ஃபிப்ரவரி 17, 2013 அன்று மில்பிடாஸ் நகர சாய் கோவில் அரங்கில் பாட்டும் பரதமும் என்ற இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கியது. சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியை பத்மா மோகன் தொகுத்தளித்தார். வசந்தி வெங்கட்ராமன் கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில் முதல் பகுதியில், தமிழிலக்கியங்களில் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை, மூத்த கர்நாடக சங்கீதக் கலைஞர் அஷோக் சுப்ரமணியன், ஹரி தேவ்நாத் ஆகியோர் இணைந்து பாடினார்கள். அரவிந்த் லஷ்மிகாந்தன் வயலினும், ரமேஷ் ஸ்ரீநிவாசன் மிருதங்கமும் வாசித்தார்கள். ஔவையார், நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன், அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடல்கள் முதல் திருக்குறள், தேவாரம், பெரியபுராணம் ஆகிய பாடல்கள் உட்பட இங்கே இன்புற ஒலித்தன. தமிழின் சாகித்யகர்த்தாக்களைக் குறித்த விரிவான உரையையும் அஷோக் சுப்ரமணியன் வழங்கினார். சிறந்ததொரு தமிழிசை நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது.
தொடர்ந்து, பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை பிரபல நாட்டியக் கலைஞர்களான தீபா மஹாதேவன், ஸ்நிக்தா வெங்கட்ரமணி இருவரும் வழங்கினர். முதலில் நடனமாடிய ஸ்நிக்தா வெங்கட்ரமணி புஷ்பாஞ்சலி, சிவதாண்டவம், பராசக்தி ஜனனி, தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகியவற்றுடன் தில்லானா ஆடினார். அடுத்தது வந்த தீபா மஹாதேவன் ஜெயமூர்த்தி கவிதம், அஷ்டவித நாயகம், காளிங்க மர்த்தனம், திக்குத் தெரியாத காட்டில் ஆகிய பாடல்களுக்கு நடனமாடினர். இறுதியில் வாழிய நற்றமிழ் பாடலை இருவரும் இணைந்து நிகழ்த்தினர். பாரதித் தமிழ்ச் சங்கத்தின் மேடை வாயிலாக இசைப் பயணத்தைத் தொடங்கி, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் விருதைப் பெற்று தமிழ்த் திரைப் படங்களில் பின்னணிப் பாடகியாக வளர்ந்து வரும் பிரகதி குருப்ரசாத் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
திருமலை ராஜன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா |