அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு ஒரே பெண். நான் டீச்சராக இருந்து ரிடையர் ஆனவள். கணவர் போய் 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் கூட ஆகவில்லை. இங்கே எம்.எஸ். படிக்க வந்து விட்டாள். அப்புறம் இங்கேயே எவனையோ பார்த்து லவ் பண்ணியிருக்கிறாள். நான் அப்போதே முட்டிக் கொண்டேன் வேண்டாம் என்று. கேட்கவில்லை. பார்ப்பதற்கு நன்றாக இருந்தான். மீதி எல்லா விஷயங்களிலும் அவளைவிட ஒருபடி குறைவுதான். பின்னால் complex வரும் என்று சொல்லிப் பார்த்தேன், கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அவன் அப்பா, அம்மா தெற்கில் ஒரு கிராமத்தில் இருந்தார்கள் - அவர்களைப் போய்ப் பார்த்தேன். அவர்கள் ஏதோ உச்சாணிக் கொம்பில் இருந்தார்கள். இந்தக் காலத்தில் யார் வரதட்சணை, நகை, சீர் என்று கேட்கிறார்கள்? அவர்கள் பேரம் பேசிக் கேட்டார்கள். அதுவே எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல vibration இல்லாமல்தான் அந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தேன். எப்படியாவது இவனைப் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற வெறி என் பெண்ணை எல்லா விஷயங்களிலும் சமரசம் செய்ய வைத்தது.
அப்புறம்தான் அவள் விழித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அவன் இன்னும் படித்துக் கொண்டிருந்தான். இவள் வேலை கிடைத்து, நல்ல நிலையில் இருந்தாள். குடும்பச் செலவு கொண்டது போக, மீதிப் பணத்தை அவன் குடும்பத்துக்கே அவள் செலவு செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். அக்கா பெண்ணிற்கு, அண்ணன் பெண் வயதுக்கு வந்து விட்டது, பாத்ரூம் கட்ட வேண்டும், பம்ப் செட் போட வேண்டும் என்று மாதம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு. பண விஷயத்தால் நிறைய பிரச்சனைகள் ஆரம்பித்து, அவன் தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறான். நான்தான் முதலிலிருந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேனே! என்னிடம் எதுவும் சொல்லவில்லை. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவளை இரண்டு வருடமாகப் பார்க்கவில்லையே என்று ஆசையாகக் கிளம்பி வந்தேன்.
ஆரம்பகாலம் முதலே அவன் என்னிடம் விட்டேத்தியாகத் தான் இருந்தான். ஆனால், அவர்களுக்குள் இருந்த டென்ஷன் எனக்குப் புரிபடக் கொஞ்சநாள் ஆனது. அப்புறம்தான் அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் எப்படி கத்துகிறான், சண்டை போடுகிறான் என்று என்னிடம் நடந்த விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். எனக்கு மனது கொதித்தது. என் பெண் சொல்லியும் கேட்காமல், அவனிடம் நான் என் கோபத்தை வார்த்தையில் கொட்டித் தீர்த்தேன். மனது அடங்கியது. ஆனால் விஷயம் முற்றி, அவன் அப்பா, அம்மா என்னிடம் ஃபோனில் சண்டை போட, எல்லாம் முடிந்து போய்விட்டது. விவாகரத்தும் ஆகிவிட்டது. சூறாவளி அடித்து ஓய்ந்துவிட்டது.
நான் போன வருடம் வந்தபோது இவளுக்கு வேறு நல்ல வாழ்க்கை அமையுமா என்று ஏங்கினேன். என் பெண்ணும் இரண்டு வருடம் இருந்த கசப்பையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, மீண்டும் புது வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு நல்ல பையன் - அவனும் 'Divorcee'தான். ஆனால், அவன் சொன்ன காரணங்கள் நம்பும்படியாக இருந்தன. என் பெண்ணும் அவனும் பழக ஆரம்பித்தார்கள். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்ற சந்தோஷத்தில், நான், இங்கேயே எளிமையாகத் திருமணம் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் வந்தேன்.
