தெளிவு
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி "என்ன வாசனை மூக்கை துளைக்கறது. உன் அம்மா வறதுக்கு ஒரே விசேஷ சமையலா இன்னிக்கு?" என்றபடி.

"ஆமாம் எங்கம்மாவுக்குப் பொங்கல் ரொம்பப் பிடிக்கும்" ஸ்வாதியின் முகத்தில் அலாதியான சந்தோஷம்.

ஸ்வாதி, ஹரி திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. முதன்முறையாக ஸ்வாதியின் இல்லத்திற்கு வருகிறாள் அவள் அம்மா. ஸ்வாதி ஒரு குழந்தை மருத்துவர். கணவர் ஒரு கணிப்பொறி எஞ்சினியர். திருமணமான பின் இருவரும் மகிழ்ச்சியாகத் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். ஹரியின் பெற்றோர் அடுத்த தெருவிலேயே இருந்தாலும் இவர்களைத் தனிக்குடித்தனம் வைத்து முழுச் சுதந்திரம் அளித்தார்கள். ஸ்வாதியும் அருமையான பெண். ஹரியின் அன்பைப் புரிந்து கொண்டு அழகாகக் குடும்பம் நடத்தினாள். மாமனார் மாமியாரை மரியாதையாக நடத்தினாள். எல்லாமே அழகாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்போதுதான் ஸ்வாதியின் அம்மா வந்தாள்.

அவசரமாக ஓடினாள் ஸ்வாதி. "பார்த்து ஸ்வாதி விழுந்துடாதே" என்று கேலி செய்தான் ஹரி. "வாம்மா வா எப்படியிருக்கே?" என்று வரவேற்றாள் ஸ்வாதி.

"வாங்க அத்தை எப்படி இருக்கீங்க?" இது ஹரி. "என்ன ஸ்வாதி இப்படி இளைச்சு, கறுத்து போய்ட்டே? மாப்பிள்ளை உன்ன ஒழுங்கா வெச்சிருக்காரா இல்லையா?" என்று உள்ளே வரும்பொழுதே சுருக்கென்று கேள்வி கேட்டபடி வந்தாள் ஸ்வாதியின் அம்மா பாமா. சிரித்தபடி வரவேற்ற ஹரியின் முகம் சுருங்கியது. ஸ்வாதி நிலைமையைச் சமாளிக்கும் விதமாக, "அப்பா எப்படி இருக்காங்க? நீ வீடு ஷிஃப்ட் பண்ணி, எல்லாம் செட்டில் பண்ணிட்டியா?" அவசரமாக கேள்வி கேட்டாள்.

"ஆமாம் நல்லா ஆச்சு. புது வீடு எல்லாம் நல்லா இருக்கு. கல்யாணம் ஆனவுடனே சரியான வேலை, உடனே வீடு ஷிஃப்டிங் அப்படி இப்படின்னு ஆறு மாசமா வேலை கழுத்தப் பிடிச்சிருச்சு. உங்கப்பா இருக்காரே எப்பப் பாரு ஆபீஸ், ஆபீஸ்னு அதக் கட்டிகிட்டே உயிரை விடராரு. எல்லாம் என் தலையெழுத்து. இப்பக்கூட பாரு, ஆறு மாசமாச்சு உன்ன பார்த்து. பார்க்கப் போலாம் வாங்கன்னு சொன்னா, ஆபீஸ் வேலை அது இதுன்னு சொல்லிட்டு வரல" என்று தன் புலம்பலை ஆரம்பித்தாள் பாமா.

ஹரியைப் பார்த்து எப்படி இருக்கறீர்கள் என்றுகூடக் கேட்காத அம்மாவின் புலம்பல் கண்டு ஸ்வாதி சுணங்கிய பொழுதும் அதைக் காட்டாமல் சிரித்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள். பொங்கல் உண்ணும்பொழுது பாமா ஓயாமல் ஏதோ புலம்பியபடி இருந்தாள். சிறிது நேரம் கழித்து ஸ்வாதி, "பொங்கல் நல்லா இருக்காம்மா?" என்று கேட்டாள்.

"ஆமாம் பரவாயில்லை. உங்க வேலைக்காரி நல்லா சமைக்கறா" என்றாள்.

"வேலைக்காரி சமைக்கலம்மா. நான்தான் பொங்கல் பண்ணினேன். ரெண்டுபேருக்கு எதுக்கம்மா வேலைக்காரி? வேலையே ஒண்ணும் இல்ல. நான்தான் செய்யறேன்" என்று பெருமையாக ஸ்வாதி சொல்ல, அதிர்ச்சியுடன் பார்த்த பாமா பதில் சொல்லாமல் உண்டாள்.

ஹரி ஆஃபீஸ் சென்றபின், ஸ்வாதி மதிய உணவு செய்யத் தொடங்க, "எப்படி இருக்கே ஸ்வாதி, ரொம்ப இளைச்சுட்டியே" என்றாள்.

"நல்லா இருக்கேன் அம்மா. ரொம்ப ஜாலியா இருக்கேன். பாரு நான் இப்பல்லாம் சூப்பரா சமைக்கறேன். ஹரி வீட்டிலே எல்லோரும் ரொம்ப நல்லவங்க. அத்தை எனக்கு நிறைய சமைக்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள்.

"அடி போடி அசடே. உன்னச் சமையல்காரி ஆக்கிட்டாங்க!"

"என்னம்மா சொல்ற? எங்க வீட்டு வேலை, சமையலைத் தானே நான் செய்யறேன். அதில என்ன தப்பு?"

"உன்ன நல்லா மாத்திட்டாங்க ஸ்வாதி. வீட்டு வேலையும், சமையலும் வேலைக்காரிதான் செய்யணும். உன்ன டாக்டருக்குப் படிக்க வெச்சது கரண்டி பிடிக்கவா? கடைசில ஒரு வீட்டு வேலைக்காரி போல ஆயிட்டியே."

"என்னமா சொல்ற நீ? நம்ம வீட்டு வேலை எல்லாம் நீதானே செய்வே? அப்ப நீ என்ன வேலைக்காரியா?"

"ஆமாம் உங்கப்பா என்ன அப்படிதான் நடத்தினார். எப்பப் பாரு வீட்டு வேலைன்னு செஞ்சு ஓஞ்சு போய்ட்டேன். நீயாவது ஜாலியா இருக்கணும்னுதான் டாக்டருக்கு படிக்க வெச்சேன்," அம்மாவின் பேச்சு ஸ்வாதியைக் குழப்பியது. அதுவரை நல்லவர்களாகத் தெரிந்த கணவனும், அவன் குடும்பத்தினரும் விரோதிகளாகத் தெரிந்தனர்.

*****


பாமா வந்து ஒருவாரம் ஓடிவிட்டது. ஸ்வாதி அகந்தையுடன் நடக்க ஹரியும் அவனது குடும்பத்தினரும் மனதால் நொந்து அவளிடம் இருந்து விலகத் தொடங்கினர். இதையெல்லாம் ஸ்வாதி உணர்ந்தாலும் தன் தாய் தனக்கு ஏன் கெடுதல் செய்யப் போகிறாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் திமிராக நடந்து கொண்டாள்.

ஒருவாரம் கழித்து மருத்துவமனைக்கு வேலைக்குப் போகத் தொடங்கினாள். அன்று முதல் நோயாளியாக ஒரு எட்டு வயதுப் பெண் வயிற்றுப்போக்கு என்று வந்திருந்தாள். "என்னம்மா, அம்மாக்கு தெரியாம எதுவும் திருட்டுத்தனமா சாப்பிட்டியா?" கேட்டாள் ஸ்வாதி.

"இல்ல டாக்டர்"
"அப்ப ஏன் திடீர்னு அஜீர்ணம் ஆயிடுத்து?" என்று கேட்டபடி அவளைச் சோதித்தாள் ஸ்வாதி.

