீக்கிரத்தில் பர்மிஷன் கிடைக்காது) சினிமாவுக்குப் போகத் தயாராக இருந்தோம். எதேச்சையாக சித்தப்பா பூர்ணம் விஸ்வநாதன் வந்தார். அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசக் கூடியவர். அன்று வந்ததும் அப்பாவுடன் பேச ஆரம்பித்தார். நாங்களும் உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தோம். பேச்சில் லயித்த நாங்கள் சினிமாவே வேண்டாம் என்று முடிவுசெய்து விட்டோம்! அவ்வளவு சுவாரஸ்யம். இவைதாம் எனது இலக்கிய ஆர்வத்திற்கு அடித்தளம். நேரமின்மையால் என்னால் புத்தகம் எழுத இயலவில்லை. ஆனால் பணிசார்ந்த கட்டுரைகளை நிறைய எழுதியிருக்கிறேன். எங்கே பணிக்காகச் சென்றாலும் அங்கே இதழ்கள் ஆரம்பித்து நடத்தியிருக்கிறேன். பணி ஓய்வுக்குப் பின் புத்தகம் எழுதும் எண்ணம் வந்திருக்கிறது. 'கதவுகள் சொல்லும் கதைகள்' என்று தலைப்புகூட வைத்திருக்கிறேன்.
கே: 'பூர்ணம்' என்ற அடைமொழி எப்படி வந்தது? ப: முன்னீர்பள்ளம் ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் பூர்ணகிருபேஸ்வரர். எங்கள் தாத்தாவின் பெயரும் அதுதான். அப்படித்தான்.
கே: வீரப்பன் அதிரடி வேட்டையில் பணியாற்றிய அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.... ப: வீரப்பனைப் பிடிப்பதற்காக STFல் (Special Task Force) பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம். நான் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். 2001ல் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டபோது மக்களுக்கும் அதிரடிப் படையினருக்கும் மிகப் பெரிய இடைவெளி இருந்தது. அதிரடிப் படையினரை மக்கள் வெறுத்தார்கள். மக்களது ஒத்துழைப்பு முற்றிலுமாகக் கிடையாது. அது இல்லாமல் வீரப்பனைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது. அவர்கள் உதவி இல்லாமல் வீரப்பனைப் பிடிக்க முடியாது. ஆனால் மக்களோ STFஐக் கிட்டத்தட்ட எதிரியாகப் பார்த்தனர். இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு, கர்நாடக அதிரடிப்படைகளுக்கிடையே ஈகோ யுத்தம் வேறு இருந்தது.
முதலில் நான் மக்களுக்கும் அதிரடிப்படைக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்தேன். வீரப்பன் ஒளிந்திருந்தது அடர்ந்த காடு. பல ஆயிரம் மைல் விரிந்தது. வீரப்பனைத் அதில் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். என்னிடம் ஆயிரக்கணக்கான வீரர்கள் இருந்தார்கள். ஆனால் 400 வீரர்கள் மட்டும் போதும் என்று சொல்லி விட்டேன். நம் குறிக்கோள் வீரப்பனை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டே இருப்பதல்ல. அவனைப் பிடிப்பது என்பதை நான் என் வீரர்களுக்கு உணர்த்தினேன். இந்தப் பகுதி மக்களுக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கிறோம், கிராம மக்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்வது நம் வேலை என்று எடுத்துச் சொன்னேன். அவர்களது ஒத்துழைப்புடன் மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினேன். படித்த STF இளைஞர்கள் அங்குள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பொறுப்பேற்றுப் பாடம் நடத்தினார்கள். மருத்துவ வசதியில்லாத கிராமங்களில் மருத்துவமனை அமைத்துத் தந்தோம். மருத்துவ முகாம்கள் நடத்தினோம். சிஎம்சி வேலூர், அப்போலோ, கேஜி ஹாஸ்பிடல்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகள் எங்களுக்கு உதவின. பாதையே இல்லாத இடங்களுக்கு நாங்கள் ரோடு போட்டோம். ரேஷன் பொருட்களை வண்டியில் வைத்து கிராமங்களுக்குக் கொண்டு சென்றோம். மக்கள் மனதில் எங்கள்மீது மெல்ல, மெல்ல நம்பிக்கை வந்தது.
