அழகு ராணி: அனுஷா வெங்கட்ராமன்
2013ம் ஆண்டிற்கான மிஸ் தென்னிந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அனுஷா வெங்கட்ராமன் (22). இவர் சென்னையைச் சேர்ந்தவர். பரதநாட்டியக் கலைஞர், மாடலும் கூட. கேரளத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், கர்நாடகம் எனத் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பல அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 16 பேர் தேர்வு பெற்றனர். இறுதிச் சுற்றின் ஆறுபேர்களில் மிஸ் தென்னிந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அனுஷா.

Click Here Enlarge"டெல்லியில் மாணவியின் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தூக்கில் போடலாமா?" என்பதுதான் நடுவர்களின் கேள்வி. மற்ற ஐந்து பேரும் கட்டாயம் தூக்கில் போட வேண்டும் என்று பதிலளிக்க, அனுஷா மட்டும், "அவர்களைத் தூக்கில் போடுவது ஒரு விதத்தில் வலியிலிருந்து தப்பிப்பது போலத்தான். உடனடி மரணம் அடைந்து விடுவார்கள். அது கூடாது. அவர்களை வாழச்செய்து மிகக் கொடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அந்த தண்டனை அதைப் போன்ற தவறு செய்பவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும்" என்றார். வென்றார்.

ஆறு வயதிலிருந்து பரதம் கற்று வருகிறார் அனுஷா. தந்தை வெங்கட்ராமன். தாய் மீனா. இளங்கலை (வரலாறு) படித்துள்ள அனுஷா பல விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்தியா மற்றும் உலக அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டதுண்டு. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் நேரடியாக மிஸ் இந்தியா 2013ல் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றிருக்கிறார் அனுஷா. சக போட்டியாளரான தமிழகத்தைச் சேர்ந்த ஹரிணி, மிஸ் ஃபோட்டோஜெனிக் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரம்பரியமான உடைகள் அணிவதற்கு முக்கியத்துவம் கொடுத்தே இந்தப் போட்டி நடைபெற்றிருக்கிறது. பிற அழகிப் போட்டிகளில் நடைபெறும் 'பிகினி ரவுண்ட்' போன்றவை இந்தப் போட்டியில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பா.சு. ரமணன்

© TamilOnline.com