ஜனவரி 26, 2013 அன்று ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லில் பொங்கல் திருநாள், தமிழ் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. ஜாக்சன்வில் நகர மேயர் ஆல்வின் பிரவுன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். தமிழ்த் தாய் வாழ்த்து, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களுடன் விழா தொடங்கியது. செயற்குழுத் தலைவர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். மேயர் தமது தலைமையுரையில் தமிழ், இந்திய கலாசாரமும் பண்பாடும் தம்மை வெகுவாகக் கவர்வதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பாட்டம் விழாவுக்கு மெருகூட்டியது. சிலம்பாட்ட குரு சந்திரசேகர் தமது தந்தையாரிடமிருந்து கற்றுக்கொண்டதை, மன்றத்தின் இளையதலைமுறை உறுப்பினர்களுக்கு கற்றுத்தந்து இந்த நிகழ்ச்சியை வழங்கியது அற்புதம். இந்த அருங்கலை இப்போது ஒரு பெருங்குழுவாக வளர்ந்து, ஜாக்சன்வில் இந்திய மன்றம்வரை சென்று பெரிய வரவேற்பைப் பெற்றதில் நமக்கு மிகப்பெருமை. இதில் பங்கேற்றவர்கள்: சந்திரசேகர் குருஜி, செந்தில் குமார் (தலைவர்), பாஸ்கி சுப்புரத்தினம், அருண்பிரகாஷ் ராமலிங்கம், ரேகின் ரவீந்திரன், விஜய் குரு, பாலா ஜெயராஜ், குமரேசன், பி.கே. ஞானம், சுப்ரமணியன், சிவகுமார்.
சிறுவர் சிறுமியரின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் மகிழ்வித்தன. பெண்களின் ஒயிலான ஆட்டமும், கோலம், கவிதை போட்டிகளும் விழாவிற்கு சிறப்புச் சேர்த்தன. லாவண்யா மற்றும் ரமேஷ்பாபுவின் நன்றியுரையுடன் கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. மன்றச் செயற்குழு உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் இணைந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பட்ரீஷியா சந்திரசேகர், ஜாக்சன்வில், ஃப்ளோரிடா |