மக்களின் ஒத்துழைப்புக் கிடைத்தது. வீரப்பன் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வரத் துவங்கின. அவன் புதைத்து வைத்திருந்த மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பணம் என எல்லாவற்றையும் கண்டறிந்து அரசிடம் ஒப்படைத்தோம். அவன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடக்கினோம். அதன்பின் அவனது கூட்டத்தில் ஊடுருவினோம். அதில் வெற்றி பெற்று இறுதியில் வீரப்பன் அழிக்கப்பட்டான். மக்களின் ஒத்துழைப்பில்லாமல் இது நடக்கச் சாத்தியமே இல்லை.
கே: சிறைத்துறை டிஜிபி ஆக இருந்தபோது நீங்கள் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை. அது பற்றி, சிறைக் கைதிகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! ப: பொதுவாக சிறைத்துறை என்பதை தண்டனையாகப் பார்ப்பார்கள். ஆனால் அது குற்றவியல் ஆளுமையில் மிக முக்கியமானது. நான் பொறுப்பேற்றுக் கொண்டதும் முதலில் கவனம் செலுத்திய விஷயம் சிறைக்கு வரும் கைதி ஒருவர் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் குற்றவாளியாகத் திரும்பாமல் இருக்க வேண்டும் என்பதில்தான். சிறை என்பது தண்டனைக் கூடமாக மட்டுமே இல்லாமல், தவறை உணர்ந்து திருந்தும் பயிற்சிப் பள்ளியாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினேன். இதற்காக நான் 9 மத்தியச் சிறைகள், 134 மாவட்டச் சிறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தேன். கைதிகளோடு உரையாடி அவர்களது குறைகள், பிரச்சனைகளைப் புரிந்து கொண்டேன். அதிகமாகச் சிறைகளைப் பார்த்த அதிகாரி நானாகத்தான் இருப்பேன்.
பெரும்பாலான குற்றங்களுக்குக் காரணம் சந்தர்ப்ப சூழ்நிலைதான்; அந்தச் சூழ்நிலைக்கும் வறுமை, படிப்பறிவின்மை போன்றவைதான் முக்கிய காரணங்கள்; ஆகவே அடிப்படையாக அவ்விஷயங்களில் மாறுதல் கொண்டுவர நினைத்தேன். சிறையில் இருப்பவர்களை 'இல்லவாசிகள்' என்று அழைக்க வேண்டும் என்பதை முதலில் அமல்படுத்தினேன். பின் அவர்களுக்கு கல்வி போதிக்க ஏற்பாடு செய்தேன். அதுபோல மனித ஆற்றல் வீணாகக் கூடாது என்பதற்காக வேலை கற்றுத்தரவும் ஏற்பாடு செய்தேன். பிரெட் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றை ஹாட் பிரெட்ஸ் மகாதேவன் அமைத்துத் தந்தார். இல்லவாசிகளுக்குப் பயிற்சி அளித்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. நாங்கள் தயாரித்த ரொட்டிகளை எங்கள் தேவைக்குப் போக, 'ஃப்ரீடம்' என்ற பெயரில் பேன்யன் போன்ற சேவை அமைப்புகளுக்கு இலவசமாக வழங்க முடிந்தது. இல்லவாசி ஒருவர் பரோலில் ஊருக்குச் சென்று சிறைக்குத் திரும்பியவர், வந்தவுடன் அழ ஆரம்பித்தார். என்ன என்று விசாரித்ததற்கு, "ஐயா, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க. இப்போ இங்கே வந்து படிக்க, எழுதக் கத்துக்கிட்டதுல யாரோட உதவியுமில்லாம, என்னால பஸ்ஸுல ஊர்ப்பேரைப் படிக்க முடிஞ்சது" என்று அழுதார். அதுபோல படித்த இல்லவாசிகளைக் கொண்டு, சிறையிலேயே படித்து தேர்வு எழுத தேர்வு மையம் அமைத்தோம். இதற்குப் பல எதிர்ப்புகள், தடங்கல்கள் வந்தபோதும் அவற்றை எதிர்கொண்டு சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தினோம். நல்ல பலன் கிடைத்தது. சிறையிலிருந்தே தேர்வு எழுதியவர்களில் 90% பாஸ் செய்துவிட்டனர்.
