ராணி ராமஸ்வாமி
நாட்டியமணியும் நடன குருவுமான ராணி ராமஸ்வாமி 1978லேயே நடனம் பயிற்றுவிக்கத் தொடங்கினாலும், 1984ல் மீண்டும் குரு அலர்மேல் வள்ளியிடம் சேர்ந்து பரதத்தின் முற்றிலும் புதிய பாணி ஒன்றைக் கற்றுத் தேர்ந்தார். மின்னியாபொலீஸில் ராகமாலா டான்ஸ் கம்பெனியை (ragamala.net) 1992ல் தொடங்கி, பிற நாட்டு நடன, இசை வகைகளோடு இணைந்து செய்த புதுமைப் படைப்புகளில் அமெரிக்க ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2012ல் அதிபர் ஒபாமா இவரை தேசிய கலைகள் கவுன்சிலில் உறுப்பினராக நியமித்தார். அதே ஆண்டில் இவர் 50,000 டாலர் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் கலைஞர் நிதிநல்கை'யைக் கலைத்துறையில் சிறப்புக்காகப் பெற்றார். 'ஸ்டார் ட்ரைப்யூன்' இவரை 2011ம் ஆண்டின் 'Artist of the Year' என்று கூறிச் சிறப்பித்தது. 13 முறை McKnight Artist Fellowships தவிர, Bush Fellowship, Artist Exploration Fund grant from Arts International என்று இவரது நாட்டிய ஆய்வுக்கும் சிறப்புக்குமாகப் பலமுறை நிதியங்கள் பெற்றதுண்டு. இவர் ராகமாலாவின் நிறுவனர், கலை இயக்குனர், நடன அமைப்பாளர் என்பவற்றோடு பிரதான நடனமணியும் ஆவார். இவரது மகள் அபர்ணாவும் இவரோடு இணை கலை இயக்குனராக இருக்கிறார். மற்றொரு மகள் அஸ்வினி ராகமாலா நடனக் குழுவில் இருக்கிறார். இந்திய நிகழ்கலைகளில் தமக்கென்று ஓர் இடம்பிடித்த கிருத்திகா ராஜகோபாலனும், ஸ்னிக்தா வெங்கடரமணியும் தென்றலுக்காக குரு ராணி ராமஸ்வாமியுடன் உரையாடினார்கள். அதன் முதல் பகுதி இந்த இதழில் வெளியாகிறது....

*****


ஸ்னிக்தா: வணக்கம் ராணி. பரதம் நாட்டியம் படிக்கற ஆசை எப்ப வந்தது?
ராணி: அது ஒண்ணும் சுவாரஸ்யமான கதையில்ல. நான் பாரம்பரியக் கூட்டுக் குடும்பத்தில வளர்ந்தேன். நாட்டியத்தில் யாருக்கும் ஈடுபாடு கிடையாது. அம்மா நல்லாப் பாடுவாங்க. நல்ல ஓவியரும் கூட. ஆனால் நடனம் கற்பதை நேர விரயம்னு நினைச்சாங்க. அப்படியே கற்றாலும் திருமணத்திற்குப் பின்னாடி யாரும் ஆடறதில்லைன்னு அபிப்ராயப்பட்டாங்க. கேரளாவிலிருந்த என் கஸின் நடனம் கற்பதைப் பார்த்து எனக்கும் நடனம் கத்துக்க ஆசை பிறந்தது. நான் ரொம்ப வற்புறுத்தவே என் பெற்றோர் வசந்தி செல்லப்பாகிட்ட நாட்டியம் கத்துக்க ஏற்பாடு பண்ணினாங்க. அவங்க பத்மா சேஷாத்திரி பாலபவனில் நடனம் சொல்லிக் குடுத்திட்டிருந்தாங்க. என்னோட ஏழாவது வயசில நடனம் கத்துக்கத் தொடங்கினேன். எனக்கு நடனத்தில் எவ்வளவு ஈடுபாடுன்னா, எல்லாரும் ஒரு பதம் கத்துக்கற நேரத்தில நான் 5 கத்துக்கிட்டேன்.

ஸ்னிக்தா: அரங்கேற்றம் எப்ப ஆச்சு?
ராணி: என் பெற்றோர் அது வேஸ்டு, வரதட்சணைக்குப் பணத்தைச் சேர்த்து வெக்கலாம் அப்படீன்னாங்க. அதனால அரங்கேற்றம் பண்ணல. 17வது வயசுல ஆடறதை நிறுத்தினேன். 1978ல இங்க வந்தப்ப எனக்கு வயசு 26. என் பெண் அபர்ணா பிறந்தாச்சு. நான் மறுபடியும் ஆடுவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. நிறையப் பேர் அங்க ஆடி ஃபேமஸ் ஆயிட்டு இங்கு வந்து டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சாங்க. நான் நேரெதிர்.

ஸ்னிக்தா: ரொம்ப சுவாரசியமா இருக்கே! ம்.... சொல்லுங்க!
ராணி: இங்க சிலபேர்கிட்ட நான் டான்ஸ் கத்துகிட்ட விஷயத்தைச் சொல்லியிருந்தேன். தமிழ்ச் சங்கத்தில தீபாவளி கொண்டாடினப்ப என்னை ஆட முடியுமான்னு கேட்டாங்க. உடனே நான் 25 டாலருக்கு ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கினேன். கமலா லக்ஷ்மணோட 'நடனம் ஆடினார்', எம்.எல். வசந்தகுமாரியோட அலாரிப்பு ரெண்டும் இருந்த டேப் யாரோ குடுத்தாங்க. எனக்கு ஞாபகத்தில் இருந்ததை வச்சு நிகழ்ச்சி பண்ணினேன். நடனம் ஆடினாருக்கு நானே நாட்டிய வடிவம் குடுத்தேன். அலாரிப்புக்கும் அப்படித்தான். எல்லாரும் பாராட்டினாங்க. அவ்வளவுதான். எனக்கு நடனக் காதல் திரும்பவும் வந்துடுச்சு. போதாததுக்கு, இங்க பலபேர் குழந்தைகளுக்கு நடனம் கத்துக் கொடுக்கச் சொல்லி கேட்டாங்க.

