கிரிக்கெட் ராணி: திருஷ் காமினி
NDTV இவரை 'இந்தியாவின் பெண் ஜெயசூர்யா' என்று வர்ணித்தது. ஆண்கள் கிரிக்கெட் அளவுக்குப் பெண்கள் கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெறாத போதிலும் அதுபற்றிக் கவலைப்படாமல் அடித்து ஆடிச் சாதனை செய்து வருகிறார் 22 வயதே ஆன திருஷ் காமினி. சமீபத்தில் மும்பையில் நடந்த பெண்கள் உலகக் கோப்பைக் கிரிகெட்டில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகச் சதம் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை மிதாலிராஜ் 91 ரன்கள் எடுத்ததுதான் உலக சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் காமினி. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 146 பந்துகளில் 100 ரன் பெற்று இந்திய அணி வெற்றிபெறக் காரணமான இவர், சென்னையில் பிறந்தவர்.

சிறுவயதிலிருந்தே காமினிக்குக் கிரிக்கெட்டில் ஆர்வம். ஆரம்பத்தில் தந்தையுடன் விளையாடியவர், ஒன்பதாம் வயதில் தகுந்த பயிற்சியோடு விளையாடத் துவங்கினார். பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். பதினாறாம் வயதில் ஜெய்ப்பூரில் நடந்த, ஆசியக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 19 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டைக் கைப்பற்றித் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இத்தொடரில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடரின் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் வந்தன பல போட்டிகள்; பல வெற்றிகள்.

இடது கை ஆட்டக்காரரான காமினி, லெக் ஸ்பின் பந்தும் வீசும் ஆல்-ரவுண்டர். சென்னை வைஷ்ணவக் கல்லூரி மாணவி. இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 382 ரன்கள் எடுத்துள்ளார். பி.சி.சி.ஐ. சார்பில் வழங்கப்படும் சிறந்த ஜூனியர் வீராங்கனை (2007-08), சிறந்த சீனியர் வீராங்கனை (2009-10) விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான எம்.ஏ. சிதம்பரம் ட்ராஃபியும் இவர் கைவசம்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com