தென்றல் பேசுகிறது...
இந்த ஆண்டுமுதல் மே மாதத்தை அதிபர் ஒபாமா 'ஆசிய அமெரிக்கர் மற்றும் பசிஃபிக் தீவினர் பாரம்பரிய மாத'மாக (Asian Americans and Pacific Islanders Heritage Month) அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்கான ஏப்ரல் 30ம் தேதியிட்ட அறிக்கையில், ஒரு புதிய வாழ்வைத் தேடி அமெரிக்க மண்ணுக்கு வந்த ஹவாய்த் தீவினர், சீனர் மற்றும் ஜப்பானியர் பட நேர்ந்த அவலங்களைக் குறிப்பிட்டு வருந்தியுள்ளார். சென்ற பத்தாண்டுகளில் தெற்காசியர்கள், குறிப்பாக முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், தமது தோலின் நிறத்துக்காகவும், மதக் கொள்கைக்காகவும் வன்முறைகளைச் சந்திக்க நேர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளார். எல்லாப் பாகுபாடுகளையும் அகற்றி "எல்லாருக்கும் எல்லாமும் சாத்தியப்படும் தேசமாக" (a Nation where all things are possible for all people) அமெரிக்காவை நம்மால் மீண்டும் ஆக்கமுடியும்" என்று அதிபர் கூறியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஆசிய அமெரிக்கர்களும் பசிஃபிக் தீவினரும் ஆற்றிய, ஆற்றிவரும் பணிகள் மறக்கப்படாமல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட இந்த அறிவிப்பு வழிகோலுகிறது. பார்க்க: AsianPacificHeritage.gov. அதிபருக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

*****


பாஸ்டன் மாரத்தானின் முடிவுக் கோட்டில் வெடித்த குண்டு அமெரிக்காவை உலுக்கியிருக்கிறது. ஆனால் இந்தியாவையோ பெண்ணினம் மீது தொடர்ந்து ஏவப்படும் பாலியல் வன்முறைச் செயல்கள் உலுக்கி வருகின்றன. ஜான்சி ராணி, கஸ்தூர்பா காந்தி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்று பெருமை பேசிய மண்ணில், வினோதினிகளும் நிர்பயாக்களும் சிந்திக்கவொண்ணாத வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழக்கிறார்கள். இதில் மனதை வருந்த செய்வது என்னவென்றால் குற்றவாளிகள் சில சமயம் 14 வயதே ஆனவர்களாக இருப்பதும், வன்கொடுமை செய்யப்படுவது இரண்டரை வயதுக் குழந்தையாகவும் இருப்பதுதான். இதற்காக மின்வெளியிலும், இந்தியத் தலைநகரிலும் பெரும்போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், எங்கோ இருக்கும் பெயரறியாத கிராமங்களில் அதே மாதிரியான பாலியல் குற்றங்கள் நடப்பதைச் செய்தித் தாள்கள் தினந்தோறும் பட்டியலிட்ட வண்ணம் இருப்பது நெஞ்சைப் பதறவைக்கிறது. அத்தோடல்லாமல், இந்தியாவுக்குச் சுற்றுலாப் போகும் வெளிநாட்டுப் பெண்கள் படும் அல்லல்கள் சொல்ல முடியாது. காமத்தைத் தூண்டும் நீலப்படங்களைப் பார்த்தபின் மதுவை அருந்திவிட்டு ஓர் இளைஞர் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது சிந்தனைக்குரியது. ஆனால், காமப்படங்கள் என்றல்லாமல் ஜனரஞ்சகப் படங்களின் பாடல் காட்சியமைப்பும், கதையமைப்புமே முழுக்க முழுக்கக் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புகின்றன என்பதையும் யாரும் மறுக்க முடியாது. மிகப் பாரம்பரியமான ஒரு சமுதாயத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் திடீரென்று அவர்கள் பார்த்திராத கலாசாரம் ஒன்று அவிழ்த்து விடப்படும்போது அது ஒரு சூறாவளியின் அழிவை ஏற்படுத்துகிறதோ என்று தோன்றாமல் இல்லை. யார் இதற்கு மாற்றுக் கண்டுபிடிக்கப் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

*****


புலி தன் கோடுகளை மாற்றிக் கொண்டாலும் சீனாவின் ஆதிக்கக் குணம் மாறப் போவதில்லை. இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்து கூடாரம் அடித்து உட்கார்ந்து கொண்டிருப்பது இதற்கு இன்னுமொரு சாட்சி. இந்திய அரசு இதனைப் பார்க்கும் விதம் எந்த வகையிலும் சுயமரியாதையைக் காட்டுவதாக இல்லை. பெரிய பெரிய நாடுகளெல்லாம் சீனாவின் மலிவான உற்பத்திச் சாலைகளுக்கு அடிமையாகி மௌனிக்கும் நிலையில், இந்தியா வேறெவரின் ஆதரவையும் எதிர்பார்க்காமல் தானேதான் குரல் எழுப்பி ஆகவேண்டும். இந்திய அரசின் அண்மைக்காலத் தோல்விகள் வரிசையில் ஒன்று என்றுமட்டும் அல்லாமல் சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு பலவீனமான நாடு என்று கருதப்படவும் இது வாய்ப்பளிக்கும் என்பது நமது அச்சம்.

*****


சத்தியமங்கலம் காட்டுப் பகுதியின் சக்ரவர்த்தியாகக் கோலோச்சிக்கொண்டிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை இல்லாதாக்கியவர் என்பதிலிருந்து தொடங்கி, சத்தியம், நேர்மை, நாணயம் என்று வாய்க்கு வாய் கூறுவதுவரை அரசு அதிகாரிகளில் மிக மாறுபட்டவர் ஆர். நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு). அவரது சந்தனக் காட்டு சகாப்தத்தைப் பற்றி விவரித்துள்ளார் தென்றல் வாசகர்களுக்காக இந்த இதழில். ஒரு கலையில் ஆறாத ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் அதை மீட்டெடுத்து, உச்சத்துக்குப் போகமுடியும் என்னும் அற்புதக் கதையைச் சுவையாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராணி ராமஸ்வாமி. தவிர, இளம் சாதனையாளர்களின் அணிவகுப்பு ஒன்றும் உள்ளே காத்திருக்கிறது. கதைக் களஞ்சியமும் உண்டு. படியுங்கள். ரசியுங்கள்.

வாசகர்களுக்கு உழைப்பாளர் தின, அன்னையர் தின வாழ்த்துக்கள்.

ஆசிரியர் குழு

மே 2013

© TamilOnline.com