ம.ரா. ஜம்புநாதன்
"ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயச்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து, இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து, பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்......... இந்நாடு, பூலோகமுழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்" இப்படிக் குறிப்பிட்டு தமது நூலை அர்ப்பணித்தவர், மா.ரா. ஜம்புநாதன். அப்படி அவர் அர்ப்பணித்த நூல் 'சதபதப் பிராமணம்' என்னும் யஜுர்வேதத்தைச் சாரமாகக் கொண்ட நூல்.

மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் எனப்படும் ம.ரா. ஜம்புநாதன் திருச்சியை அடுத்த மணக்காலில் ஆகஸ்ட் 23, 1896 அன்று, ராமசாமி ஐயர்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சிறந்த வேத விற்பன்னர். 'அவதானம்' என்னும் நினைவாற்றல் கலையில் வல்லவர். ஜம்புநாதனும் ஒருமுறை கேட்டாலே நினைவில் வைத்துக் கொள்ளும் 'ஏக சந்தக் கிராஹி' ஆக இருந்தார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்ற நான்கு மொழிகளிலும் புலமை பெற்றார். வேதங்களைச் சிறுவயது முதலே ஆர்வத்துடனும் ஆழ்ந்தும் கற்றார். உயர்நிலைக் கல்வி முடித்த பின் சென்னையில் சிவில் எஞ்சினியரிங் பயின்றார். ஒடுக்கப்பட்டவர்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருந்த இவர், கல்லூரியில் படிக்கும்போதே அவர்கள் நலனை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட Depressed Classes Mission எனும் அமைப்பின் பொறுப்பாளராக 1918-20 வரை பணியாற்றினார். பின்னர் மும்பைக்குச் சென்றார். அங்கும் அதே பணியைத் தொடர்ந்தார்.

மும்பை, அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. ஆரிய சமாஜத்தில் ஆர்வம் பிறந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டார் ஜம்புநாதன். சாதிகளற்ற சமுதாயம் காண்பது ஜம்புநாதனது நோக்கமாக இருந்தது. 'இறைவன் படைப்பில் எல்லோரும் சமம். உயர்வு தாழ்வு இல்லை. அனைவரும் அனைத்தையும் கற்க உரிமை உள்ளவர்களே' போன்ற எண்ணங்கள் வலுத்தன. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் சிவில் எஞ்சினியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகவும், அவர்களது பிரச்சனைகளை நேரடியாக அறியவும் முடிந்தது. குறிப்பாக, மும்பையின் சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு ஜம்புநாதன் மிகவும் மனம் வருந்தினார். அவர்களுக்காக ஒரு துவக்கப் பள்ளியை ஏற்படுத்தினார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் 1924ல் அமைக்கப்பட்ட அந்தப் பள்ளிதான், தமிழர்களுக்கென்று மும்பையில் ஏற்பட்ட முதல் தமிழ்ப் பள்ளி. அதனடிப்படையாகக் கொண்டு கார்ப்பரேஷன் உதவியுடன் பிற்காலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் தோன்றின. அவற்றில் பல தற்போது நடுநிலைப் பள்ளிகளாகவும், உயர், மேல்நிலைப் பள்ளிகளாகவும் விளங்குகின்றன.

Click Here Enlargeசமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கிய ஜம்புநாதன் இதழியல், இலக்கிய, பதிப்புப் பணிகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஜம்புநாதன் 'புஸ்தகசாலை' என்ற ஓரு நிறுவனத்தை இதற்காகவே சென்னையில் துவக்கினார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் எனப் பல மொழிகளிலும் அவர் கொண்டிருந்த மேதைமை நூல் உருவாக்கத்தில் அவருக்குக் கைகொடுத்தது. அவர் எழுதிய முதல் நூல் 'சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாறு' என்பதாகும். 1918ல் அது வெளியானது. தொடர்ந்து 'வேத சந்திரிகை', 'சீன வேதம்', 'த்ரிமூர்த்தி உண்மை', 'தமிழ் சத்தியார்த்தப் பிரகாசம்', 'மாஜினியும் மனிதர் கடமைகளும்', 'யோக ஆசனங்கள்', 'கதா ரதம்', 'யோக உடல்', 'ஸ்வாமி ஸ்ரத்தானந்தர்' போன்ற நூல்களை வெளியிட்டார். 'சத்யார்த்த பிரகாசம்' சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிந்தனைகளைக் கூறும் நூல். 'வேத சந்திரிகை' வேதங்கள் பற்றிய விளக்கவுரைகளைக் கொண்ட நூலாகும்.

ஜம்புநாதன் செய்த பணியில் மகத்தானது, வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதாகும். வேதம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அவை எல்லோருக்கும், குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர் என்ற பெயரில் உயர்குடி மக்களால் ஒதுக்கப்பட்டோருக்கும் போய்ச் சேரவேண்டும் என அவர் விரும்பினார். தீவிர வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டார். முதலில் சாம வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து 1935ல் வெளியிட்டார். தொடர்ந்து சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் ஆகியன 1938ல் வெளியாகின. அதர்வ வேதத்தை 1940ல் தமிழில் வெளியிட்டார். அந்நூலில், "வேதங்கள் பாரதத்தின் சொத்து. எல்லா மொழிகளிலும் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவை குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. ஒவ்வொரும் அதைப் படித்து அதன் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். தம் மொழிபெயர்ப்பு பற்றி ஜம்புநாதன், "ஆரியமும் திராவிடமும் பல வருடங்கள் இணைந்திருந்த போதிலும் வேதம் தென்மொழியில் வராதது ஒரு பெருங்குறையாகவே இருந்தது. இக்குறையை பெருஞ்சந்தர்ப்பமாகக் கருதி பல அறிஞர்கள் இதுதான் வேத ஆக்ஞை என தங்கள் மனம் போனபடி சொல்லி சமூகச் செழிப்பழிக்கும் பல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.... இப்பொழுது வேதம் தென்மொழியில் வந்து விட்டபடியால் இக்கஷ்டம் நீங்கும்" என்று குறிப்பிட்டார். மேலும், தான் மொழிபெயர்த்த விதம் பற்றி, "இத்தமிழ் வேதத்தைச் செய்வதில் ஒவ்வொரு வடமொழி பதத்துக்கும் தமிழ் உரையையெழுதி பரீட்சையில் விடை எழுதும் மாணவன் அநுவாதம்போல் செய்ய வேண்டுமென்னும் எண்ணத்துடன் இதைச் செய்யவில்லை. ஒரு மந்திரத்தைப் பூரணமாய்ப் படித்து அதனால் தோன்றும் உணர்வையே முதன்மையாய்க் கருதி, அதைப் புலனாக்குவதில் நமது முழு கவனத்தையுஞ் செலுத்தி அப்பால் கூடியவரை வடமொழி பதங்களை அனுசரித்துள்ளோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்வேத நூல்கள் தமிழில் வெளி வருவதற்கு உதவிகரமாக இருந்த தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காசி மடாதிபதி ஆகியோருக்கும் நூலின் முன்னுரையில் நன்றி தெரிவித்துள்ளார்.

'சம்ஸ்கிருத வேதங்களைத் தமிழில் பெயர்ப்பதா எனப் பாரம்பரியப் பண்டிதர் சிலரிடமிருந்து எதிர்ப்பும், தடையும் எழுந்த போதும் அதனை எதிர்கொண்டு, புறந்தள்ளி இம்மொழிபெயர்ப்புகளை ஆக்கி அளித்தார் ஜம்புநாதன். தமிழில் மட்டுமல்ல; ஒவ்வொரு மொழியிலும் வேதங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும், அதனை ஒவ்வொரு இந்தியனும் படித்துப் பயனுற வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. உபநிஷதக் கதைகளையும், கடோபநிஷத்தையும் தமிழில் தந்திருக்கிறார். தமிழில் மொத்தம் 16 நூல்களையும் ஆங்கிலத்தில் 3 நூல்களையும் எழுதியிருக்கிறார் ஜம்புநாதன். இவரது முயற்சியை சர். சி.பி. ராமசாமி ஐயர், "இது ஒரு மகத்தான பணி; இதைச் செய்திருக்கும் ஜம்புநாதன் பாரட்டப்பட வேண்டியவர்" என்று குறிப்பிட்டிருக்கிறார். டாக்டர் ராதா முகர்ஜி, டாக்டர் சுனில் குமார் சட்டர்ஜி, மொரார்ஜி தேசாய், பி.டி. ஜாட்டி என பலர் ஜம்புநாதனின் பணியைப் பாராட்டியுள்ளனர். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி சண்டே ஸ்டாண்டர்ட், தி இல்லஸ்ட்ரேடட் வீகிலி, லோகோபகாரி என பல இதழ்கள் ஜம்புநாதனின் மொழிபெயர்ப்பு முயற்சியைப் பாராட்டியுள்ளன.

"மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் மூலத்தைச் சிதைக்காது, எந்தக் கருத்தையும் தம் விருப்பம்போல் சேர்க்காது, கூட்டாது, குறைக்காது வேதம் கூறுவதை அப்படியே தந்திருக்கின்றார்'' என்று ஜம்புநாதனின் மொழிபெயர்ப்பு நூலை மதிப்பிடுகிறார் வேத விற்பன்னரான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். "ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தனியொருவராகச் செய்து சாதனை புரிந்துள்ளார் ஜம்புநாதன் என்பது உளந்திறந்து பாராட்டுதற்குரியது. அவர் முதன் முயற்சியைத் தொடர்ந்து, வேறு எந்த வேதநெறி பரப்பும் நிறுவனமோ, தனிநபரோ வேத மொழிபெயர்ப்புக்குத் துணியவில்லை என்பதும் ஜம்புநாதனின் அரிய பணிக்குச் சான்று" என்கிறார், ஆய்வாளர், எழுத்தாளர், விமர்சக அறிஞர் பெ.சு.மணி.

உம்பர் அன்றி வேறெவரும்
உண்ணற் கரிய வண்ணமுதை
இம்பர் மக்கள் யாவருமே
இனிதருந்தச் செய்வது போல்
நம்பும் அரிய வேதங்கள்
நல்ல தமிழில் நமக்குதவும்
ஜம்புநாதப் பேரறிஞன்
தரணி மீது வாழ்கவே!

என்று ஜம்புநாதனின் அரிய பணியைப் புகழ்ந்துரைக்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

International PEN (Poets, Essayists and Novelists) எனப்படும் படைப்பாளிகளுக்கான அமைப்பின் இந்தியப் பிரிவில் உறுப்பினர், செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்திருக்கிறார் ஜம்புநாதன். சிதம்பரத்தில் நடந்த அகில இந்திய மாநாட்டிற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார். ஜப்பானில் நடந்த PEN மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலக சம்ஸ்கிருத அகாதமி போன்ற அமைப்புகளில் உறுப்பினராகப் பதவி வகித்ததுடன், நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்றும் நடத்தியிருக்கிறார். சமூகம், மொழிபெயர்ப்பு, வேதக் கல்வி என ஜம்புநாதனின் ஆர்வங்கள் பரந்துபட்டு இருந்தன. பள்ளியில் படிக்கும்போதே நாணயச் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். ஊர் ஊராகச் சென்று ஆலயங்களை, கல்வெட்டுக்களைப் பார்வையிடுவதும், வரலாறு அறிவதும், அவை தொடர்பான நாணயங்கள் சேகரிப்பதும் அவரது வழக்கமாக இருந்தது. சோழ, பல்லவ, விஜயநகரப் பேரரசுகள், பிரெஞ்ச், பிரிட்டிஷ் நாணயங்கள் எனப் பலதரப்பட்டவை அவரது சேகரத்தில் இருந்தன. இவை தவிர ஔரங்கசீப்பின் நாணயங்கள், மைசூர் உடையார்கள், சுல்தான்கள், புதுக்கோட்டை சமஸ்தான நாணயங்கள், ஹைதராபாத் நிஜாம் நாணயங்கள் என 138 அரிய நாணயங்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். அவை பின்னர் ரிசர்வ் வங்கியின் அருங்காட்சியகமான மும்பையில் இருக்கும் RBI Monetary Museum என்பதற்கு வழங்கப்பட்டன.

இந்தியாவின் பண்டைய வேதமான ரிக் வேதத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து 1970ல் அதனை மொழிபெயர்த்து முடித்தார் ஜம்புநாதன். அதனை நூலாக்கும் பணியில் ஈடுபட்டார். 1974ல், தாம் தோற்றுவித்த பள்ளியின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் டிசம்பர் 18, 1974ல் தமது 78ம் வயதில் காலமானார். ரிக்வேதம் பற்றிய அவரது தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் தொகுதி, 1978ல் பாபா அணு ஆய்வு நிறுவன இயக்குநரான ராஜா ராமண்ணா அவர்களால் மும்பையில் வெளியிடப்பட்டது. இரண்டாவது பகுதியை அப்போது ரிசர்வ பாங்க் கவர்னராக இருந்த ஐ.ஜி. படேல் 1980ல் வெளியிட்டார்.

'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்' என்ற பாரதிதாசனின் கனவை நனவாக்கும் வகையில், வேதங்களை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ம.ரா. ஜம்புநாதன், தமிழர்கள் மறக்கக்கூடாத மாமனிதர்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com