அந்தப் பெண்ணைக் கூட்டி வந்திருந்த அவளது தாத்தா கூறினார், "ஃப்ரிட்ஜ்லேந்து ஏதோ பழச சாப்பிட்டா போல இருக்கு"

"இல்ல தாத்தா, அம்மாகிட்ட கேட்டுட்டுதான் சாப்பிட்டேன்"

"என்ன கேட்ட நீ? அம்மா அவசரமா ஆஃபீஸ் கிளம்பற முன்னாடி கேட்டிருக்கா இவ. அவங்கம்மா ஏதோ அவசரத்தில் சரியாப் பாக்காம சாப்பிடுன்னு சொல்லி இருக்காங்க. அது பார்த்தா வீணா போனது. வயத்தக் கெடுத்துருச்சு"

"ஏம்மா பார்த்து சாப்பிடக்கூடாது எவ்வளவு பெரிய பொண்ணு நீ. கெட்டுப்போனது தெரியலையா?" என்று கேட்டாள் ஸ்வாதி.

"தெரிஞ்சுது டாக்டர். அம்மா எனக்குக் கெடுதல் தர மாட்டாங்கன்னு நினைச்சு சாப்பிட்டேன்" என்று ரொம்பச் சமத்தாக அந்த பெண் கூற, அவளது தாத்தா "அட சுட்டி! அம்மாவும் மனுஷிதானே. மனுஷனா பொறந்தா தவறு செய்யறது சகஜம். அம்மா செய்யறது எல்லாமே நல்லதா இருக்கணும்னு அவசியம் இல்ல. யாரு சொன்னாலும் அது நல்லதா கெட்டதான்னு யோசிக்கற புத்தி உனக்கு இருக்கணும். சொல்புத்தியை விட சுயபுத்திதான் மேல். உங்கம்மா சொன்னத அப்படியே எடுத்துக்காம நீ யோசிச்சா உனக்குத்தான் நல்லது. உங்கம்மாவுக்கும் பெருமை" என்றார்.

அந்த குழந்தையின் மருந்தை எழுதிக்கொண்டு இருந்த ஸ்வாதிக்குச் சுரீர் என்றது. மாலை வீடு திரும்பும் பொழுது அம்மா ஏதோ சமைத்துக்கொண்டு இருந்தாள். "நகரும்மா நான் சமைக்கிறேன்" என்றாள். "நீ போய் டி.வி. பாரு ஸ்வாதி. ரெஸ்ட் எடு" என்றாள் பாமா.

"எனக்கு ஒண்ணும் களைப்பா இல்ல. நான் செய்யறேன் போ" என்றாள் ஸ்வாதி.

"எத்தன தடவை சொல்றது உன் டாக்டர் கைல கரண்டி பிடிக்காதே நீ புதுமைப் பெண்ணுன்னு" என்று சிரித்தாள் பாமா. "பாரதியோட புதுமைப் பெண் பணிவா இருக்கணும். பாசமா இருக்கணும். பகைமைக்குத்தான் போராடணும். ஆனால் பண்பைத் தொலைக்கக் கூடாது. நீ சொன்னியேன்னு உன் பேச்சைக் கேட்டு நான் மாறினேன் பாரு, என்ன சொல்லணும்! என் வீட்டு வேலைகளை நான் செய்யறது கேவலம் இல்ல, பெருமை. என் கணவனுக்கு நான் சமைக்கறது அடிமைத்தனம் இல்ல, பாசம். உன்னால நான் அவங்க மனச எல்லாம் கஷ்டப்படுத்திட்டேன் இனிமே எனக்கு தயவு செய்து அட்வைஸ் தராதே" என்று தெளிந்த மனதுடன் கூறினாள் ஸ்வாதி.

*****


லக்ஷ்மி சுப்ரமணியன்,
மின்னசோட்டா

© TamilOnline.com