ஃபிப்ரவரி 16, 2013 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், கவிமாமணி முனைவர் அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவற்றை டப்ளின் நகரில் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, முதலில் அமரர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு மௌன அஞ்சலி செலுத்தியது.
முதலில், 'வற்றாத நீரோட்டம்' என்ற தலைப்பில் கவியரங்கம் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் நடந்தது. 'பெண்ணின் கண்ணீர்த்துளி' என்ற தலைப்பில் கந்தசாமி பழனிச்சாமி, 'தியாகியின் ரத்தத்துளி' என்ற தலைப்பில் கண்ணன், 'உழைப்பாளியின் வியர்வைத்துளி' என்ற தலைப்பில் மலர்விழி பழனியப்பன், 'விண்ணின் மழைத்துளி' என்ற தலைப்பில் ரோசரி ஆரோக்கியசாமி, 'எழுத்தாளனின் மைத்துளி' என்ற தலைப்பில் இளங்கோ மெய்யப்பன் ஆகியோர் அருமையான கவிதைகளை வாசித்தனர்.
தொடர்ந்து, 'வாழ்க்கையில் மகிழ்வும், நிறைவும் மணவாழ்வுக்கு முன்பே! பின்பே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. முன்பே என்ற அணியின் சார்பாக, அபு கான் அணித்தலைமையில் வேதா, பத்மனாபன், கோபால் குமரப்பன், திருமுடி ஆகியோர் பேசினர். 'பின்பே' என்ற அணியில் நித்தியவதி சுந்தரேஷ் தலைமையில், சாந்தி புகழ், நாச்சியம்மை, சங்கர், சித்ரா ஆகியோர் பேசினார்கள்.
நடுவர் அப்துல் காதரின் உரையும், நிகழ்ச்சியின் நடுநடுவே நகைச்சுவையோடு அவர் செய்த குறுக்கீடுகளும் சுவையூட்டின. பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்தில் பங்கேற்றவர்களின் நாவன்மையைப் பாராட்டினார். தயா அவர்கள் நன்றி கூற விழா நிறைவுற்றது.
குணா பதக்கம், டப்ளின், கலிஃபோர்னியா |