டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்திய திருக்குறள் போட்டியில் 13 வயது சீதா 320 குறள்கள் ஒப்பித்து முதல் பரிசு பெற்றார். பெரியவர்களுக்கான போட்டியில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் கதை, திரைக்கதை, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் மகள் கீதா 500 குறள்களை முழு விளக்கத்துடன் கூறி சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில், 2 வயது முதல் 16 வயதுவரையான அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்த 200 தமிழ்க் குழந்தைகள் பங்கேற்றனர். இரண்டு வயதுச் சிறுமி இரண்டு திருக்குறள் சொல்லி அனைவரையும் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.
4 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 60 குறள்கள் ஒப்பித்த அபிராமி முதல் பரிசு பெற்றார். சஹானா, இலக்கியன், ப்ராணேஷ் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசு பெற்றார்கள். 5 - 7 வயதுக்குட்பட்ட பிரிவில் விதுலா முதல் பரிசு வென்றார். ஷ்ராவன், அஜய், சன்மதி ஆகியோர் இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசு வென்றார்கள். 8 - 11 வயதிற்கான இரண்டாம் நிலையின் முதல் பரிசு அனுஸ்ரீக்கு கிடைத்தது. மிதுன், நந்தினி மற்றும் கிறிஸ்டோபர் இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசை வென்றனர். 12 - 15 வயதுகுட்பட்ட பிரிவில் வர்ஷினி, தர்ஷினி இரட்டையர் சகோதரிகளுக்கு இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ப்ரணவுக்குச் சிறப்புப் பரிசும் கிடைத்தன. 320 குறள்களைத் தெள்ளிய தமிழில், சொந்தமாக எளிய வார்த்தைகளில் விளக்கிய சீதா முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 16 முதல் 25 வயதினருக்கான பிரிவில் செஞ்சுரா முதல் பரிசு வென்றார். 26 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஒன்பது பேர் கலந்து கொண்டனர். பழனிசாமி, லதா மற்றும் ஜெய்சங்கர் இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசுகளை வென்றனர். தொடர்ச்சியாக, மூன்றரை மணி நேரம் 500 திருக்குறள்களை, விளக்கத்துடன் கூறிய கீதா முதல் பரிசை வென்றார். சென்ற ஆண்டு இவருடைய மகளும், பஞ்சு அருணாசலத்தின் பேத்தியும், கவியரசு கண்ணதாசனின் கொள்ளுப் பேத்தியுமான நிவேதா 200 குறள்களுடன் முதல் பரிசை வென்றார். இந்த ஆண்டு தாய் களத்தில் இறங்கி வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.
முன்னதாக திருக்குறள் போட்டியின் ஒரு பகுதியாக, திருக்குறள் பேச்சுப்போட்டி டாலஸில் நடைபெற்றது. முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். 320 குறள்கள் சொன்ன சீதா, பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசை வென்றார். இரண்டாம் நிலையில் நந்தினியும் முதல் நிலையில் ஸ்ரேயாவும் பேச்சுப்போட்டியில் வென்றனர். காவ்யா, விதுலா, நித்யா இரண்டாம் பரிசுகளையும், ஷன்மதி, அனுஸ்ரீ, சிவாத்மிகா, அர்ஜுன் மூன்றாம் பரிசுகளையும், நவ்யா, வர்ஷினி சிறப்புப் பரிசுகளையும் பெற்றார்கள்.
'தமிழ் இனி' மணி ராம் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா திருவள்ளுவர் விழாவாகச் சிறப்பு பெற்றது. பாலதத்தா, கொங்கு, வித்யாவிகாஸ், கோப்பல் மற்றும் ப்ளேனோ தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் நாடகங்கள் நடைபெற்றன. தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதோடு, வீட்டிலும் பெற்றோர்கள் குழந்தைகள் தமிழில் பேச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற 'தமிழ் இனி' குறும்படம் திரையிடப்பட்டது. படத்தை நடித்து இயக்கிய மணி ராம், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் “ஐந்து வயதுவரை நன்றாகத் தமிழ் பேசிய என் மகன், பள்ளிக்குச் சென்ற பிறகு பேசுவதை நிறுத்திவிட்டான். நாம் பேசுவது நன்றாகப் புரிந்தாலும், பதில் சொல்லத் தெரிந்தாலும், ஒருவித தயக்கம் ஏற்பட்டதை கவனித்தேன். நானும் எனது மனைவியும், அவன் தமிழில் பேசினால்தான் பதில் சொல்வது என்று முடிவு செய்தோம். பலன் கிட்டியது. அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக, படத்திலும் எனது மகனாக அவனையே நடிக்க வைத்தேன்” என்றார். தயவு செய்து குழந்தைகளுடன் வீட்டில் தமிழில் பேசுங்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
மணி ராம் டல்லாஸ் குழந்தைகளின் தமிழ் ஆர்வம் குறித்துப் பெருமிதம் அடைந்து, அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். 'தமிழைக் காப்போம், எனக்குத் தமிழ் பிடிக்கும், தமிழ் எனது தாய்மொழி, நான் தமிழ் பேசுவேன்' எனப் பல்வேறு விதமாக குழந்தைகள் தமிழில் அவரிடம் பேசி உறுதிமொழி போல் எடுத்துக் கொண்டனர்.
போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வேலு, விசாலாட்சி, வெங்கடேசன், டாக்டர் ராஜ், டாக்டர் தீபா, பழனிசாமி, முத்தையா, ஜெய்சங்கர், பாஸ்கர், லோகேஷ், மகாலட்சுமி உள்ளிட்டோர் தலைமையில் பல்வேறு குழுக்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் செய்தனர். பழனிசாமி வரவேற்புரை ஆற்றினார். விசாலாட்சி நன்றி கூறினார். நிகழ்ச்சியை அன்னபூரணி தொகுத்து வழங்கினார். |