இல்லவாசிகளுக்கு தங்கள் குடும்பம், எதிர்காலம் குறித்து பல்வேறு மன அழுத்தங்கள் இருக்கும். பலருக்கு அதனால் மிகுந்த மன பாதிப்பும் இருக்கும். இதை மாற்ற நாங்கள் ஸ்ரீ சத்ய சாயி சேவை நிறுவனம், வாழும் கலை போன்ற அமைப்புகள் மூலம் யோகம், தியானம், பஜனை போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம். மகாத்மா காந்திஜியின் செயலாளர் வி. கல்யாணம் போன்றோரை அழைத்துப் பேசச் செய்தோம். இசைக் கலைஞர்களை அழைத்து சிறையில் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்தோம். சமீபத்தில் சுதா ரகுநாதன் கச்சேரி செய்தார். நூலகங்களை மேம்படுத்தினோம். அதை அறிந்து பல அமைப்புகள் புத்தகங்களை நன்கொடையாக அளித்தனர். கணினிப் பயிற்சி அளித்தோம். பெரிய மருத்துவ நிறுவனங்களை வரவழைத்துச் சிகிச்சை அளித்தோம். இல்லவாசிகளிடம் பல்வேறு திறமைகள் குவிந்திருந்தன. அவர்களில் சிலருக்குத் தையல் பயிற்சி அளித்து ஆடை தயாரிக்கும் பணியை மேற்கொள்ளச் செய்தோம். 'Inmate' என்ற வணிகப் பெயரில் அவை நன்கு விற்பனை ஆயின.
புழல் சிறை பல ஏக்கர் பரப்பில் விரிந்தது. அந்த இடம் தரிசாகக் கிடந்து வீணாக வேண்டாம் என்பதற்காகச் சிறு சிறு மரங்களை நடச் செய்தோம். இல்லவாசிகள் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை நட்டு, அதற்குத் தங்கள் பெயரையே வைத்து தாங்கள் செல்லும்வரை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். அது உங்கள் குழந்தை மாதிரி என்று சொல்லி ஒரு என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். ஆரம்பத்தில், அந்த மரம் வளர்ந்ததும் அதன்மீது ஏறி தப்பிப் போய்விடுவான், மரத்தின் மீதேறி ஸ்ட்ரைக் செய்வான் என்றெல்லாம் சொன்னார்கள். சுற்றுச்சுவர் ஓரமாக மரங்கள் நட வேண்டாம்; குட்டை மரங்கள் நடலாம் என்றெல்லாம் சொல்லி அந்தத் திட்டத்தை நிறைவேற்றினோம். அதுபோல இல்லத்திற்குத் தேவையான காய்கறிகள் போன்றவற்றை இல்லவாசிகளைக் கொண்டே பயிரிட்டு விளைவிக்க ஏற்பாடுகளைச் செய்தோம். இப்படிப் பல நற்பணிகளை மேற்கொண்டோம். இன்றைக்கும் அவை நல்ல பலன் தந்து கொண்டிருக்கின்றன. புழல் சிறையை இப்போது ஒரு சோலை போல இருக்கிறது. இவை தவிர நான் முக்கியமாக கவனம் செலுத்திய விஷயம் குற்றம் பரம்பரையாகத் தொடராமல் இருக்க வேண்டும் என்பது.