ஸ்னிக்தா: வெரிகுட். டான்ஸ் டீச்சர் ஆய்ட்டீங்களா?
ராணி: உடனே இல்லை. எனக்கு விஷயம் அதிகம் தெரிஞ்சிருக்கல. அதுக்கான பாட்டுக்கள் எதுவும் எங்கிட்ட இல்ல. அதனால 1980ல திருப்பி இந்தியா போய் டான்ஸ் கத்துக்கிட்டேன். டான்ஸ் டீச்சர் வயசுல சின்னவங்க. தங்கமணி குட்டியோட மாணவி. என்னோட பெற்றோர் அப்ப கொல்கத்தால இருந்தாங்க. நான் நாலு மாசம் இந்தியாவில தங்கி அடவு, அலாரிப்பு, ஜதிஸ்வரம், தில்லானான்னு எல்லாமே கத்துக்கிட்டேன். திரும்பி வந்துதான் நாட்டியம் கத்துக்குடுக்க ஆரம்பிச்சேன்.

அபர்ணா கொஞ்சம் பெரியவளானதும் அவளுக்கும் சொல்லிக் கொடுத்தேன். அவளுக்கு ஆறு வயசானப்ப திரும்ப இந்தியா போனேன். அப்ப எனக்கு சாமுண்டீஸ்வரியோட தொடர்பு கிடைச்சது. அவங்க தண்டாயுதபாணி பிள்ளையோட மாணவி. ஒவ்வொரு தடவை போகும்போதும் ஒரு 10 அல்லது 12 உருப்படி கத்துக்க முடிவு பண்ணினேன். 1983ல அலர்மேல் வள்ளி மின்னியாப்பொலீஸ்ல நிகழ்ச்சி குடுக்க வந்தாங்க. அவங்க ஆடறதப் பாத்ததும் நான் ஏதோ சுமாராத்தான் ஆடறேன், எனக்கு டான்ஸ் மேல அபரிமிதமான காதல் இருந்ததே தவிர பயிற்சி போதாதுன்னு தெரிஞ்சது.

அலர்மேல் வள்ளியோட நடனத்தில இருந்த அழகு, நளினம், தாளக்கட்டு, உணர்ச்சி, கலைநுட்பம் இதையெல்லாம் வேற யார்கிட்டயும் நான் பாத்ததில்ல. I was blown away. அவங்க இங்க ஒரு பயிலரங்கு நடத்தினாங்க. அவங்கள வரவழைச்ச அமைப்பில நானும் ஒரு பதவில இருந்தேன். அபர்ணாவுக்கு அப்ப வயசு ஏழு. நானும் அபர்ணாகூட அந்தப் பட்டறையில கலந்துக்கிட்டேன். அவங்க அபர்ணா ஆடறதப் பாத்து அந்தச் சின்னவயசிலயே அவளுக்கு நிறைய ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருக்குன்னு சொன்னாங்க. இந்தியா அழைச்சிட்டு வந்தா அவங்க டான்ஸ் வகுப்பில சேர்க்கலாம்னு சொன்னாங்க. நான் உடனே என்னையும் சேர்த்துப்பீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க “நீங்க ஆடற பாணியும், என்னோட பாணியும் வேற வேற. திடீர்னு பாணியை மாத்திக்கறது ரொம்ப கஷ்டம்” அப்படீன்னு சொன்னாங்க.

ஆனா நான் கடினமா உழைப்பேன்னு சொல்லி அபர்ணாவோட சேர்ந்து பழையபடி தொடக்கத்துலேந்து ஆரம்பிச்சேன். இரண்டு குழந்தைகள் பிறந்தப்பறம் அலர்மேல் வள்ளிகிட்ட அடவுல தொடங்கி எல்லாத்தையுமே புதுசாக் கத்துக்க ஆரம்பிச்சேன். அதே சமயத்துல காலையில சாமுண்டீஸ்வரிகிட்டப் போய் பத்து உருப்படி கத்துக்கிட்டு, சாயங்காலம் வள்ளியோட வகுப்பில அவங்களோட உருப்படிகளையும் கத்துக்குவேன்.

ஸ்னிக்தா: வாவ்!
ராணி: எல்லாரும் எனக்குப் பைத்தியம்னும் நினைச்சாங்க. இந்தியால இரண்டு குழந்தை பிறந்து, 30 வயசுக்கு மேல ஆயிட்டாலே மாமிதான், இல்லையா? அதனால எல்லாரும் என்ன இது, மாமி இப்படிக் கஷ்டப்படறாங்களேன்னு பேச ஆரம்பிச்சாங்க. ஆனா நான் திரும்பி வந்து ஒரு நடனப்பள்ளி ஆரம்பிச்சு வகுப்பு நடத்தணும், மின்னியாப்பொலீஸ்ல நிகழ்ச்சிகள் நடத்தணும் அப்படிங்கற எண்ணத்துல அதையெல்லாம் செஞ்சேன்.

ஸ்னிக்தா: ரொம்பவு ஆச்சரியமா இருக்கு. சரி. நீங்க 1978ல வந்தப்பஎப்படி இருந்தது? இப்ப நாம தினம் ஸ்கைப்புல குடும்பத்தோட பேசறோம். ஆனா அப்ப இதெல்லாம் கிடையாது. எப்படி நீங்க ஃபீல் பண்ணினீங்க?
ராணி: எல்லாமே புதுசா இருந்தது. சாப்பாடு மோசமா இருந்தது. இப்பமாதிரி அப்ப நம்ப உணவெல்லாம் கிடைக்காது. அதே சமயம் எக்ஸைடிங் ஆகவும் இருந்தது. எனக்கு அப்ப 26 வயசுதான். அந்த வயசுல எல்லாமே த்ரில்லிங்தான். அப்புறம் இந்தியாவை மிஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

ஸ்னிக்தா: நீங்க எப்ப இங்க வந்தீங்க?
ராணி: 78 செப்டம்பர்ல. 1980 ஏப்ரல்ல இந்தியா திரும்பிப் போனேன். அதிலேந்து வருஷத்தில 4 மாதம் இந்தியாவில இருப்பேன். அதனால நான் இந்தியாவை மிஸ் பண்ணலை. இந்தியாவில நாலு மாசம் இருக்கறதுக்காகவே இங்க 8 மாசம் வேலை செய்வேன். 'எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு சோஃபா வேண்டாம், வீடு வேண்டாம். இந்தியாவில நாலு மாசம் இருந்தாப் போதும்' அப்படீன்னு சொல்வேன். என்னோட ஒரே ஆசை அதுதான். நான் எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பெண். அவங்ககூட மாசம் ஒருதடவைதான் ஃபோன்ல பேசமுடியும். அப்பல்லாம் ஃபோன் கட்டணம் ரொம்ப ஜாஸ்தி. அதுதான் எனக்குக் கஷ்டமா இருந்தது. அதனால என்னோட பெண் அபர்ணா ஹைஸ்கூல் போற வரைக்கும் வருஷத்தில 4 மாசம் இந்தியாவில இருப்பேன்.

ஸ்னிக்தா: கிரேட். ராகமாலா டான்ஸ் கம்பெனியை எப்ப தொடங்கினீங்க?
ராணி: அது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். நடனப்பள்ளி தொடங்குவது அவ்வளவு கஷ்டம் கிடையாது. ஏன்னா பெற்றோர் இந்திய கலாசாரத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் குடுக்கணும்னு நினைச்சாங்க. மாணவர்களும் கத்துக்க ஆர்வமா இருந்தாங்க. ஆனா நான் டான்ஸ் ஸ்கூலவிட, டான்ஸ் கம்பெனி தொடங்கத்தான் ஆர்வமா இருந்தேன்.

அப்ப சூழ்நிலையும் சாதகமா இருந்தது. அதனால 1992 இல் ராகமாலா டான்ஸ் கம்பெனி தொடங்க இங்க மின்னியாபொலீஸில சிரமம் எதுவும் இருக்கல. இங்க நிதியுதவி சுலபமா, தாரளமா கிடைச்சது. General Mills, Target Foundation இப்படிப் பெரிய நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பாங்க. நான் ராகமாலாவை லாபநோக்கற்ற நிறுவனமா தொடங்கினப்ப அதுக்கு வரவேற்பு இருந்தது. ஏன்னா, நான் சொன்னதைச் சொன்னபடி செய்வேன். மின்னஸோட்டாவின் சின்னச் சின்ன ஊர்களிலகூட நான் நடனம் சொல்லிக் கொடுத்திருந்தேன். அந்த அளவு என்மீது நம்பிக்கை!

ஸ்னிக்தா: கிரேட். இப்ப இங்க நிறைய இந்தியர்கள் இருக்காங்க. அதுவும் விரிகுடாப் பகுதியை மினி இந்தியான்னே சொல்லலாம். நான் வந்து 4 வருஷம் ஆச்சு. நான் என் கணவர்கிட்ட ஏதோ அமெரிக்கான்னு சொன்னீங்க, ஆனா இந்தியா மாதிரியே இருக்குன்னு சொல்வேன். (சிரிக்கிறார்). ஆனா நீங்க ஸ்கூல் ஆரம்பிச்சப்ப அவ்வளவா இந்தியர்கள் இருந்திருக்க மாட்டாங்க.
ராணி: ஆமாம்...



ஸ்னிக்தா: நீங்க இங்க இருக்கிற மாணவர்களுக்காக, சொல்லிக் குடுக்கற வழிமுறையில ஏதாவது மாறுதல் செஞ்சீங்களா?
ராணி: இங்க வளர்ந்த நம்ம குழந்தைகளாகட்டும், அமெரிக்க குழந்தைகளாகட்டும் அவங்களுக்கு நம்ம புராணக் கதைகளைப் புரியவச்சு ஆட வைக்கிறது கஷ்டம். பக்திபாவமோ அல்லது வேற எந்த பாவமோ அதில கொண்டு வரது கஷ்டம். அதைச் சொல்லித் தரத்தான் அதிக நேரம் எடுத்தது. ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அவங்களுக்குப் புரிய வைக்கணும். நிறைய அமெரிக்கர்களும் பரதநாட்டியம் கத்துக்கறாங்க.

இந்தியாவிலிருந்து இங்க வர இளைஞர்களும், குழந்தைகளும் இங்க இருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய விஷயங்கள கத்துக்கிறாங்க. டான்ஸும் அதுல ஒண்ணு. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு கலாசார வகுப்பு, தாய்மொழி வகுப்புன்னு பல வகுப்புகளுக்கு அனுப்பறாங்க. நாட்டியத்தைப் பொருத்தவரைக்கும், அதை நல்லாப் புரிஞ்சுகிட்டு, உணர்ந்து ஆடணும். இல்லன்னா சொல்லிக் கொடுக்கறதை அப்படியே வெளிப்படுத்த நல்ல நடிகரா இருக்கணும். அதனால இங்க சொல்லிக்குடுக்கற முறை வேறயாதான் இருக்கணும்.

ஆனா இப்ப இந்தியால கூட குழந்தைகளுக்கு நம்மோட ஆழமான தத்துவங்களோ, புராணங்களோ அவ்வளவா தெரியறதில்ல. நாமெல்லாம் அங்க இருந்தப்ப சடங்குகளோ, விழாக்களோ, கோவில் போறதோ எல்லாம் நம்ப வாழ்க்கையோட ஒரு பகுதியா இருந்தது. யாரும் தனியாச் சொல்லிக் கொடுக்கல. அதை இங்க கடைப்பிடிக்கறது கஷ்டமான விஷயமா இருக்கு. இன்னொரு ஆச்சரியம் என்னன்னா, குழந்தைகள் நீச்சல் குளத்தில 200 சுற்று நீச்சலடிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு அடவு கத்துக்கிட்டு ஆடறதுக்கு அவங்களுக்குத் தெம்பு இருக்கிறதில்லை. நான் சில சமயம் 'இப்படி நீஞ்சினா செத்துடுவீங்க'ன்னு சொல்றதுண்டு. நிறைய குழந்தைகள் டான்ஸ் கத்துக்க வர்றது கலை ஆர்வத்திலயா அல்லது கலாசாரத்தை தெரிஞ்சுக்கற எண்ணத்திலயான்னு தெரியல.

அதனால நாட்டியம் சொல்லிக் கொடுக்கறது, டான்ஸ் கம்பெனி நடத்தறதைவிடக் கஷ்டமான காரியம். நாட்டியம் சொல்லிக் கொடுக்க நிறைய உழைப்பு தேவையா இருக்கு. ஆனா டான்ஸ் கம்பெனின்னு பார்த்தா, அதில இந்தக் கலையை விரும்பி, ஈடுபாட்டோட கத்துக்கிட்டு, புதுமை படைக்க ஆசைப்படும் குழு ஒண்ணு இருக்கும். பத்தோடு பதினொண்ணா அவங்க செய்யறதில்ல. இந்த ஒரு வேலைய மட்டுமே அவங்க செய்யறாங்க.

நானும், அபர்ணாவும் அலர்மேல் வள்ளிகிட்ட நாட்டியம் கத்துக்கிட்டு 20 வருஷத்துக்கு மேல ஆச்சு. எனக்கு வயசு 61. ஆனா நாங்க அவங்கள மாதிரியே நல்ல தரமா கத்துக்குடுக்கணும்னு நினைக்கிறோம். உண்மையாவே உழைச்சு சொல்லித்தறோம். அரங்கேற்றமெல்லாம் சீக்கிரம் பண்ண வைக்கிறதில்ல. நல்லாக் கத்துக்கிட்டு ஒரு நிலையைத் தொட்டா மட்டுமே அரங்கேற்றம் பண்ண வைப்போம்.

ஏராளமா மாணவர்களைச் சேர்த்துக்கறதும் இல்ல. ஒரு 20 மாணவர்கள்தான் இருப்பாங்க. எங்க கம்பெனில ஒரு 6, 7 பேர் இருப்போம். எல்லாருமே நாட்டியம் சொல்லிக் கொடுப்போம். அடிக்கடி நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் போறதால, இங்கே சொல்லிக்குடுக்க நேரம் இருக்கறதில்ல. இந்தியாவில என்னன்னா ஆசிரியர்தான் எல்லாம். மாணவர்களும் அவங்க சொல்லிக் குடுக்கறதுக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க. ஆனா இங்க இது ஒரு வியாபாரமா இருக்கு. வகுப்பு ஒரு மணிநேரம்தான். ஒருவேளை குரு வராவிட்டால், அந்த வகுப்புக்கு ஏன் பணம் தரணும்னு இங்கே கேப்பாங்க. ஆனா சில சமயம் ஆர்வத்தோட, அர்ப்பணிப்போட சில மாணவர்கள் வரும்போது எல்லாம் நல்லா நடக்குது.

கிருத்திகா: நமக்கு ஒரு மாணவரோட உறவு 5 வயதிலேந்து தொடங்கி எப்பவும் இருந்துகிட்டிருக்கு. மற்ற கலைகள், விளையாட்டு, செஸ் இப்படி எல்லாத்தோடையும் நாம போட்டியிட வேண்டியிருக்கு. ஒரு ஆசிரியர் என்கிற முறையில நல்லபடி மாணவர்களுக்கு இந்தக் கலையை சொல்லிக் குடுக்க முயற்சி செய்யறீங்க. ஒரு குருவாக உங்க மாணவர்களின் பெற்றோருக்கு என்ன ஆலோசனை குடுப்பீங்க?
ராணி: 30 வருஷ அனுபவத்தில நான் நிறைய குடும்பங்களைப் பார்த்திருக்கேன். சில பெற்றோர்கள், குழந்தைகள் இந்தக் கலையச் சிறப்பா கத்துக்கணும்னு நினைப்பாங்க. ஆனா நல்லா கத்துக்கிட்டு சிறப்பா செய்தவங்ககூட, இதையே ஒரு தொழிலாகச் செய்யணும்னு முன்வரலை. அவங்க கத்துக்கற பல விஷயங்கள்ள இதுவும் ஒண்ணு, அவ்வளவுதான். பெற்றோர்கள் இந்தக் கலையை விரும்பியோ, அல்லது அதைச் சின்ன வயசில கத்துக்க முடியாமப் போன காரணத்தாலயோ, தம் குழந்தைகளாவது கத்துக்கணும்னு நெனக்கறாங்களோ என்னமோ. பெற்றோருக்கு ஆர்வம் இருந்தாலும், தம் குழந்தைகள் டாக்டராவோ, இஞ்சினியராவே வரணும்னுதான் நினைக்கிறாங்க. ஏன்னா டான்ஸ்ல அதிகம் பணம் சம்பாதிக்க முடியாது.

நடனத்தில புதியதாச் செய்யும்போதோ, ஆடும்போதோ, சொல்லிக் கொடுக்கும்போதோ அளவிட முடியாத சந்தோஷம் கிடைக்குது. எங்க குழுவில 7 டான்ஸர்ஸ் இருக்காங்க, அதுல 5 பேர் அமெரிக்கர்கள். அவர்கள் தவிர நானும் என்னுடைய 2 பெண்களும்தான். நல்லா ஆடற மாணவர்கள்கூட 'நான் ப்ரொஃபஷனல் டான்ஸராகப் போறேன்'னு சொல்றதில்லை.

கிருத்திகா: ஓ, உங்கள் பெண்களைப் பற்றிச் சொல்லுங்களேன்....
ராணி: அபர்ணா சின்ன வயசிலேந்தே ஆட விரும்பினா. அவளுக்கு டான்ஸ்தான் எல்லாம். அதனால, வேற எதிலயும் அவ ஈடுபடலை. ஆனா அஸ்வினி முதலில் முழு ஆர்வம் காட்டலேனாலும், இப்ப தீவிரமா இருக்கா. நாம யாரையும் நாட்டியத்தையே முழுநேரத் தொழிலா செய்யணும்னு எதிர்பார்க்க முடியாது. தங்களுடைய வாழ்க்கையையே நாட்டியத்துக்காக அர்ப்பணிக்கத் தயாரா இருக்கற யாராவது கிடைக்கணும்னு நான் ஆவலா இருக்கேன். ஆன நாம சொல்லிக்குடுக்கற எல்லாருமே இதை ஒரு ரெண்டு, மூணு வருஷம், ஏன் பத்து வருஷம்கூட ஆடலாம். அதுக்கப்புறம் அவங்க விஷயம் தெரிஞ்ச ரசிகர்களா இருப்பாங்க.

கிருத்திகா: நீங்க மக்கள்கிட்ட, மாணவர்கள்கிட்ட ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க இந்தக் கலையை ஒரு முழுநேரப் பணியாக செய்யறதைப் பார்க்கும் போது அடுத்த தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். பரதநாட்டியத்தை தங்கள் பாரம்பரியத்தைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கான கலாசார வழியா மட்டும் பார்க்காம, ஒரு முழுநேரப் பணியாவும் பார்ப்பாங்கன்னு நம்பறேன்.
ராணி: ஆமாம். நானும் அபர்ணாவும் இன்றைக்கு இருக்கிற நிலையை அடைய 30 வருஷம் எடுத்துச்சு. ரெண்டு மூணு வருஷத்தில நடக்கல. இது நல்ல கலைன்னு அமெரிக்க ரசிகர், விமர்சகர் கிட்டச் சொல்ல இத்தனை வருஷம் ஆச்சு. தரமான நாட்டியத்தை மட்டுமே முழு மனசோட கத்துக் கொடுக்கும்போது, ஒரு நல்ல காரியம் செய்யறோம்னு நான் நினைக்கிறேன். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கடினமாகக்கூட இருக்கலாம். ஆனாலும் இது உண்மையாவே நல்ல காரியம்தான்.

ஸ்னிக்தா: இந்தக் கலையை உங்கள் பெண்களுக்கு சொல்லிக் கொடுப்பது எப்படி இருந்தது?
ராணி: அபர்ணாவுக்கு இயல்பாவே இதில விருப்பம் இருந்தது. இந்தக் கலைக்குத்தான் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கணும்னு அவ நினைச்சா. இந்தியாவுக்குப் போய் வள்ளிகிட்ட நாட்டியம் கத்துக்க விரும்பினா. வள்ளிதான் அவகிட்ட 'நீ நாட்டியம் மட்டும் கத்துக்கிட்டா பொருளாதார வெற்றி கிடைக்கும்னு நினைக்காதே. வேற ஒரு பின்பலமும் வேணும். மேல்படிப்பு அவசியம்'னு சொன்னாங்க. அதனால, அவ கார்ல்டன் காலேஜ்ல பட்டப்படிப்புக்குப் போனா. அவ அஞ்சு வயசிலேர்ந்து என்கூட சேர்ந்து நிகழ்ச்சிகள் பண்றா. எங்க கம்பெனில இணை கலை இயக்குனர். நாங்க சேர்ந்து பிராக்டிஸ் பண்ணறோம், சேர்ந்து ஆடறோம்.

ஆனா அஸ்வினி விஷயம் வேற. அம்மாவும், அக்காவும் எப்பவும் சேர்ந்தே இருப்பத பார்க்கறது, இரண்டாவது பெண்ணுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயம். அஞ்சு வயசில அவ கத்துக்க ஆரம்பிச்சப்ப அபர்ணா அளவுக்குத் தீவிரமா எடுத்துக்கல. ஆனா, இப்ப அவளும் முழுமையா இதில ஈடுபடறா. இப்ப பத்துப் பன்னிரண்டு வருஷமா அவளும் ஆடறா. வள்ளிகிட்ட நடனம் கத்துக்கறா. அவளுக்கு சமீபத்தில McKnight Dancer Fellowship கிடைச்சிருக்கு. தனக்கு வள்ளியை ஒரு உருப்படி பண்ணித்தரச் சொல்லி கேட்டிருக்கா. எங்க கம்பெனில முழுமூச்சா வேலை செய்யறா. அவதான் பப்ளிசிடி எல்லாம் பாத்துக்கறா. குழந்தைகளோட டீன் ஏஜ் பிரச்சனைகளை நான் சந்திச்சதில்லை. அதுல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.



ஸ்னிக்தா: கேட்க ஆச்சரியமா இருக்கு.
ராணி: நான் எப்பவும் குழந்தைகளை வேலைக்குப் போகும்போது கூட்டிப் போவேன். அபர்ணாவோட எனக்குக் கஷ்டமே இல்லை. ஆனா அஸ்வினி, கிருத்திகா மாதிரிதான். நியூ யார்க் போய் 5 வருஷம் வேலை பார்த்துட்டுத் திரும்பி வந்தா. இப்ப இங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா. நடனத்தில முழுமையா ஈடுபட்டிருக்கா. இலக்கை அடையப் பல வழிகள் இருக்கு. ஆனா தொடர்ந்து அர்ப்பணிப்போட உழைச்சது அபர்ணாகிட்ட கண்டிப்பாத் தெரியுது.

ஸ்னிக்தா: நீங்க அமெரிக்காவில நிறைய நல்ல டான்ஸர்களும், ஆசிரியர்களும் இருக்காங்கன்னு சொன்னீங்க. நீங்க பிற வகை (genre) நடனங்கள் ஆடறவங்ககூட இணைந்து நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கீங்க. அது பரதநாட்டியத்தைப் பொது நீரோட்ட ரசிகர்கள்கிட்ட கொண்டுபோக எப்படி உதவியது?
ராணி: இது நல்ல கேள்வி. மத்தவங்களோட இணைந்து செயல்படறது மட்டுமில்ல, எந்த வழியாக, எந்தப் பொதுப்புள்ளியில் அவர்களைச் சந்திக்கிறோம் என்பதும் முக்கியம். நாங்க ராகமாலிகா தொடங்கி, ராபர்ட் ப்ளையோட (Robert Bly) மீராபாய் சரிதத்தை நாட்டிய நிகழ்ச்சியா பண்ணினோம். முதல் பரிசோதனை முயற்சி அது. ராபர்ட் ப்ளை தானே தன் கவிதையை வாசிக்க, சிதார், தப்லா பின்னணிக்கு நான் ஆடினேன். ஒவ்வொரு கவிதையை அடுத்தும் மீராபாய் பாடல்களை ஹிந்தியில ஒருவர் பாட அதுக்கு ஆடினேன். கவிதை, பாட்டு இப்படி நிகழ்ச்சி அமைந்திருந்தது. பாரம்பரிய நடனம்தான். நான் சிதாருக்கும், தபேலாவுக்கும் ஆடினா பார்வையாளர்கள் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சேன். ஆனா ராபர்ட் பளை அதுதான் வேணும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டார். ஏன்னா அது அவரோட குழு. அதுமட்டுமில்ல, மின்னஸோட்டால, மின்னியாப்பொலீஸில வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் வாசிக்க யாரும் கிடையாது. இந்தியாவிலேந்து அழைச்சிட்டு வரணும். அதுக்குப் பணம் இல்ல. ஒலிப்பதிவு செய்த டேப் வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவேன். இந்தியாவிலேந்து அவ்வளவு பாட்டுக்களையும் ஒலிப்பதிவு செய்து எடுத்துட்டு வருவேன். அப்பத்தான் முதல் முதலா பக்கவாத்தியங்களோட பரிசோதனை. ராபர்ட் ப்ளையின் கவிதை ஆற்றல்மிக்க ஒன்று. அவர் ரொம்பப் புகழ் பெற்றவர். அவருக்காகவே பார்க்க வந்தாங்க. இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே ஆடியிருந்த நான், அதில் அமெரிக்க ரசிகர்களுக்கு ஆடினேன். ஆங்கிலக் கவிதைகள் வாசிக்கப்படவே அவர்கள் என் நடனத்தைப் புரிஞ்சு, ரசிக்க முடிஞ்சது.

