பதின்மூன்று வயது தீபப்ரகாசினி கோவிந்தசாமி, 'The Cryptic Portal' என்ற பெயர் கொண்ட தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவின் சான் ஹோசேயில் வசிக்கும் அவர் மில்லர் நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். 'இளம் எழுத்தாளர்' பட்டறை ஒன்றில் பங்கேற்று அவர் எழுதிய இந்த நாவலைப் பதிப்புக் காணத்தகுந்தது என்பதாக ஆசிரியர் கூறினர். Createspace என்ற தனியார் ஆன்லைன் பதிப்பகம் இதனை மெருகேற்றி வெளியிட்டதோடு, Amazon வழியே விற்பனைக்கும் கொண்டுவந்தது. அச்சு நூலாகவும் மின்னூலாகவும் வாசிக்க அமேசான் வழி செய்கிறது.
இந்தக் கதை அதிசயங்கள் நிரம்பியது, சுவையானது. ஒரு ஜிம்முக்கு வெளியே இரண்டு சிறுமிகள் முன்பு பார்த்திராத ஒரு குகைவாசலைக் காண்கிறார்கள். அதற்குள் நுழைந்து போகும்போது அவர்கள் கற்பனைகூடச் செய்ய முடியாத பல நபர்கள், சம்பவங்கள் ஆகியவற்றைச் சந்திக்கிறார்கள். இந்த அதிசயப் பயணம் அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நாவல் சுவையாக விவரிக்கிறது.
ஒரு மாத காலத்தில் எழுதிய இந்த நூறு பக்க நாவலைச் செப்பனிட அவர் இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டார். தன் எழுத்துத் திறனை இன்னும் ஆர்வத்தோடு கூர் தீட்டி வருகிறார் தீபப்ரகாசினி. வரும் கோடை விடுமுறையில் இன்னும் நிறைய எழுதும் ஆர்வத்தோடு இருக்கிறார். "வாசிப்பதும், கதை கேட்பதும் என் சொல்வளத்தை அதிகரிப்பதுடன் கற்பனையைத் தூண்டி விடுகின்றன. வாசகர்கள் கூறும் கருத்துகளை ஏற்று என் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் தீபப்ரகாசினி.
தகவல்: வடிவேல் ஏழுமலை , சான் ஹோசே |