கே: அதைப் பற்றிச் சொல்லுங்கள்... ப: அடுத்த தலைமுறைக் குற்றம் என்று சொல்வார்கள். உதாரணமாக, ஒரு கணவன், மனைவியைக் கொன்றுவிட்டுச் சிறைக்கு வந்துவிட்டான், அவனுக்கு இரண்டு குழந்தைகள் என்றால் அவர்களும் ஆதரிப்போர் இல்லாமல், வழிகாட்டி இல்லாமல் குற்றவாளிகளாக மாறுவர். அவர்கள் தீவிரவாதிகளாகவே மாறும் சாத்தியம் அதிகம். இந்த நிலைமை தொடரக்கூடாது என்பதில் நான் அக்கறை காட்டினேன். அவர்கள் வளர்ச்சியில் ஈடுபாடுள்ள தன்னார்வச் சேவை அமைப்புகளோடு உரையாடி, அவர்களைத் தத்தெடுத்துக் கல்வி, வேலைவாய்ப்பு தொடர ஏற்பாடு செய்தேன். பண்டிகை நாட்களில் இல்லவாசிகளின் குடும்பத்தினரைச் சிறைக்கு அழைத்து அவர்களோடு அந்த நாளைக் கழிக்க ஏற்பாடு செய்தேன். அதனால் மன அழுத்தம் குறைந்தது. இதனால் சிறை அலுவலர்களின் எண்ணமும் மாறியது. குற்றவாளிகளோடு பழகிப் பழகி அவர்களுக்கும் பல வகைகளில் மன அழுத்தங்கள் இருந்தன. அவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தேன். அவர்கள் மனம் மாறவும் இந்தப் பயிற்சிகள் காரணமாயின.
இந்தப் பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் அவர்கள், தாமாகவே சிறைக்கு வந்து இல்லவாசிகளுடன் உரையாடப் பெரு விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அப்போது தேர்தல் வந்து விட்டதால் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அது நிறைவேறவில்லை. பின்னர் எனக்கும் பணி மாறுதல் நிகழ்ந்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. சிறைத்துறை எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது.
கே: தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் (TNPSC) முக்கியப் பணியாற்றியுள்ளீர்கள், அல்லவா? ப: டி.என்.பி.எஸ்.சி.யில் நான் பொறுப்பேற்ற போது, அறிவிப்பு, எழுத்துத் தேர்வு, நேர்காணல், பின் நீதிமன்ற வழக்கு என்பதாக ஒரு நிலைமை இருந்தது. அதை மாற்ற விரும்பினேன். என்னைப் பொறுத்தவரை நிர்வாகம் என்பது மூடுமந்திரமாக இருக்கக் கூடாது. சந்தேகம் கொண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்ப, விசாரிக்க தேவை இருக்கக் கூடாது. அப்படித்தான் நிர்வாகத்தை மேற்கொண்டோம். முதலில் இணைய தளத்தை மாற்றியமைத்தோம். பின் கணினி முறையில் பதிவு செய்வதைக் கொண்டுவந்தோம். அவ்வாறு பதிவு செய்தால் மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதை அமல்படுத்தினோம். முன்பு கணினி மூலமாகவோ, தபால் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்ற நிலை இருந்தது. அதை மாற்றிக் கணினி மூலம் மட்டுமே பதிவு செய்வதைக் கொண்டு வந்தோம். கிராமப்புற இளைஞர்களின் தயக்கத்தைப் போக்குவதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் கணினிப் பதிவு மையங்கள் வழியே இலவசமாகப் பதிவு செய்ய வசதி செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இணைய தளத்தில், புதிதாகத் தேர்வு எழுதுபவர்களுக்கான விதிமுறைகள், அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான தேர்வு விதிமுறைகள், அறிவிப்புகள், செய்ய வேண்டியவை எனப் பலவற்றை வெளியிட்டோம். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தோம். ஒரு தேர்வு நடந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதற்கான விடைகளைக் கொடுப்பது, தேர்வுகளை வீடியோ மூலம் பதிவு செய்வது போன்ற நடைமுறைகளை அமல்படுத்தினோம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி தமக்கான பணியிடங்களைத் தாமே தேர்ந்தெடுக்க வாய்ப்புத் தந்தோம். இவற்றுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 25000 நபர்களுக்கு இந்த ஒரு வருடத்தில் இதன்மூலம் வேலை வாய்ப்பை அளித்தோம். சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு ஒரு குட்டித் தேர்தலைப் போல நடந்தது. 10,700 பணியிடங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர். இணைய தளத்திலேயே பாடத் திட்டங்களை புதிதாக வடிவமைத்து வலையேற்றியிருக்கிறோம். ஏனென்றால் 10 வருடத்துக்கு முன்னால் உள்ள பாடத்திட்டங்களையே இன்னமும் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். காலத்திற்கேற்றவாறு அவை மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் இந்த தேர்வுகள் கணினியிலேயே எழுதும் படி வந்துவிடும். நம் நாட்டின் தேர்வாணையங்களிலேயே தமிழகந்தான் முன்னோடியாக இருக்கிறது.
