மார்ச் இதழில் முன்னோடி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றிய கட்டுரை மனதைக் கவர்ந்தது. வாசகர் வட்டம் வெளியிட்ட 'நடந்தாய் வாழி, காவேரி' என்ற அருமையான நூல் சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும் சேர்ந்து எழுதியது. இரவல் போனது திரும்ப வராததால் புதிதாக வாங்க விரும்பி தி.நகர்., தணிகாசலம் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பழுத்த பழமாக சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். புத்தகம் இல்லை. எதற்கும் அந்த அறையில் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார். அந்தக் குவியலில் எப்படியோ சிக்கியது. அவரிடம் காட்டி அதற்குரிய தொகையைத் தந்தேன். அவர் அதைப் பார்த்து, இதை எப்படித் தருவது? புத்தகம் சிதைந்து போயிருக்கிறது. நல்ல புத்தகத்தைத்தான் விற்க முடியும். இதற்கு வேண்டாம் என்றார் எனக்கு இதுவே போதும் என்றேன். அவர் மனம் ஒப்பவில்லை. அங்கே வந்த லட்சுமி அவர்கள், பரவாயில்லை, அவர்தான் விரும்புகிறாரே. சிதைந்திருப்பதால் பாதிவிலை போட்டு விடுங்கள் என்றார். அந்தப் புத்தகம் இன்னமும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது. எத்தனை அற்புதமான நூல்களை வெளியிட்டது வாசகர் வட்டம். அது ஒரு காலம்.
இரு நேர்காணல்கள். சாரு ஜெயராமன், அடித்தட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சமத்துவத்துக்காகவும் பாடுபடுவதைத் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருப்பதை நினைக்கும் போது பெருமிதமாக இருக்கிறது. வாழும் நாட்டில் நம்மவர்கள் செய்யும் பணி பிறந்த நாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது. மங்கையர்க்கரசி சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், இவரது திறமைகளும் பாராட்டப்பட வேண்டியவையே. பழமைபேசியின் இரு கவிதைகள் சுவையானவை. கவிதைகள் மெருகேறி வருகின்றன இவரது கவிதைகள். இரு கதைகள்; பாசம் மனிதரிடம் மட்டுமா, வளர்ப்புப் பிராணிகளிடமும் கூட அல்லவா? செல்லப் பிராணியான நாய்க்குப் பெயர் வைப்பதும், அதனோடு மனிதர்களிடம் பழகுவது போலவே உண்டாகும் உணர்வுகளைச் சித்திரிக்கும் விதமும் அதனைத் துப்பறியப் பயில்விப்பதும், அதன்மூலம் செப்டம்பர் 11ல் நிகழ்ந்த துயர சம்பவத்தை நினைவு கூர்வதுமாக வீடு, மனிதர், நாடு என்கிற களத்தில் விரிவது நன்றாக இருக்கிறது. அகிலாவின் எழுத்து இன்னமும் வளர்வதாக.
அபர்ணா பாஸ்கரின் 'குய்யா தாத்தா' மனசைப் பிழிந்து எடுத்துவிட்டார். பணம் மட்டுமே முக்கியமாகப் போய்விட்ட நுகர்வுக் கலாசாரத் தலைமுறைக்கு, போன தலைமுறை அன்பு பாசப் பிணைப்பு கொண்ட தாத்தா முகத்தில் அறைந்தது போன்றிருந்தது, அவர் தனது பேரன் கையில் திணித்த பணம். நல்ல கதை. 'பைக் ராணி' சித்ரா ப்ரியாவின் சாதனை மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்கிறது. ஹரிமொழி, சமயம் எல்லாமே சிறப்பு.
இரவீந்திர பாரதி, சிடார் ரேபிட்ஸ், அயோவா
*****
மார்ச் மாத மகளிர் சிறப்பிதழ் மிகவும் நன்றாக இருந்தது. வயது வித்தியாசமில்லாத சாதனைப் பெண்களுடன் தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியையும் குறிப்பிட்டிருந்தது மாதர்க்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருந்தது. சீதா துரைராஜ் மூலம் புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோயிலையும் நரசிம்மரையும் தரிசித்துப் புண்ணியம் பெற்றோம். ஆப்பிளிலும் சட்னி செய்யலாம், வித்தியாசமான சுவை! ரசித்துச் சாப்பிட்டோம்.
'வாழ்வென்பது...' வித்யா சுப்பிரமணியனின் சிறுகதை தற்கால இளம் சமுதாயத்தினரை புதிய திருப்பத்துக்கு எடுத்துச் செல்லும் கதையாக உள்ளது. நல்ல முயற்சி. விட்டுக் கொடுக்கும் தன்மையை விவரித்த பாங்கு மிக நன்றாக இருந்தது. சித்ரா வைத்தீஸ்வரனின் மாறுபட்ட சிந்தனைகள், நமபிக்கைகள், யோசிக்க நேரமில்லாத அனைத்து மக்களுக்கும் தேவையானவை. தாய்மையும், பாசமும், தாயைப் பெற்ற குழந்தையும் பாசப் பிணைப்புகளாக இணைந்துள்ளது. எப்போதும் போல் சொல்கிறபடிதான் என்றாலும் மிகவும் தனித்தன்மை பெற்ற தென்றலாக, இன்னுமொரு சிறப்பிதழாக, புதிய மணம் வீசும் மலராக அமைந்தது இன்னமும் சிறப்பு.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிடி, கலிஃபோர்னியா
*****
ஹரிகிருஷ்ணன் அவர்களின் 'நத்தைமடி மெத்தையடி' படித்தேன். மிக அருமை. இரு வெவ்வேறு அகராதிகளிலிருந்து இரு குறள்களுக்கு அருமையாக விளக்கம் கொடுத்தார். விளக்கங்கள் எளிமையாகவும் இருந்தன. அடுத்த தலைமுறையினரும் புரிந்துக்கொள்ள ஏதுவாக இருந்தன. இறுதியில் 'ஏரல் எழுத்து' என்று வாசகர்களைக் குழப்பிவிட்டாரே! இதற்கு விடை தெரிந்துகொள்ள இன்னும் ஒரு மாதம் ஆகுமே? ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
தளவாய் நாராயணசாமி, ஹூஸ்டன், டெக்சாஸ் |