தெரியுமா?: சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்'
ஒவ்வோராண்டும் இந்திய மொழி ஒன்றில் சிறந்த படைப்பைத் தரும் இளம் படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து 'யுவ புரஸ்கார்' விருதை சாகித்ய அகாதமி வழங்குகிறது. 2012ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான இந்த விருது கன்னியாகுமரி மாவட்டத்தின் வெள்ளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த மலர்வதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'தூப்புக்காரி' நாவல் இவ்விருதைப் பெற்றுத் தந்துள்ளது.

மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மலர்வதி சொந்த வாழ்க்கை அனுபவங்களையே நாவலாக்கியிருப்பதாகக் கூறுகிறார். 'தூப்புக்காரி' என்றால் நாஞ்சில் தமிழில் துப்புரவுப் பணியாளர் என்பது பொருளாம். "மலத்தைப் பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்கூட்டத்திற்கு மத்தியில் உணவு சாப்பிடும் ஆயிரக்கணக்கான விளிம்புநிலை மனுஷிகளில் ஒருவராகத்தான் என் அம்மா இருந்தார். அந்தச் சூழலில்தான் நான் வளர்ந்தேன். தன்னை அசுத்தப்படுத்திக் கொண்டு தன் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்ட அம்மாவைப் போன்ற பெண்களுக்குச் சமர்ப்பணம் இந்த நாவல்" என்கிறார் மலர்வதி.

"சின்னப் பிள்ளையா பள்ளிக்கூடத்துல இருந்து திரும்பி வந்ததும் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அம்மா உச்சி முகர்ந்து முத்தம் கொடுப்பாங்க. அப்போ அவங்க மேல அடிச்ச பினாயில் நெடி இப்பவும் என் நெஞ்சின் அடியாழத்தில் பதிஞ்சிருக்கு. அது என் உள்ளுணர்வில் உண்டாக்கிய உணர்வுதான் 'தூப்புக்காரி' நாவலின் ஒவ்வொரு வார்த்தையும்" என்கிறார். தாமிரப் பட்டயமும், 50,000 ரூபாய் ரொக்கமும் அடங்கியது இவ்விருது. அசோகமித்திரன், பேரா. டாக்டர். பஞ்சாங்கம், பேரா. டாக்டர் ஈ. சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட நடுவர் குழு இந்நாவலை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. நாகர்கோவிலிலிருந்து வெளிவரும் 'முதற்சங்கு' என்ற மாத இதழுக்கும், 'இலக்கியச் சிறகு' என்ற நாளிதழுக்கும் பொறுப்பாசிரியராக இருக்கும் மலர்வதியின் இயற்பெயர் மேரி ஃப்ளோரா. 'தூப்புக்காரி' இவர் எழுதிய இரண்டாவது நாவல். நாகர்கோவிலின் அனல் பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது.



© TamilOnline.com