நேர்காணல்களின் போது பல மாணவர்கள், "எங்கு சென்றாலும் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் வேலை நடப்பதில்லை. நாங்கள் போய் இந்த நிலைமையை மாற்றுவோம்" என்றார்கள். இது அரசுத்துறைக்கு ரொம்ப முக்கியம். அரசுப் பணியாளர்கள்தாம் ஓர் அரசுக்கு முக்கியமானவர்கள். அதிகாரிகள் என்ன திட்டம் தீட்டினாலும், அரசு என்ன ஆணை போட்டாலும், மக்களிடம் அவற்றைக் கொண்டு சேர்ப்பவர்கள் பணியாளர்கள்தாம். மக்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் இவர்கள்தாம். இவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக மட்டுமல்ல, நேர்மையானவர்களாகவும் இருந்து செயல்பட்டால்தான் திட்டங்களின் பலன் பூரணமாகக் கிடைக்கும், அரசுக்கும் நல்ல பெயர் வரும். எனவே இம்மாதிரிப் பணிகளில் வெளிப்படையான நிர்வாகம் இருக்க வேண்டியது மிக அவசியம்.
கே: இசை விமர்சனம், கட்டுரைகள் எழுதுகிறீர்கள். இசையார்வம் ஏற்பட்டது எப்படி? ப: என்னுடைய தாத்தா பூர்ணகிருபேஸ்வரர் தென்காசியில் வக்கீலாக இருந்தார். அவர் நிறைய பாடல்களை இயற்றியிருக்கிறார். பாடவும் செய்வார். நாங்கள் கோபாலபுரத்தில் வசித்தபோதுதான் மியூசிக் அகாதமியைப் புதிய கட்டிடத்தில் ஆரம்பித்தார்கள். அப்போது சிறு பையன் என்றாலும் தவறாமல் அங்கு நடக்கும் கச்சேரிகளுக்குப் போவேன். பின்னர் காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட போது மஹா பெரியவர் கும்பகோணத்தில் இருந்தார். பின்னர்தான் அவர் தேனம்பாக்கத்துக்கு வந்தார். நான் பணியில் இருந்தபோது அவர் அங்கே வந்தது என்னுடைய பாக்யம். மடத்தில் நிறையக் கச்சேரிகள் நடக்கும். ஓர் அதிகாரி என்ற முறையில் மடத்துக்கு அழைப்பார்கள். அதனால் பல இசை நிகழ்ச்சிகளுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. மீண்டும் சென்னைக்குப் பணிமாறுதல் வந்தபோது, சித்தூர் கோபாலகிருஷ்ணனுடன் இருந்த ராமச்சந்திரனிடம் 3 வருடம் வயலின் பயின்றேன். பணியிடமாற்றம் காரணமாகப் பல ஊர்களுக்குப் போனாலும் விடாமல் பயிற்சி செய்து வந்திருக்கிறேன்.
கே: உங்கள் குடும்பம் பற்றி... மூத்த மகன் தற்போது அட்லாண்டாவில் ஜார்ஜியா டெக்கில் பிஎச்.டி செய்கிறார். இரண்டாவது மகன் உச்சநீதிமன்றத்தில் கோபால் சுப்ரமணியத்திடம் பயிற்சி பெற்று வருகிறார். முன்பு மார்க்கண்டேய கட்ஜு அவர்களிடம் பயிற்சி பெற்றார். இப்போதுகூட அரசு கற்பழிப்புச் சம்பவங்களைத் தடுக்க மாற்றுச் சட்டம் கொண்டு வருவது குறித்து ஓர் அறிக்கை கேட்டது. அந்த அறிக்கையை ஜஸ்டிஸ் வர்மா குழு சமர்ப்பித்தது. அந்தக் குழுவில் என் மகனும் ஒருவர். என் மனைவி காஸ்ட் அக்கவுண்டண்டாகப் பணிபுரிகிறார். என்னுடைய தம்பி டாக்டர் உமாகிஷோர் ராமச்சந்திரன் ஜார்ஜியா டெக்கில் கம்ப்யூட்டர் சயன்ஸ் டிபார்ட்மெண்டில் பேராசிரியர் பணியில் இருக்கிறார். ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மிக அழகாகப் பாடுவார். புஷ் ஆட்சிக் காலத்தில் அவருக்கு Presidential Young Investigator (PYI) விருது கிடைத்தது. என்னுடைய பல உறவினர்கள், மனைவியின் சகோதர, சகோதரிகள் அமெரிக்காவில் விரிகுடாப் பகுதியில்தான் இருக்கிறார்கள்.
