தெரியுமா?: விளக்கு விருது
2011ம் ஆண்டின் விளக்கு விருது கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமரிசகர், பேரா. எம்.ஏ. நுஃமான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் கவிதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, சிந்தனை எனப் பல களங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் வசிக்கும் பேரா. நுஃமான் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். 'திறனாய்வுக் கட்டுரைகள்', 'மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்', 'மொழியியலும் இலக்கியத் திறனாய்வும்', 'பாரதியின் மொழிச்சிந்தனைகள்', 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம்', 'மொழியும் இலக்கியமும்' போன்ற அவரது விமரிசன நூல்கள் மிக முக்கியமானவை. 'தாத்தாமாரும் பேரர்களும்', 'அழியா நிழல்கள்', 'மழைநாட்கள் வரும்', 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' போன்ற கவிதை விமரிசன நூல்கள் வரவேற்பைப் பெற்றவை. பாலஸ்தீன, மலாய், இந்தோனேசிய கவிஞர்களின் முக்கியக் கவிதைகளைத் தமிழில் பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். நுஃமான், அண்ணாமலைப் பல்கைலயில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலையிலும் மலாய்ப் பல்கலையிலும் வருகைப் பேராசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். தற்போது இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியாகப் பணியாற்றி வருகிறார். இலங்கையிலுள்ள பன்னாட்டு இனவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர்களில் இவர் ஒருவர்.



© TamilOnline.com