பாட்டி தாத்தா வேணும்!
சான்ஃபிரான்சிஸ்கோ ஏர்போர்ட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏர்லைன்ஸ் கவுண்டரில் பெட்டிகளைக் கொடுத்து செக்-இன் செய்துவிட்டு, சாவி, கடிகாரம், கைப்பை எல்லாவற்றையும் உருவி செக்யூரிடி செக் செய்துகொண்டு, போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் விமானம் புறப்படும் கேட் இருபத்து மூன்றில் வந்து உட்கார்ந்து கொண்டேன். இதே விமான நிலையத்திலிருந்து பலமுறை பலநாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இன்று என்னவோ எல்லாமே வித்தியாசமாகப் பட்டது. பயம், மகிழ்ச்சி, பதட்டம் எல்லாம் சேர்ந்து கொண்டு மனதை அலைக்கழித்தது.

இருபது வருடங்களுக்கு முன்னால் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தவன் இதுவரை இந்தியாவுக்குத் திரும்பச் செல்லவில்லை. இன்று கிளம்பி உள்ளேன். அதுவும் என் பிள்ளைகளின் நச்சரிப்பினால்.

ஃப்ளைட் கிளம்பவே இன்னும் ஒரு மணி இருந்தது. சென்னை போய்ச்சேர இருபத்தி இரண்டு மணி நேரமாகும். ஆனால் மனமோ சென்னையைத் தாண்டி என் கிராமத்துக்கே போய்விட்டது. அது காவிரிக்கரையில் அழகான, செழிப்பான கிராமம் தஞ்சை ஜில்லாவில். ஊரின் ஒரு பக்கம் பிள்ளையார் கோவில், மறுபக்கம் காவிரி ஆறு. மறுகரையில் தாத்தாவின் தோப்பு. அங்கு சென்று கொய்யா, இளநீர், மாங்காய் சாப்பிட்டது மறக்க முடியாததுதான்.

காலேஜ் முடித்து அமெரிக்காவில் ஒரு பெரிய கல்லூரியில் சேருமுன் கிராமத்திற்கு அப்பா, அம்மாவிடம் ஆசி வாங்கப் போனதும், அம்மா கண்ணீர் விட்டு அழுததையும், அப்பா துக்கத்தை அடக்கிக்கொண்டு, "படித்து முடித்து உடனே திரும்பி வந்துடுடா" என்று கண்ணீர் மல்கச் சொன்னதையும் இப்போது நினைத்து என்ன பயன்? ஒரே பிள்ளையாகிய என்னை எப்படி அவர்களால் பிரிந்திருக்க முடியும்?

படித்து முடித்து வேலையும் கிடைத்தது. அப்பா விடாமல் தொடர்ந்து திரும்பி வரும்படிக் கடிதம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் மன்றாடியும் நான் பதில் எழுதாமல் இருக்கக் காரணம் ரோஸியைக் காதலித்ததுதான். தெரிந்ததும் அவர் கொதித்துப் போனார். அவர் கோபத்தினால் என் பிடிவாதமும் அதிகரித்தது. நாளடைவில் ரோஸியை மணந்து கொண்டு விட்டேன் என்று தெரிந்ததும் நாங்களும் அவர்களும் வேறு, வேறாகி விட்டோம். அவர் தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்றும், நான் அவர்களைப் பார்ப்பதே இல்லை என்றும் சபதம் செய்து கொண்டுவிட்டோம். இதுநாள் வரை அவர்கள் உயிருடன் இருப்பது தெரியுமே தவிர, அவர்களைப்பற்றி எதுவுமே தெரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை.

சென்னையை அடைந்த உடனேயே ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு கிராமத்தை நோக்கிப் போனேன். எப்படி இருப்பார்களோ, என்னை எப்படி வரவேற்பார்களோ, ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ எனப் பல கேள்விகள் மனதில்.

