ஜனவரி 26, 2013 அன்று, கான்கார்ட் சிவ-முருகன் ஆலய நிதி திரட்டுவதற்காக, பாலோ ஆல்டோவின் கபர்லி தியேட்டரில் மாளவிகா ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 'வாரண முகவா' (ஹம்ஸத்வனி) பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்ருதி சுத்தமாகப் பாடினார் மாளவிகா. தொடர்ந்த பைரவி ராக ஆலாபனை கன கச்சிதம். 'லலிதே ஸ்ரீ' எனும் சியாமா சாஸ்திரி கீர்த்தனையை மிக உருக்கமாகப் பாடினார். அடுத்துப் பாடிய கௌரி மனோஹரி, பூர்வி கல்யாணியில் 'மீனாக்ஷி மே முதம் தேஹி' ஆகியவற்றைச் சிறப்பாகப் பாடினார். 'விழிக்குத் துணை' எனும் கந்தரலங்காரச் செய்யுளை மூன்று ராகங்களில் விருத்தமாகப் பாடி 'செந்திலாண்டவன்' என்னும் பாபநாசன் சிவன் கீர்த்தனையைப் பாடியது சிறப்பு. கரகரப்ரியா ராக ஆலாபனை வெகு சுகம். வயலின் பக்கவாத்தியம் அருமை. 'மணியே மணியின் ஒளியே' எனும் அபிராமி அந்தாதிப் பாடலை பேஹாக், பாகேஸ்ரீ, மதுவந்தி என மூன்று ராகங்களில் பாடியது சிறப்பு. 2012ல் வளைகுடாப் பகுதியில் தனது குரு பாம்பே ஜெயஸ்ரீ, கச்சேரியில் இப்பாடலைப் பாடியபோது ஏற்பட்ட ஆர்வத்தினால் இவரும் இதைப் பாடக் கற்று, நிகழ்ச்சியில் பாடி அசத்தினார். தனி ஆவர்த்தனம் வாசித்த விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்) பாராட்டைப் பெற்றார்.
அன்று இந்தியக் குடியரசு தினம் மற்றும் தைப்பூசம் என்பதால் முருகன் பாடல்கள், காவடிச் சிந்து, கண்ணே கண்மணியே, மகாராஜபுரம் சந்தானம் இயற்றிய முருகன் தில்லானா எனப் பாடி, இறுதியில் 'வந்தே மாதரம்' என்ற தேசபக்திப் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
சீதா துரைராஜ், பாலோ ஆல்டோ, கலிஃபோர்னியா |