முதுகுவலி
'தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்' என்று சொல்வார்கள். நம்மருகே இருப்பவர்களுக்கு முதுகுவலி வந்தாலே அதன் வேதனை நமக்குப் புரிந்துவிடும். பல சாதாரண காரணங்களாலும், சில

அசாதாரண காரணங்களாலும் முதுகுவலி ஏற்படும். அவற்றைப் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

முதுகுத் தண்டு
கழுத்தில் தொடங்கி அடிப்புறம் வரை அமைந்திருக்கும் முதுகுத் தண்டு வளைவும் நெளிவும் கொண்டது. இதில் கழுத்தில் ஒரு வளைவும், கீழ்முதுகில் ஒரு வளைவும் இருக்கும். இந்த வளைவு சிலருக்குச் சற்றுக்

கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அப்படி இருந்தால் முதுகுவலி வரும் வாய்ப்பு அதிகமாகலாம். தண்டுவடச் சாய்வு (Scoliosis) என்று சொல்லப்படுவது பலருக்குப் பல அளவுகளில் இருக்கலாம்.

முதுகில் எலும்புகள், முதுகுத் தண்டு, ஜவ்வு, நரம்புகள், தசைகள், தசைநார்கள் என்று பல அம்சங்கள் உள்ளன. இதில் ஒன்றோடு ஒன்று பின்னி, வலியை அதிகமாக்கவும், குறைக்கவும் செய்யலாம்.

முதுகுவலி வகைகள்
தசை இசிவு (Muscle spasm): பெரும்பாலும் முதுகுவலி தசைப்பிடிப்பினால் ஏற்படுகிறது. குனிந்து நிமிரும்போது சரியாக முதுகை உபயோகிக்காத காரணத்தால் தசைப்பிடிப்பு எற்படலாம். சிலருக்கு

கனமான சாமான்களைத் தூக்கும்போது ஏற்படலாம். இன்னும் சிலருக்கு உடற்பயிற்சியின்போது அளவுக்கு அதிகமான எடை தூக்குவதால் ஏற்படலாம். தசைப்பிடிப்பு திடுமென்று ஏற்பட்டு, மூன்று முதல் ஏழு

நாட்கள்வரை உபாதை தரலாம். இது தீவிரம் அதிகமாகி, உட்கார முடியாமல், குனிய முடியமால் சிரமம் தரலாம். நடக்க, நடக்க தசைப்பிடிப்பு தளரும் வாய்ப்பு அதிகம்.

மூட்டு அழற்சி (Arthritis): முதுகெலும்பில் தேய்மானம் ஏற்பட்டு அதனாலும் வலி உண்டாகலாம். இது பெரும்பாலும் 60 வயது தாண்டியவர்களைத் தாக்கும். எப்போதும் முணுமுணு என்று வலி

இருக்கும். தினம் செய்யும் தொழில்முறையினால் தேய்மானம் ஏற்பட வாய்ப்புண்டு. நாம் நாற்காலியில் அமர்வது முதல், நடப்பது, நிற்பது, குனிவது, நிமிர்வது, எடை தூக்குவது என்று எல்லாமே நமது முதுகுக்கு

வேலை தருவனதாம்.

முதுகுத்தண்டின் வட்டுகளுக்கிடையே உள்ள ஜவ்வு வீங்கலாம் அல்லது இறங்கிவிடலாம் (Disc bulge or herniation). இது வலி இல்லாதபோதும் தற்செயலாகக் கண்டு பிடிக்கப்படலாம். இதனால் சிலருக்கு

மிகுந்த வேதனை ஏற்படும். நரம்புகள் அமுக்கப்பட்டு, நமைச்சல், எரிச்சல், மரத்துப் போதல் ஏற்படலாம். கழுத்துப் பகுதியில் ஏற்பட்டால் கைகளும், கீழ்முதுகு என்றால் கால்களும் பாதிக்கப்படும். இதை

நரம்பியக்கத் தடை (Neuropathy, Radiculopathy) என்று சொல்வதுண்டு. கீழ்முதுகில் பாதிப்பு இருந்தால், அதை இடுப்புக்கால் வலி (Sciatica) என்று சொல்வதுண்டு.

தண்டுவடம் சுருங்குதல் (Spinal stenosis): தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி குறைந்து அவை ஒன்றோடு ஒன்று உரசுவதால் இந்த வகை வலி ஏற்படும். இதனாலும்

நரம்புகள் பாதிக்கப்படலாம். முதுகை வளைத்தால் வலி குறையலாம். உதாரணமாக சரிவில் மேலே அல்லது மாடிப்படியில் ஏறும்போது வலி குறைவாகவும், இறங்கும்போது வலி அதிகமாகவும் இருக்கும்.

முக்கிய அறிகுறிகள்:
* சிறுநீர், மலம் கழிப்பது தடைப்படுதல் அல்லது தன்னிச்சையாக நிகழ்தல்
* காய்ச்சலுடன் முதுகுவலி
* கை, கால் செயல் இழப்பு.
* கீழே விழுந்ததால் அல்லது பலத்த அடிபட்டதால் ஏற்படும் முதுகுவலி.
* உடல் எடை குறைதல்

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் 24 மணி நேரத்துக்குள் மருத்துவ உதவியை நாடவேண்டும்.

தீர்வு
பெரும்பாலும் முதுகுவலி மேற்கூறிய அபாய அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும். வலி அதிகமாக இருந்தால் ஓய்வு எடுக்கலாம். ஆனால் கூடுமானவரை நடந்து கொண்டு இருப்பது நல்லது. ஓய்வு அதிகமானால் தசைகள்

இறுகிவிடும். வெப்ப ஒத்தடம், பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். வலி மாத்திரைகள், பயிற்சிகள் தேவைப்படும். அடிக்கடி வலி வருவோருக்கு உடலியக்க மருத்துவம் (Physical Therapy) தேவைப்படும்.

சிலருக்கு மருத்துவர் சீட்டில் பெறப்படும் வலி மாத்திரைகள் அவசியமாகலாம். இன்னும் சிலருக்கு தசைகள் இளகவும், நரம்புகளை ஊக்குவிக்கவும் மருந்துகள் தேவைப்படலாம். எளிதில் குணம் இல்லாத போதும்,

இதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினமும் பயிற்சிகள் செய்வது நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.

www.mayoclinic.com என்ற வலையகத்தில் தினமும் செய்யவேண்டிய 15

நிமிடப் பயிற்சி முறைகள் உள்ளன. எந்தப் பயிற்சி கடினமோ அதைத் தவிர்த்து, மற்ற பயிற்சிகளைச் செய்யவேண்டும். மெல்ல, மெல்ல கடினமான பயிற்சியையும் எளிதாகச் செய்யமுடியும். ஆனால் தினமும்

செய்யவேண்டும். மருந்துகளால் நிவாரணம் ஏற்படாதபோது முதுகுத்தண்டில் ஊசி போடுவதுண்டு. அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் ஒரு சிலருக்கு அது தவிர்க்க முடியாததாகலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com