சிகாகோ: 'பொன்னியின் செல்வன்'
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினம் சிகாகோ தமிழ் சங்கத்தின் சார்பில் மே 4, 2013 அன்று ஆஸ்வீகோ ஈஸ்ட் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் (Oswego East High School Auditorium) நாடகமாக அரங்கேறப் போகிறது. மூன்று மணி நேரத்திற்கும் மேலான இந்த நாடகத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் சிகாகோ தமிழர்கள் பங்கேற்கின்றனர். பொன்னியின் செல்வர், வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலர், சுந்தர சோழர் என நாம் நேசித்த அனைத்துப் பாத்திரங்களும் மேடையில் தோன்றவுள்ளனர். மூன்று, நான்கு குழுக்களாக ஒத்திகை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக நடிகர்கள் தேர்வு, ஒத்திகை எனத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கலிஃபோர்னியா பாகீரதி சேஷப்பன் இயக்குகிறார். வரலாற்று நாடகத்தில் உடையலங்காரம் மிகவும் முக்கியமானது என்பதால், சென்னையின் பிரபல திரைப்பட உடையலங்கார நிபுணர் அறவாழி ஆடை வடிவமைத்துள்ளார். ஒப்பனைப் பொருட்கள், கிரீடங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேர்ந்த வல்லுனர்களால் சென்னையில் தயாராகிச் சிகாகோ வரவிருக்கின்றன. மேடைக்கான திரைச்சீலைகளும் சென்னையிலேயே தயாராகி வருகின்றன.

மிதக்கும் படகு, அரண்மனை, கப்பல் என எல்லாமே மேடையில் தோன்றப் போகின்றன. கடலில் கப்பல் தீப்பிடிக்கும் காட்சிகூடத் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளது! பொக்கிஷ நிலவறையையும் விட்டுவிடவில்லை. ஓவியர் மணியம் வரைந்த கதாபாத்திரங்கள் உயிர் பெற்று மேடையில் உலவும் உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படும் அளவுக்கு நடிகர் தேர்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலதிகத் தகவல்களுக்கு: chicagotamilsangam.org

அனைத்து அமெரிக்க மாகாணங்களிலிருந்தும் பயணம் செய்து போய்ப் பார்க்க ஏற்றதாக சிகாகோ 'பொன்னியின் செல்வன்' நாடகம் தயாராகிறது என்றால் மிகையல்ல. ஒரு தலைசிறந்த வரலாற்று நாடகத்தைக் கண்டுகளிக்கும் வாய்ப்பை அமெரிக்கத் தமிழர்கள் தவறவிடக் கூடாது.

தினகர்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com