புகழ்பெற்ற நடன வடிவமைப்பாளர்களான ஈகோ (Iko), கோமோ (Komo) ஆகியோர் பங்கெடுத்த சீசன்ல நானும் நிகழ்ச்சி கொடுத்தேன். அதனால நிறையப் பேர் என் நடனத்தைக் கவனிச்சாங்க. இப்படி செய்யலேன்னா இதப்பத்தி யாருக்கும் தெரியப் போறதில்லைன்னு புரிஞ்சுகிட்டேன். நான் மின்னியாப்பொலீஸ்ல ஆண்டாண்டுக் காலம் 'மார்க்கம்' வழிமுறையில ஆடிட்டிருக்கலாம். அதுக்குமேல எதுவும் செய்யமுடியாது. மார்க்கம் எனக்குப் பிடிக்காதுன்னு நான் சொல்லலை. இங்க எல்லாரும் தினமும் அதைத்தான் ஆடிப் பழகறோம். புதுசா என்ன செய்யமுடியும்னு தேட ஆரம்பிச்சேன். ஒண்ணொண்ணா, நிறையப் பேரோட இணைந்து ஆடற வாய்ப்பு வர ஆரம்பிச்சது. மில்வாக்கியோட கோத்தி டான்ஸ் கம்பெனிகூட சேர்ந்து 'இரண்டு மரங்களின்' கதைக்கு ஆடினோம். பாதி பேர்பாம் மரமும், பாதி ஆலமரமுமா இருக்கிறமாதிரி அரங்க அமைப்பு. ஆலமரத்துக்குக் கீழ நடக்கிற கதைகளை நாங்களும், பேர்பாம் மரத்துக்குக் கீழ நடக்கிற கதைகளை கோத்தி டான்ஸ் கம்பெனியும் ஆடினோம். அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து ஆடினோம். பில்லி ஹாலிடேயோட (Billy Holiday) 'த பாடி அண்ட் சோல்' ஜாஸ்/ப்ளூஸ் பாடல்களுக்கு ஒரு முழு மாலைநேர நிகழ்ச்சி பண்ணினோம். ஆனா எப்பவுமே பரதநாட்டியம்தான். அதோட தூய்மை கெடாமப் பார்த்துக்கிட்டேன். நிறைய இடங்களிலிருந்து எனக்கு இன்ஸ்பிரேஷன் கிடைச்சது. ஜப்பானின் டொகேடோ டைகோ கூடச் சேர்ந்து 'The Sound as God' நிகழ்ச்சி பண்ணினோம். வேதங்களிலிருந்தும், பக்திப்பாடல்கள்ள இருந்தும் கடவுளை நாதமாக விவரிக்கிற வரிகளை எடுத்து ஆடினோம். இதில ஜப்பானிய டைக்கோ டிரம்மர்ஸ் நம்ம தாளங்களைக் (Rythm) கத்துக்கிட்டு வாசிச்சாங்க. சிலசமயம் நாங்க அவங்களோட தாளக்கட்டுக்கு ஆடினோம். இதை இரண்டு கலைகளுக்கு, இரண்டு கலைஞர்களுக்கு இடையிலான உரையாடல்னு சொல்லலாம்.

ஸ்னிக்தா: வெரி இன்டரெஸ்டிங்....
ராணி: இரண்டு வாரம் முன்னால '1001 Buddhas. The Journey of the God' அப்படிங்கற ஒரு நிகழ்ச்சி ஒண்ணு செய்தோம். அதுக்கான இன்ஸ்பிரேஷன் க்யோடோவில சான்ஜுஸான்ஜெண்டோ (sanjusangendo) கோவிலுக்குப் போனபோது வந்தது. அங்க 28 இந்துக் காவல் தெய்வங்களின் உருவங்கள் இருக்கு. சிவன், பிரம்மா, சரஸ்வதி, கருடன், வாயு, வருணன் எல்லா உருவங்களும் இருந்தது. இந்த நிகழ்ச்சில டைகோ டிரம்மர்ஸ், செண்டை வாத்தியக்காரர்கள், தென்னிந்திய இசைக்கருவிகள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆர்க்கெஸ்ட்ரா இசை உருவாக்கினோம். நாங்க அந்த உருவங்களாவே மாறினோம். ரொம்ப எக்ஸைடிங்கா இருந்தது. அவரவர் துறையில் மிகத் தேர்ந்தவர்களின் கூட்டுமுயற்சி இது.

ஆரம்ப காலத்தில, எல்லாரையும் நம்ம கலை போய் அடையணும்னு ஆசைப்பட்டோம். இப்ப, நம்ம கலை, கலாசார, தத்துவ உலகத்துக்குள்ளே அவங்களைக் கொண்டுவரணும்னு நினைக்கிறோம். போன அஞ்சு வருஷமா வித்தியாசமான முயற்சிகள் பண்ணறோம். இந்தியாவின் வரளி சித்திரங்கள், சங்கப்பாடல்கள், கோலம் இவற்றின் உதவியோட இந்த பூமி புனிதமானதுங்கற பழமையான நம்பிக்கையை சொல்றோம். தத்துவங்களை, பரதநாட்டியப் பாரம்பரியத்தை மாத்தாம, புதுமையா சொல்லறோம். சில சமயம் ஆங்கிலக் கவிதைகளை உபயோகிக்கறோம். இப்படித்தான் அமெரிக்கப் பார்வையாளர்களுக்கு இந்தக் கலைல ஆர்வம் வரவைக்க முடியும்.

(தொடரும்)

கிருத்திகா ராஜகோபாலன்: நாட்யா டான்ஸ் தியேடரின் இணை கலை இயக்குனரும், முக்கிய நடனமணியும் ஆவார் இவர். நடன வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றவர் என்பதோடு 200க்கு மேல் தனி நடன நிகழ்ச்சிகளும் வழங்கியுள்ளார். நாட்யா நிறுவனர் குரு ஹேமா ராஜகோபாலன் அவர்களின் மகளும், மாணவியும் கூட. இவரைப் பற்றி மேலும் அறிய: natya.com

ஸ்னிக்தா வெங்கடரமணி: தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர், கர்நாடக இசைப் பாடகர், நடிகர் எனப் பல பெருமைகள் கொண்டவர். பத்மஸ்ரீ டாக்டர். சரோஜா வைத்யநாதன் அவர்களிடம் மிகச் சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றார். இந்தியன் கவுன்சில் ஆஃப் கல்சுரல் ரிலேஷன்ஸின் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர் என்ற வகையில் பல நாடுகளுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். இவரைப் பற்றி மேலும் அறிய: artindia.net

