இசை: அலேக்யா ராஜநாலா
மார்ச் 2, 2013 அன்று ஸ்ரீ லலிதகான வித்யாலயா மாணவி அலேக்யா ராஜநாலாவின் கர்நாடக சங்கீதக் கச்சேரி ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி சாரங்கா வர்ணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சக்ரவாக ராகத்தில் 'கஜானன யுதம்' என்ற தீக்ஷிதர் க்ருதியையும், பத்ராசல ராமதாசரின் 'நன்னு ப்ரோவ' என்ற பாடலைக் கல்யாணி ராகத்திலும் பாடினார். நிகழ்ச்சியின் முக்கியப் பாடலாக 'மேரு சமான' என்ற தியாகராஜ சுவாமிகளின் க்ருதியை மாயாமாளவ கௌள ராகத்தில் நன்கு கையாண்டார். ஹிந்தோளத்தில் மைசூர் வாசுதேவாசாரின் 'மாமவது' என்ற க்ருதிக்கு அருமையாகக் கல்பனா சுவரம் பாடினார்.

பாலாஜி மகாதேவன் மிருதங்கமும், சுசீலா நரசிம்மன் வயலினும் அருமையாக உடனிருந்தன. இளம் கலைஞருக்கு அனுசரணையாக இருவரும் வாசித்தது பாராட்டத்தக்கது. தொடர்ந்து 'ரகுவம்ச சுதா', அன்னமாசார்யரின் 'இட்டி முத்து', மார்கபந்து ஸ்தோத்திரம், மீரா பஜன், திருப்புகழ் என்று ஒரு சிறப்பான விருந்தை குரு லதா ஸ்ரீராம் தயாரித்து இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அலேக்யா 'எந்தரோ மகானுபாவுலு' மற்றும் டாக்டர். எம். பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானா ஆகியவற்றைப் பாடி மனநிறைவை அளித்தார். அலேக்யாவின் உச்சரிப்பும், நம்பிக்கையுடன் பாடிய விதமும் சிறந்தது. அலேக்யா ஃப்ரீமான்ட் மேல்நிலைப் பள்ளி மாணவி. அவருக்கு ஹார்வர்டில் இடம் கிடைத்திருக்கும் செய்தியை அறிமுக உரையில் கூறினர்.



© TamilOnline.com