கே: இன்னும் செய்ய நினைப்பவை உண்டா? ப: மக்கள் எந்தப் பிரச்சனைக்கு யாரை, எப்படித் தொடர்பு கொள்வது என்று குழம்புகிறார்கள், தயங்குகிறார்கள். அரசுத் திட்டங்கள் எவை, அவற்றின் பயனை அடைய என்ன செய்யவேண்டும் என்பதும் தெரிவிவதில்லை. இவற்றில் உதவ ஓர் இணைய தளம் தொடங்கி, இலவச ஆலோசனை தரலாம் என்ற எண்ணம் இருக்கிறது. சென்னையில் ஆட்டோ என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நான் ஆணையராக இருந்தபோது 'ஆட்டோ ராஜா' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கி, புதிய ஸ்டேண்ட்கள் அமைத்து மக்கள் சேவையாற்ற ஊக்குவித்தேன். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாக அவர்கள் வாங்குகின்றனர். இதை மாற்ற வேண்டும். ஓர் அமைப்பினர் கேட்டுக் கொண்டதனால் அதற்கான திட்டத்தை முன் வைத்திருக்கிறேன். அதுபோகச் சிறைவாசிகளின் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு நல்ல மறுவாழ்வு அமைத்துத் தருவதிலும் தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். குற்றவாளிகளிலும் வாரிசு வராமல் இருக்க வேண்டும். அதற்கு உடனடிப் பலன் இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல பலன் தெரியும்.
நம்பிக்கையும் உறுதியும் தொனிக்கப் பேசுகிறார் நடராஜ். நேர்மை, உண்மை, எளிமை ஆகிய பண்புகளை வற்புறுத்துகிறார். தன்னலமற்று உதவுகிறார், உதவச் சொல்கிறார். சமுதாயத்தை மாற்றி அமைக்க ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் திரு. நடராஜ், ஐ.பி.எஸ். (ஓய்வு) அவர்களுக்கு நன்றி கூறும்போது நமக்குள்ளும் இவர் போன்றவர் உள்ளவரை பாரதத்தின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று மின்னிக் கிளைக்கிறது.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
'முள்ளும் மலரும்' உருவான கதை என் அப்பா 'உமாசந்திரன்' என்ற பெயரில் எழுதினார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் கண்ணியத்தைப் பின்பற்றியவர். கட்டுப்பாடான எழுத்து என்பது அவர் எப்போதும் வலியுறுத்திய விஷயம். எழுத நினைத்தால் சமயங்களில் வீட்டில் அதற்கான சூழல் இருக்காது. அதற்காக விடியற்காலையிலேயே எழுந்து, வேலை நேரத்துக்கு முன்னதாகவே அலுவலகம் சென்று அங்கே அமர்ந்து எழுதுவார். எழுத்தை அவர் மிகுந்த அர்ப்பணிப்போடு, தவம்போலச் செய்வார். தான் செல்லும் இடங்களை, சந்திக்கும் நபர்களை, விஷயங்களைக் குறிப்பு எடுத்து வைப்பார். அது அவருக்கு எழுத மிக உதவியாக இருக்கும். இப்படி நிறைய 'நோட்ஸ்' என்னிடம் இருக்கிறது. அப்பா ஒருசமயம் சென்னை வானொலியில் ஐந்தாண்டுத் திட்டத்தின் விளம்பரத்துக்குப் பொறுப்பேற்று இருந்தார். அப்போது நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருந்தார். விஞ்ச்சில் எல்லாம் சென்று பலரைச் சந்தித்து உரையாடினார். பேட்டி எடுத்தார். அப்போதுதான் 'முள்ளும் மலரும்' கதைக்கரு உருவானது. திரும்பி வந்ததும் அதை எழுதி செய்து கல்கிக்கு அனுப்பினார். கல்கி வெள்ளிவிழாப் போட்டியில் அந்த நாவல் முதல் பரிசு பெற்றது. மூதறிஞர் ராஜாஜி அந்தப் பரிசைக் கொடுத்தார்.
