NETS: பொங்கல் விழா
ஃபிப்ரவரி 2, 2013 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் பொங்கல் விழாவை லிட்டில்டன் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. புதுப் பொங்கல் பானையில் பொங்கலுடன், கலைமங்கை தமிழ்ப் பள்ளியின் மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது விழா. பின்னர் வந்த பாரதியார் பாடல், திருப்புகழ் மற்றும் திரையிசைப் பாடல்கள் செவிக்கு விருந்தளித்தன. பின்னர் வந்த நடனங்களும் கண்ணுக்கு விருந்துதான். குறிப்பாக, அரேபியாவின் இஸ்தான்புல் நடனம் மிக அருமை. தேசப்பற்று ஒளிரும் திரையிசைப் பாடல்களை சிறார் பாடியது இனிமை.

சிஷு பாரதி மாணவர்கள் மூலம், 'தேரோட்டம்' என்ற தலைப்பில் அழிந்து வரும் நாட்டுப் புற நடன கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை அமைத்திருந்தார் உமா நெல்லையப்பன். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேரை மழலையர் சஹானாவும், லக்ஷ்யாவும் நடனமாடி வரவேற்றனர். மற்றொரு தளிர் நவீன், மணியடித்து தீபம் காட்ட, பலத்த கரவொலியோடு மேடைக்கு வந்தது தேர். சஞ்சனா, தாரா, ஜனனி, மாளவிகா, சுகேத் ராம் நாடக வடிவில் தேரோட்டம் மற்றும் நாட்டுப்புற நடனக் கலைகளைப் பற்றி விளக்கினார்கள்.

சஞ்சனா சங்கர், சாய் லாவண்யா, அமியா, சாய் தர்ஷினி ஆகியோர் கந்த சஷ்டி நன்னாளான அன்று பக்தியுடன் காவடி ஆட்டம் ஆடினர். தொடர்ந்து அஸ்மிதா, ஸ்வேதா, அக்ஷயா, ஸ்ரேயா, ஜியா, சுகேத் ராம் ஆகியோர் ஒயிலாட்டம் ஆடினர். கேசவும் சூர்யாவும் சீற்றதோடு ஆடிய புலியாட்டம் கரவொலி எழுப்பச் செய்தது. தொடர்ந்து, ஹரிணி, ஹம்சா ஆடிய கரகாட்டம் களிப்படையச் செய்தது.

யோகத்தின் பயனை உணர்த்தும் 'தெருக்கூத்து' குறுநாடகம், குழந்தைகளிடம் வன்முறை கூடாது என்று சொல்லும் 'எங்களையும் வாழவிடுங்கள்' குறுநாடகம், 'கால்சென்டர் கலாட்டா' நகைச்சுவைக் குறுநாடகம் எல்லாமே அமர்க்களம். நெட்சின் வருடாந்திர அறிவிப்பைத் தலைவர் ரமேஷ் வெங்கட் வழங்கினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர் பமிலா வெங்கட் மற்றும் பூங்குன்றன். சென்னகேசவன் நன்றியுரை நல்க விழா முடிவடைந்தது.

பமிலா வெங்கட்,
ஆனந்தி ராஜாமாரிச்சாமி, மாசசூஸட்ஸ்

© TamilOnline.com