ஜனவரி 20, 2013 அன்று கேரலைனா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை கேரி ஆர்ட்ஸ் செண்டரில் கொண்டாடியது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்கத் துணைத் தலைவர் பாரதி பாண்டியும், துணைச் செயலர் மோகன் வைரகண்ணும் தொகுத்து வழங்கினர். தலைவி அல்லி தாஸ் வரவேற்றுப் பேசினார். தணி சேரன் பொங்கலைப் பற்றியும், சங்கத்தின் வரலாற்றையும் எடுத்துக் கூறினார். பேரவைத் தலைவர் தண்டபாணி குப்புசாமி, 2013 ஃபெட்னா விழாவிற்கு அனைவரையும் வருமாறு அழைத்தார்.
சிறுவர், சிறுமியர் இசை, பாட்டு, நடனம், நாடகம் என்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பெரியவர்களும் ஆடல், பாடல் என போட்டிப் போட்டுக் கொண்டு வழங்கினர். குழந்தைகள் இசைக் கருவிகளை மீட்டிப் பாடியதும், மனோகரா, கட்டபொம்மன் படங்களில் இருந்து வீர வசனங்களைப் பேசியதும் மிகுந்த பாராட்டைப் பெற்றன. தமிழனின் இன்றைய நிலைமையை நகைச்சுவையாக எடுத்து காட்டிய நவீன நாடகமும், தமிழே உயிரே வணக்கம் என்ற பரதநாட்டியமும் சிறப்பாக அமைந்தன.
சிகரமாக, உழவர் திருநாள் கதம்ப நிகழ்ச்சிகளில் கும்மி, ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம் போன்றவற்றையும், தமிழர் விளையாட்டுகளான கபடி, ஜல்லிக்கட்டு, ஆகியவற்றையும் ஆடிக் காட்டினார்கள். செயலர் சாருலதா குருபரனின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.
சாருலதா குருபரன், ராலே, வடகேரலைனா |