*****
"இதுதான் நேர்மை" அப்பா எதையும் திட்டமிட்டுச் செய்வார். மாதம் ஒருமுறை எங்களை வெளியில் அழைத்துச் செல்வார். பீச்சுக்குப் போகும்போது பஸ்ஸில் போவோம். திரும்ப வரும்போது நடப்போம். காரணம், எல்லோருக்கும் பஸ் கட்டணம் கொடுக்க முடியாததுதான். வறுமையான சூழல்தான். உண்மையாக இருக்க வேண்டும்; நேர்மையாக இருக்க வேண்டும்; பிறருக்கு உதவ வேண்டும், சத்தியத்தைவிட உயர்ந்த மதம் இல்லை - இது அப்பா எங்களுக்கு அழுத்திச் சொன்ன விஷயம். அவர் கடைப்பிடித்த விஷயம். நாங்கள் யாராவது தப்பு செய்தால், அது யார் செய்தது என்று அவருக்கு தெரிந்திருந்தாலும், 'அவன் செஞ்சிருக்க மாட்டான் நிச்சயமா' என்பார். அந்த நம்பிக்கையே எங்கள் தவறுகளை அவர் முன்னால் ஒப்புக் கொள்ளச் செய்துவிடும்.
நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒருமுறை என் மீது ஆசிரியர் ஒரு புகார் கடிதம் எழுதி அதை என் அப்பாவிடம் கொடுக்குமாறு சொல்லி அனுப்பினார். நானும் அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா அதைப் படித்துப் பார்த்தார். பின் "நீ இதைப் படித்தாயா?" என்றார். "இல்லப்பா, உனக்குத்தானே லெட்டர், அதுனால நான் படிக்கலை" என்றேன். என் அப்பா மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். என்னைக் கட்டிக்கொண்டு, "இதோ பார். இது உன்னைப் பற்றிய புகார் கடிதம். நீ அதைப் பிரித்துப் படித்துப் பார்க்காமல் நேராக என்னிடம் கொடுத்து விட்டாய். இதுதான் நேர்மை. இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று சொன்னார். என்னைத் திட்டப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு, அவர் பாராட்டிப் பேசியது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு, என் ஆசிரியருக்கு அவரது தவறான புரிதல் குறித்து விளக்கிக் கடிதம் எழுதினார் என் அப்பா. 'வாழ்க்கையில் எப்போதும் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும்' என்று அன்று நான் முடிவு செய்தேன். அதை இன்றளவும் பின்பற்றி வருகிறேன். உரிமைக்குப் போராட வேண்டும் என்பதும் அப்பா சொல்லிக் கொடுத்ததுதான். - நடராஜ் ஐ.பி.எஸ்
*****
எவ்வளவு பெரிய பாக்யம்! பலசமயம் காஞ்சிப் பெரியவர் மௌன விரதத்தில் இருப்பார். இந்திராகாந்தி அம்மையார் சென்றபோதுகூட அவர் மௌன விரதம் இருந்ததால் பேசவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறை நாங்கள் குடும்பத்துடன் அவரை தரிசிக்கச் சென்றோம். அப்போது அவர் மௌன விரதத்தில் இருந்தார். சில நிமிடங்கள் அவர்முன் இருந்தபின் அவரை நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டோம். நாங்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் மௌனம் கலைந்து எங்களை அழைத்தார். நாங்கள் மீண்டும் சென்றோம். அமர்ந்தோம். எங்களுடன் பேசினார். என் பையன் கையில் ஒரு ஆப்பிளைக் கொடுத்து எங்களை ஆசிர்வதித்தார். அங்கிருந்தவர்கள், "மாதக் கணக்கில் பெரியவா பேசாமல் இருந்தார்கள்; இப்போதுதான் பேசினார்கள்" என்று கூறினார்கள். மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு பெரிய பாக்யம்! - நடராஜ் ஐ.பி.எஸ் |