மிருதங்க சக்கரவர்த்தி மதுரை J.ஸ்ரீனிவாசன்
'சீனாக்குட்டி மாமா' என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகிற மதுரை T.ஸ்ரீனிவாசன் அவர்களைக் கர்நாடக சங்கீத உலகிலோ, தமிழ்த் திரையிசை உலகிலோ தெரியாமல் இருக்க முடியாது. மிருதங்கத்தில் இவருடைய விரல்கள் விளையாடும் லாகவம் அசாத்தியமானது. கடந்த 40 வருடங்களில் இவரது வாசிப்புடன் பாடாத இசைப் பிரபலங்கள் இல்லை யென்றே கூறலாம். பல தென்னிந்தியத் திரைப்படங்களின் பின்னணியில் இவரது மிருதங்கம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

மதுரை திருவேங்கடம் ஐயங்காருக்கும் அலர்மேலு அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீனிவாசன்.

தந்தையின் நண்பர் மதுரை பாலகிருஷ்ண ஐயங்கார் இவரது வீட்டு வாசலில் அமர்ந்து உலக விஷயங்களை நண்பர்களோடு பேசுவது வழக்கம். அவரது தலையில் சிறுவன் ஸ்ரீனிவாசன் தாளம் வாசிப்பது போல் தட்டிக் கொண்டிருப்பார். இதைக் கவனித்த பாலகிருஷ்ண ஐயங்கார், இவரை இசைப் பள்ளியில் சேர்க்கச் சிபாரிசு செய்தார்.

குருகுலத்தில் இசைப்பயிற்சி

முதலில் சோழவந்தான் சேஷய்யங்கார் அவர்களின் குருகுல இசைப்பள்ளியில் பயிற்சி தொடங்கினார். நான்கு வயதில் குருகுலத்தில் சேர்ந்த சீனிவாசன் பதினோரு வயதுவரை அங்கேயே மிருதங்கம், வாய்ப்பாட்டு இரண்டிலும் தேர்ச்சி பெற்றார்.

அந்நாளில் குருகுலத்தில் படித்தாலும் காலையில் பள்ளிக்கூடத்திற்குச் சென்று விட்டு, மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இசை கற்றுக்கொள்வது வழக்கம். திரைப்படங்களில் பிரபலமாக விளங்கிய டி.ஆர்.மகாலிங்கம் அவர்களும் சேஷய்யங் காரின் சிஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சகோதரர்களான T.வெங்கடேசன், T.சேதுராமன் ஆகியோரும் இசையில் ஆர்வமும் பயிற்சியும் பெற்றவர்கள்தாம்.

தனது 11-வது வயதில் மூத்த சகோதரர் வெங்கடேசனின் கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்ததே இவரது அரங்கேற்றமாக அமைந்தது. பதினான்காவது வயதில் சென்னைக்கு வந்தார். திருவல்லிக் கேணியில் பார்த்தசாரதி கோவில் எதிரில் உள்ள வானமாமலை மடத்தில் சென்னை வாழ்க்கை ஆரம்பமானது.

திரையுலகில் பிரவேசம்

அங்குதான் பிரபல சினிமா பாடலாசிரியர் வைத்தியநாதன் அவர்களின் சிநேகம் கிடைத்தது. அவரது மகள் அலர்மேலு அக்கா பாட, இவர் மிருதங்கம் வாசித்தார். 1952-ம் ஆண்டு சிவாஜிகணேசன், பத்மினி போன்ற பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த 'எதிர்பாராதது' என்ற திரைப்படத்தில் இவர் முதன்முதலாகப் பின்னணி இசைத்தார். இசையமைப்பாளர் பாண்டுரங்கன்.

பின்னணிப் பாடகி பி.லீலாவின் தந்தை E.K.K.மேனன் அவர்களின் நட்பும் கிடைக்கவே இவர் சினிமா உலகத்தில் காலூன்றினார்.

ஹிந்தி திரையுலகின் முன்னணி நடன இயக்குநர் ஹீரலால் அவர்களுடனான தனது தொடர்பை ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறுகையில், ''நடனஇயக்குநர் ஹீரலால் 'நீல்கமல்' என்ற படத்தின் பாட்டு ஒன்றுக்கு எங்களை அழைத்திருந்தார். நான், கே. நாகராஜாராவ், திரவியம் என்று பலர் இங்கிருந்து பம்பாய் சென்றோம். பெரிய அரங்கில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நடனமும், பாட்டும் சரியாக அமையவில்லை. மறுபடி மறுபடி நடனம் தொடர்ந்தது. எங்கோ இடிக்கிறதே என்று ஹீரலால் ரொம்ப டென்ஷனாகிவிட்டார். அந்த இடத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட நோட்ஸில் சிறு தவறு இருந்ததை நான் சரிசெய்தேன். உடனே ஹீராலால், 'South Indians are kings of Laya' என்றார். இதை என்னால் மறக்கமுடியாது'' என்று நினைவுகூர்கிறார்.

இதேபோல் அனுமாலிக் அவர்களின் படத்திலும் பக்கவாத்தியம் அமைத்து இருக்கிறார் ஸ்ரீனிவாசன் அவர்கள்.

வெளிநாடுகளில் கச்சேரி செய்த அனுபவமும் இவருக்கு உண்டு. ''நான் சங்கீதவல்லி T.V.ரத்தினம் அவர்களுடன் நிறையக் கச்சேரிகள் செய்துள்ளேன். குறிப்பாக மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இலங்கை" என்று அடுக்குகிறார்.

சென்னை வானொலியில் நிலைய கலைஞராகப் பணியாற்றினார். ''1974-ல் ஐதராபாத்தில் நேர்காணல் நடைபெற்றது. இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும் எட்டுப் பேர் வந்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து நானும் மன்னார்குடி ஈஸ்வரனும் கலந்துக் கொண்டோம். 1975 ஜனவரி மாதம் ஹைதராபாத் நிலையத்தில் சேர்ந்தேன். பிறகு 1976 செப்டம்பர் மாதத்தில் சென்னைக்கு மாற்றல் ஆகி வந்து சேர்ந்தேன்'' என்று ஸ்ரீனிவாசன் நினைவுகூர்கிறார்.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் வானொலியில் பணியாற்றிய போதே மாலை நேரங்களில் கச்சேரிகளில் பக்கவாத்தியம் வாசித் துள்ளார். பல பட்டங்களும், பரிசுகளும் பெற்றுள்ளார்.

"அது வேறு ஸ்ரீனிவாசன்"!

சிவாஜிகணேசன் நடித்த 'மிருதங்க சக்ரவர்த்தி' என்ற திரைப்படத்தில் இவர் நடிகர் பிரபுவுக்காகப் பின்னணி வாசித் துள்ளார். அரசாங்க ஊழியர்கள் வேறெதிலும் அனுமதியின்றிப் பங்கேற்கக் கூடாது என்ற விதியையும் மீறி இவரது பெயர் படத்தின் டைட்டிலில் தோன்றியது.

படம் வெளிவந்து சில நாட்களில் இவர் அலுவலகத்திற்கு வந்தபோது இவருடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இவரிடம் ''உங்களை நிலைய இயக்குனர் அழைக்கிறார்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ரொம்பவும் பதட்டத்துடன் அவரைச் சந்திக்கச் சென்றார். "வாங்க ஸ்ரீனிவாசன். படம் பார்த்தேன், பிய்ச்சுப்புட்டீங்க போங்க. டைட்டில்ல உங்க பேர்கூடப் போட்டுருக்கு. என்ன, மதுரை ஸ்ரீனிவாசன்னுதான் போட்டிருக்கு. T. ஸ்ரீனிவாசன்னு போடலை. யாராவது கேட்டா நான் 'அந்த ஸ்ரீனிவாசன் வேற, இந்த ஸ்ரீனிவாசன் வேற'ன்னு சொல்றேன்'' என்று கூறியதும் தான் பட்ட சந்தோஷத்தைச் சொல்லி மாளாது என்கிறார் ஸ்ரீனிவாசன்.

தனக்கு மிகவும் திருப்தியாக அமைந்த கச்சேரிகளைப் பற்றிக் கூறுகையில் ''T.V.ரத்தினம் அவர்களின் கச்சேரிகளுக்கு நான் மிருதங்கம் வாசித்ததுதான் எனக்குத் திருப்தியளித்தது. அவருடைய எல்லாக் கச்சேரிகளுக்கும் நான்தான் மிருதங்கம் வாசிப்பேன். அவருடன் கச்சேரிக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகத்திற்கு அளவே இல்லை. அவரை 'பொம்பளை கிட்டப்பா' என்றே கூறுவார்கள்'' என்று மிகவும் புளகாங்கிதத்துடன் கூறினார் ஸ்ரீனிவாசன்.

லட்சிய, லட்சண மேதை இளையராஜா

தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் வருகை இவரைப்போன்ற பல பக்கவாத்திய கலைஞர்களுக்குப் பொற்காலம் என்றே கூறவேண்டும். இளையராஜா இசையமைத்த பல திரைப்படங்களுக்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளார். ''இளையராஜா ஒரு லட்சிய, லட்சண இசைமேதை. தமிழ்த் திரைப் படத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம். யோகமும் யோக்கியதையும் சேர்ந்தவர்'' என்று அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகிறார்.

கிட்டத்தட்ட எல்லா இசையமைப் பாளர்களிடமும் பணியாற்றியுள்ளதாகக் கூறும் இவர் இளையராஜா எல்லா வகையான பாடல்களிலும் பின்னணியில் மிருதங்கத்தைச் சேர்த்துக் கொண்டார் என்று குறிப்பிடுகிறார்.

1973-ல் இவருக்கு கோலாலம்பூரில் 'மொழிகலையரசு', 1979-ல் மதுரையில் 'லயச்சுடர் ஒளி', 1992-ல் சென்னையில் 'நாதக்கனல்' ஆகிய பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. லயத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். சங்கீத விமர்சகர் சுப்புடு அவர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை 1990-ல் ஏ.வி.எம். ஸ்டியோவில் ஒளிப்பதிவு செய்தார். அதற்கு மிருதங்கம் வாசித்ததை நினைவுகூர்கிறார்.

கர்நாடக சங்கீதத்தில் இளைய தலை முறையினர் அதிக அளவில் ஈடுபாடு கொண்டுள்ளது ஆரோக்கியமான விஷயம் என்கிறார்.

தொடரும் இசைப் பரம்பரை

''என்னுடைய இரண்டாவது மகன் S.சேஷாத்திரி சென்னை அடையாறில் உள்ள இசைக்கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர் மிருதங்கத்தில் தேர்ச்சி பெற்றவர். என் மூத்த மகன் M.S. கண்ணனும் பிடில் வாசிப்பில் தேர்ச்சி பெற்றவர். என் மூத்த பெண் வயிற்றுப் பேரன் சுந்தரமும் மிருதங்க வாசிப்பான்' என்று தன்னுடைய வாரிசுகளைப் பற்றிக் கூறினார்.

இன்றைய தலைமுறையினருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ''நிறையப் பாடல்கள் கேட்கவேண்டும். பெரிய வித்வான்களின் கச்சேரிகளை தேடித்தேடிச் சென்று கேட்கவேண்டும். எதற்கும் பொறுமை வேண்டும். பணிவு வேண்டும். அப்போதுதான் நம்மால் சாதிக்க முடியும்'' என்கிறார். இத்தனை விதமான சிறப்புகளும் கொண்ட மதுரை ஸ்ரீனிவாசன் இதுவரை கலைமாமணி பட்டம் பெறவில்லை. அதைப்பற்றிக் கவலைப்படாமல் தன் பணியைத் தொடர்கிறார் இவர்.

சந்திப்பு: கேடிஸ்ரீ

தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com