உரையாடல்: ஸ்னிக்தா வெங்கட்ரமணி, கிருத்திகா ராஜகோபாலன்
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

*****


எங்கள் குரு அலர்மேல் வள்ளி
1994ல நானும், அபர்ணாவும் ஆடின விடியோ பார்த்தேன். அபர்ணாவுக்கு 8 வயசா இருந்தப்ப வள்ளி சொல்லிக்குடுத்த ஒரு வர்ணத்தை ஆடி இருந்தா. அதையே போன ஜனவரில மியூசிக் அகாடமில வள்ளி ஆடினா. அவளோட வளர்ச்சி அபரிமிதமானதுன்னு தெரிஞ்சது. அந்த நடனம் எங்களை அசர வைச்சது. அவங்க படைப்பாற்றல், நடன அமைப்பு இதையெல்லாம் பார்த்து எங்க வியப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு. இப்ப அவங்க எங்களுக்கு நண்பர், வழிகாட்டி எல்லாம். ஆரம்பத்துல அவங்க குரு மட்டும்தான். அவங்கள 1983லேருந்து தெரியும். இந்த 30 வருஷத்தில அவங்க நல்ல சிநேகிதி ஆயிட்டாங்க. அவங்க என்னவிட 4 வயசு சின்னவங்க.

ஒருதரம் நாங்களும் அவங்களும் ஒரே விமானத்துல இருந்தோம். ஆம்ஸ்டர்டாம்ல பார்த்தோம். ஐரோப்பாவுல 8 நிகழ்ச்சிகள் கொடுத்திட்டு இந்தியா திரும்பிக்கிட்டிருந்தாங்க. மும்பையில இறங்கினதும் அவங்களுக்கு நிகழ்ச்சி இருந்தது. நான் சோர்வா இருக்கு, கஷ்டமா இருக்குன்னு நினைக்கும் போதெல்லாம் அவங்களை நினைச்சுப்பேன். எவ்வளவு கடின உழைப்பாளி! அபர்ணாவுக்கு வள்ளிதான் எல்லாம். தன் துறையில முதலிடத்தில இருக்காங்க. நிறைய புகழ். இருந்தாலும் இன்னிக்கும் எந்த நிகழ்ச்சி பண்ணினாலும் அதுதான் முதல் நிகழ்ச்சி மாதிரி உழைக்கிறாங்க. இதெல்லாம் குருகிட்ட இருந்து கத்துக்க வேண்டிய நல்ல விஷயங்கள். எதைச் செய்தாலும் நூறு சதவீதம் செய்வாங்க.

அபர்ணாவுக்கும் எனக்கும் வழிமுறைகள் வேற, வேற. எனக்கு ஒரு ஐடியா வந்தா, நான் அதை முழுசா கற்பனை பண்ணிப் பார்ப்பேன். அப்புறம் அதுல அபர்ணா ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனிச்சு நேர்த்தியா வரவரைக்கும் வேலை செய்வா. இதை அவ வள்ளிகிட்ட இருந்து கத்துகிட்டா. அதுதான் ஒரு குருவோட அடையாளம். நாம அவங்க உயரத்தை எட்டிப்பிடிக்கவே முடியாது. அவங்கள ஒரு வியப்போடதான் பார்க்கமுடியும். அவங்ககிட்ட கத்துக்கிட்ட ஒவ்வொண்ணும் ஒரு அகராதி மாதிரி. அதுலேயிருந்து அடுத்த உருப்படிய நாம படைக்கலாம்.
- ராணி ராமஸ்வாமி

*****


புதிதாய் முளைக்கும் நடனப் பள்ளிகள்
இந்தியாவில இன்றைக்கு ஒவ்வொரு தெருமுனையிலயும் ஒரு நல்ல நாட்டியப் பள்ளி இருக்கு. அஞ்சாறு வருஷம் அதுல கத்துக்கிட்ட ஒருத்தர், அமெரிக்கா போய் ஸ்கூல் தொடங்கலாம்னு வராங்க. இதைத் தப்புன்னு சொல்லல. ஏன்னா, நானே அப்படித்தான் தொடங்கினேன். கத்துக்குடுக்கணும்ங்கற நல்ல எண்ணத்துல வராங்க. உண்மையாவே நல்ல தரமான கலையைத்தான் சொல்லித்தராங்களா? நிறையப் பேர், எங்க அத்தை டான்ஸர், சகோதரி டான்ஸர், எவ்வளவு அழகான நடனம், அழகான உடைகள் அப்படின்னு சொல்லறதைக் கேட்கறோம். ஆனா இப்படி வரதுனால இந்தக் கலைக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்குன்னு நினைக்கிறேன். இந்தக் கலையிலயே தீவிரமா முழுகி, நல்லா சொல்லிக்குடுக்க எத்தனையோ சிறந்த கலைஞர்கள் இங்கே இருக்காங்க. ஏதோ தெரிஞ்சதைச் சொல்லிக் கொடுக்கறவங்களும் நிறைய இருக்காங்க. நுணுக்கங்களைச் சரியாக் கத்துக்காத ஒரு குழந்தை ஆடறதப் பார்க்கிற ஒருத்தர் இதுதான் இந்திய நடனம்னு நினைக்கிற அபாயம் இருக்கு.
- ராணி ராமஸ்வாமி

© TamilOnline.com