நான் ஏன் இப்போது திடீரென அவர்களைப் பார்க்க வந்தேன் என நினைத்துப் பார்க்கும்போது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. என் பிள்ளைகள் தங்களுடைய சிநேகிதர்களுக்கெல்லாம் தாத்தா, பாட்டி இருப்பதாகவும் தங்களுக்கும் வேண்டுமென்றும் உடனே இந்தியா சென்று அவர்களை அழைத்து வரும்படி நச்சரித்ததினாலேயே நான் கிராமத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன்.

கிராமத்து வீடு அடையாளம் தெரியாமல் முன்பக்கம் முழுக்க இடிந்திருந்தது. வீட்டுக் கதவில் பூட்டுத் தொங்கியிருந்ததைப் பார்த்ததும் அழுகை பீறிட்டது. எங்கே போயிருப்பார்கள்?

சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் அவர்கள் அடைக்கலமாகி இருப்பதாகப் பக்கத்து வீட்டுத் தாத்தா சொன்னதும் மனம் பதைபதைத்தது. அவரிடம் விலாசம் வாங்கிக்கொண்டு வந்து அவர்களைக் கண்டுபிடித்தேன்.

என்னைப் பார்த்தவுடன் அவர்களுக்கு ஒரே திகைப்பு. என்னுடன் பேச விரும்பவில்லை என்று சொல்லி விட்டார்கள். தளர்ந்து போயிருந்த அவர்களது கால்களில் விழுந்து அழுது தீர்த்தேன்.

சற்று மனம் இரங்கிப் பேச ஆரம்பித்தார்கள். என் குடும்பத்தைப் பற்றியெல்லாம் விசாரித்தார்கள். எனக்கு ராபர்ட், ராஜா என்று இரு பிள்ளைகள் இருப்பதையும் அவர்கள் தங்கள் தாத்தா, பாட்டியைப் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதையும் சொன்னேன். பின்னர் மெதுவாக அவர்கள் என்னுடன் அமெரிக்கா வந்துவிட வேண்டுமென்று ஆரம்பித்தேன்.

வந்ததே கோபம் அப்பாவுக்கு.

"போ... தாத்தா, பாட்டி செத்துப்போய் ரொம்ப நாளாகி விட்டது என்று போய்ச் சொல், போ" என்றார் கண்கள் சிவக்க.

தினமும் ஃபோன் செய்து எப்ப தாத்தா, பாட்டி வருவார்கள் என்று ஏக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கும், பிடிவாதமாக என்னுடன் வர மறுக்கும் பெற்றோர்களுக்கும் நடுவில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தேன்.

திடீரென ஒரு ஐடியா தோன்றியது. பேரப் பிள்ளைகளையே அவர்களுடன் பேச வைத்தால்...? பேச வைத்தேன். அவர்களும், "ஹை க்ராம்ப்பா, க்ராம்மா, வீ வாண்ட் டூ ஸீ யூ... வீ லவ் யூ... வீ வாண்ட் யூ டு கம் ஹியர் அண்ட் பீ வித் அஸ் ஆல்வேஸ். ப்ளீஸ் கம். மம்மி ஆல்ஸோ வாண்ட்ஸ் யூ டு கம் ஹியர். ப்ளீஸ்.. ப்ளீஸ்... கம் ஹியர் வித் டாடி" என்று பிள்ளைகள் இருவரும் மாறி, மாறிப் பேசினார்கள்.

சின்னப் பையன் ராஜாவுக்குக் கொஞ்சம் தமிழ் கற்றுக் கொடுத்திருந்தேன். அவன் நான் சொல்லிக் கொடுத்திருந்த தமிழில் தட்டுத் தடுமாறி "எங்களுக்குத் தாத்தா பாட்டி வேணும், வாங்க" என்று சொன்னதும் என் அம்மா கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர். அப்பாவின் முகத்திலும் மகிழ்ச்சி.

அப்போதுதான் சரித்திரம் மாறியது!

மாலதி கணேசன்,
ரெட்வுட் சிடி, கலிஃபோர்னியா

© TamilOnline.com