ஆனால், போன வாரம் என் மகள் மிகவும் அழுகையுடனும் கோபத்துடனும் வீட்டுக்கு வந்தாள். பழைய கணவன், இவளுடைய புது சிநேகிதத்தை எப்படியோ தெரிந்துகொண்டு, இல்லாததும், பொல்லாததும் இந்தப் பையனுக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறான். ஒரு தடவை அவளுடைய வாழ்க்கையை நாசமாக்கியது போதாதா, மறுபடியும் இவன் ஏன் அவள் வழியில் வந்து சித்ரவதை செய்கிறான் என்று தெரியவில்லை. இந்தப் பையன் இ-மெயில் விஷயம் உண்மையா என்று என் பெண்ணிடம் கேட்டதற்கு, என் பெண் ரோஷத்தில், “நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த உறவே வேண்டாம்” என்று பேசிவிட்டு, அவன் கூப்பிட்டாலும் பதில் சொல்லாமல் அழுது கொண்டிருக்கிறாள். ஏன் இந்த விதி அவளுக்கு? ஒரே பெண். எவ்வளவு ஆசையாக வளர்த்தேன்! அந்தக் கேடு கெட்டவனை என்ன சொல்லி யார் திருத்த முடியும்? உங்களால் முடிந்தால், மீதி விவரம் எழுதுகிறேன்.
இப்படிக்கு ...................
அன்புள்ள சிநேகிதியே
உங்கள் கடிதத்தில் நிறையப் புரிபடாதவை உள்ளன. கருத்து வேற்றுமை எந்த உறவிலும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை எப்படிச் சண்டையில்/சச்சரவில் வெளிப்படுத்தினார்கள் என்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. யார் முதலில் இந்தத் திருமணத்தை ரத்து செய்ய முனைந்தார்கள் என்றும் தெரியவில்லை. விவாகரத்தின் முடிவில் எந்த அளவுக்கு வெறுப்பு, காழ்ப்பு, கசப்பு இருவரின் ஆழ்மனதில் இருந்தது என்றும் புரிந்துகொள்ள முடியாது.
பழைய கணவனுக்குக் காழ்ப்பு உணர்ச்சி அதிகமாக இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. சிலர் நடந்த சம்பவங்கள், உரையாடல்கள், பேசிய பேச்சுக்கள் எல்லாவற்றையும் அப்படியே எழுதுவார்கள். அதை வைத்துக்கொண்டு நான் சிலவற்றை அனுமானித்து, என் கருத்துக்களைப் பொதுவாகத் தெரிவிப்பேன். ஒரு தாயாய் நீங்கள் அனுபவிக்கும் வேதனையை, வாழ்க்கையில் நல்ல துணை கிடைக்காமல் உங்கள் பெண்ணுக்கு உண்டாகும் உணர்ச்சிகளை என்னால் உணர முடிகிறது.
மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - ஒன்று பயம்; இல்லை, பாசம். மனித நேயத்தை விரும்புபவர்கள் காழ்ப்பு உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். வளர்த்துக் கொண்டவர்களுக்கு பயமும் இல்லை, பாசமும் இல்லை என்றால் அவர்களை அறிந்தவர்கள் அவர்களது செய்கையை உதறித் தள்ளவேண்டும். அந்த வகையில் உங்கள் பெண்ணின் புதிய நண்பர் இருந்தால், இங்கே பிரச்சனை அதிகம் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் பெண் எந்த அளவுக்கு தன்னுடைய பழைய வாழ்க்கை ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைப் பொறுத்துத்தான், இந்தப் புதிய உறவின் நீடிப்பு இருக்கும். உறவுக்கு நிறையப் பரிமாணங்கள் உண்டு.
உங்கள் பெண்ணின் புதிய வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள்
அன்புடன் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |